ரியல் மெட்ரிட்டுக்கு தீர்க்கமான வெற்றி: முக்கிய ப்ரீமியர் லீக் போட்டிகள் சமநிலையில்

84

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (18) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

ரியல் மெட்ரிட் எதிர் செவில்லா

பெர்னபுவில் நடைபெற்ற செவில்லா அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற ரியல் மெட்ரிட் கழகம் லா லிகா புள்ளிப்பட்டியலில் பார்சிலோனா கழகத்தை பின்தள்ளி முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. 

கடைசி நேர தவறுகளால் பலஸ்தீனிடம் தோற்ற இலங்கை

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் 2020……………..

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில் பிரேசில் மத்தியகள வீரரான கசிமிரோ இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்தார். 57 ஆவது நிமிடத்தில் லுகா ஜொவிக் வழங்கிய பந்தை கீழ் இடது மூலையில் இருந்து பெற்று ரியல் மெட்ரிட் சார்பில் கோலாக மாற்றினார் கசிமிரோ. 

எனினும் டி ஜொங் (Luuk de Jong) 64 ஆவது நிமிடத்தில் திருப்பிய பதில் கோலினால் போட்டி மேலும் விறுவிறுப்படைந்தது. இந்நிலையில் 69 ஆவது நிமிடத்தில் லூகாஸ் வெஸ்குவஸ் பரிமாற்றிய பந்தை தாவி தலையால் முட்டிய கசிமிரோ தனது இரண்டாவது கோலை பெற்று ரியல் மெட்ரிட் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் 20 போட்டிகளில் 43 புள்ளிகளை பெற்ற ரியல் மெட்ரிட் கழகம் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டபோதும் 40 புள்ளிகளுடன் இருக்கும் பார்சிலோனா ஞாயிற்றுக்கிழமை (19) க்ரனடா (Granada) அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பார்சிலோனா கழகம் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும்.

வட்போர்ட் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர்

ஸ்பொட் கிக் வாய்ப்பை தவறவிட்ட வட்போர்ட் அணி டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புரு அணிக்கு எதிரான போட்டியை கோலின்றி சமநிலை செய்தது.

இதன் மூலம் ப்ரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் தோல்வியுறாத அணியாக நீடிக்கும் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் புள்ளிப்பட்டியலில் 8 ஆவது இடத்தில் நீடிக்கிறது. 

கோலின்றி நீடித்த இப்போட்டியின் 69 ஆவது நிமிடத்தில் வைத்து கெரார்ட் டிலோபியோ உதைத்த பந்து டொட்டன்ஹாம் பின்கள வீரர் ஜான் வெர்டொகனின் கையில் பட்டதால் பெனால்டி வழங்கப்பட்டது. 

எனினும் அந்த வாய்ப்பைக் கொண்டு வட்போர்ட் அணித்தலைவர் ட்ரோய் டானி உதைத்த ஸ்பொட் கிக்கை டொட்டன்ஹாம் கோல்காப்பாளர் போலோ கசானிகா (Paulo Gazzaniga) அபாரமாகத் தடுத்தார். 

ஆர்சனல் எதிர் செபீல்ட் யுனைடட்

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சனலின் பிரேசில் வீரர் காப்ரியல் மார்டினால்லி (Gabriel Martinelli) தமது திறமையை வெளிப்படுத்தி கோல் ஒன்றை பெற்றபோதும் முன்கள வீரர் ஜோன் ப்ளெக்கின் கோல் மூலம் செபில் யுனைடட் பதில் கோல் திருப்பி போட்டியை சமநிலை செய்தது. 

வில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், இத்தாலி சிரீ A மற்றும்……………

முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் புகாயோ சாகா பரிமாற்றிய பந்தை எதிரணி கோல் கம்பத்திற்கு நெருங்கிய தூரத்தில் இருந்து பெற்ற 18 வயதான மார்டினால்லி கோலாக மாற்றினார். 

எனினும் போட்டி முடியும் தறுவாயில் பிளெக் வலது பக்க மூலையில் இருந்து பெற்ற சிறப்பான கோலினால் செபீல்ட் யுனைடட் போட்டியை சமநிலை செய்ய முடிந்தது.  

மன்செஸ்டர் சிட்டி எதிர் கிறிஸ்டல் பெலஸ்

பெர்னாண்டினோ (Fernandinho) 90 ஆவது நிமிடத்தில் விட்டுக்கொடுத்த ஓன் கோலினால் (Own goal) கிறிஸ்டல் பெலசுக்கு எதிரான போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலை பெற்றது. இதனால் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி மேலும் புள்ளிகளை இழந்த நிலையில் ப்ரீமியர் லீக்கில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் கிண்ணத்தை மேலும் நெருங்கியுள்ளது. 

மன்செஸ்டர் சிட்டி தனது போட்டியை சமநிலை செய்திருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் லிவர்பூல் வென்றால் அந்த அணி 16 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும்.

போட்டியின் முதல் பாதியில் செங்க் டொசுன் (Cenk Tosun) 39 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் கிறிஸ்டல் பெலஸ் வெற்றி எதிர்பார்ப்பை கடைசி நிமிடங்கள் வரை தக்கவைத்துக் கொண்டபோதும் செர்கியோ அகுவேரா கடைசி 10 நிமிடங்களில் இரட்டை கோல் பெற்று மன்செஸ்டர் சிட்டியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தார். 

இந்நிலையில் 90 ஆவது நிமிடத்தில் வில்ரீட் சாஹாவின் பந்தை பெர்னாண்டினோ வெளியே தட்டிவிட முயல அது தவறுதலாக சொந்த வலைக்குள் சென்றது.  

நியூகாசில் எதிர் செல்சி 

ஐசக் ஹைடன் (Isaac Hayden) கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலம் செல்சி அணிக்கு எதிரான போட்டியில் நியூகாசில் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

போட்டி முழுவதும் செல்சி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியபோதும் மேலதிக நேரத்தில் கோனர் கிக் ஒன்றைத் தொடர்ந்து அலன் செயின்ட் மெக்சிமினி வழங்கிய பந்தைக் கொண்டு ஹைடன் கோலாக மாற்றி நியூ காசில் அணியை வெற்றி பெறச் செய்தார். 

செல்சி தொடர்ந்தும் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிப்பதோடு நியூகாசில் 12 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<