அதிர்ச்சியுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் கட்டார்

FIFA World cup 2022

171

கால்பந்து உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடான கட்டார் முதல் அணியாக 2022 உலகக் கிண்ண தொடரில் இருந்து வேளியேற, ஈரான் அணி வேல்ஸை வீழ்த்தியுள்ளது. அதேபோன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற மேலும் இரண்டு போட்டிகள் சமநிலையில் நிறைவுற்றன.

நெதர்லாந்தை சமன் செய்த ஈக்வடோர்

கலீபா சர்வதேச அரங்கில் வெள்ளிக்கிழமை (25) நடந்த போட்டியின் 6ஆவது நிமிடத்திலேயே நெதர்லாந்து கோல் புகுத்தி வலுப்பெற்றது. கொடி கொக்போ பெனால்டிப் பெட்டிக்கு வெளியில் இருந்து மின்னல் வேகத்தில் உதைத்த பந்து எதிரணி கோல் காப்பாளருக்கு பிடிபடாலம் வலைக்குள் சென்றது.

முதல் பாதி ஆட்டம் நெதர்லாந்து பக்கம் இருந்த நிலையில் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே ஈக்வடோர் பதில் கோல் திருப்பியது. நெதர்லாந்து கோல்காப்பளர் அன்ட்ரியஸ் நொப்பர்ட்டின் கைகளில் இருந்து நழுவிய பந்தை இன்னர் வலன்சியா வலைக்குள் செலுத்தினார்.

இந்த முடிவுடன் A குழுவில் நெதர்லாந்து மற்றும் ஈக்வடோர் தலா நான்கு புள்ளிகளை பெற்றிருப்பதோடு செனகல் ஒரு புள்ளி பின்னால் உள்ளது. போட்டியை நடத்தும் கட்டார் புள்ளிகள் பெறாது உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியுள்ளது.

இங்கிலாந்தை கோலின்று சமநிலை செய்தது அமெரிக்கா

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் துடிப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய அமெரிக்கா, போட்டியை கோலின்றி சமநிலை செய்தது. இதனால் இங்கிலாந்து நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கு தொடர்ந்து போராட வேண்டி உள்ளது.

அல் பைத் அரங்கில் இலங்கை நேரப்படி சனிக்கிழமை (26) அதிகாலை நடைபெற்ற போட்டியில் இளம் அமெரிக்க அணி முழு நேரத்திலும் ஆதிக்கம் செலுத்தியது. வேகமாக அடிய அந்த அணி இங்கிலாந்து கோல் பகுதியை அடிக்கடி ஆக்கிரமித்தபோதும் கடைசி வரை கோல் பெற முடியாமல்போனது.

குறிப்பாக முதல்பாதியின்போது கிறிஸ்டியன் புலிசிக் அடித்த பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியது அமெரிக்காவின் துரதிர்ஷ்டமான தருணமாகும்.

தனது முதல் போட்டியில் ஈரானை 6-2 என வீழ்த்திய இங்கிலாந்து, எந்த மாற்றமும் இன்றி அதே அணியுடன் இந்தப் போட்டியில் களமிறங்கியபோதும் அந்த உத்வேகம் இருக்கவில்லை.

இரண்டாவது பாதியில் அந்த அணி கோலை நோக்கி முதல் உதையை 87ஆவது நிமிடத்தில் தான் செலுத்தியது. போட்டி முழுவதம் அந்த அணி மூன்று முறையே எதிரணி இலக்கை தாக்கியது.

இந்த போட்டியை சமன் செய்ததன் மூலம் அமெரிக்க அணி இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் வரும் செவ்வாய்க்கிழமை (29) கடைசி குழுநிலை போட்டியில் ஈரனை வீழ்த்துவது அவசியமாகும்.

மறுபுறம் B குழுவில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து வரும் செவ்வான்று வேல்ஸ் அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு அதில் மூன்று கோல் வித்தியாசத்தில் தோல்வியுறாமல் இருந்தால் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும்.

அதிர்ச்சியுடன் வெளியேறும் கட்டார்

செனகலுக்கு எதிரான போட்டியில் 1 – 3 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போட்டியை நடத்தும் கட்டார் முதல் அணியாக 2022 கால்பந்து உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறும் நிலையை சந்தித்துள்ளது.

கட்டார் இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிகள் இன்றி காணப்படும் நிலையில் அது நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவது முடியாத ஒன்றாக மாறியுள்ளது. மறுபுறம் ஆபிரிக்க சம்பியனான செனகல் இம்முறை உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த முதல் ஆபிரிக்க நாடாக உள்ளது.

அல் துமாமா அரங்கில் A குழுவுக்காக வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற போட்டியில் கட்டாரின் தற்காப்பில் ஏற்பட்ட தவறை பயன்படுத்தி புலாயே டி, செனகலுக்கு முதல் கோலை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து இஸ்மைல் ஜகொப்ஸ் வழங்கிய கோனர் கிக்கை வேகமாக தலையால் முட்டி கோலாக மாற்றினார் பபமரா திதியு.

தொடர்ந்து கட்டார் பதில் கோல் திருப்பியபோதும் போட்டியின் முழு நேரம் முடிவதற்கு ஆறு நிமிடங்கள் இருக்கும்போது செனகல் மூன்றாவது கோலையும் பெற்று வெற்றியை உறுதி செய்தது.

உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் நாடு ஒன்று தொடரின் ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறுவது இது இரண்டாவது முறையாகும். 2010இல் போட்டியை நடத்தும் தென்னாபிரிக்கா ஆரம்ப சுற்றுடன் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

வேல்ஸை வீழ்த்தி வாய்ப்பை தக்கவைத்தது ஈரான்

பத்து வீரர்களுடன் சுருங்கிய வேல்ஸ் அணியை 2–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈரான் அணி உலகக் கிண்ண வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது.

அஹமது பின் அலி அரங்கில் B குழுவுக்காக வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற போட்டியில் முழு நேரம் முடிவில் இரு அணிகளும் கோல்பெறாதபோதும் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் மூன்று நிமிட இடைவெளிக்குள் ஈரான் அடுத்தடுத்து இரண்டு கோல்களை புகுத்தியது.

பதில் வீரராக வந்த சம்ஷி 98ஆவது நிமிடத்தில் அதிரடி கோலை பெற்ற நிலையில் மூன்று மிடங்களின் பின் ரம்சயன் மற்றொரு கோலை புகுத்தினார்.

இதன்போது கட்டார் உலகக் கிண்ணத்தில் சிகப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்ட முதல் வீரராக வேல்ஸ் கோல்காப்பாளர் வைன் ஹன்னசி பதிவானார். 86ஆவது நிமிடத்தில் மெஹ்தி தரமியுடனான மோதலை அடுத்தே அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்த வெற்றியுடன் ஈரான் 3 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதோடு அமெரிக்காவுடனான முதல் போட்டியை சமன் செய்த வேல்ஸ் ஒரு புள்ளியோடு கடைசி இடத்தில் உள்ளது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<