கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் மொஹமட் சரீப்

57
espncricinfo

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சரீப் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மொஹமட் சரீப் கடந்த 2007ம் ஆண்டு இறுதியாக சர்வதேச போட்டிகளில் விளையாடியிருந்தாலும், தொடர்ச்சியாக முதற்தர போட்டிகளில் விளையாடிவந்த நிலையில், ஓய்வுபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களின்றி IPL தொடர் நடைபெற ஆதரவு வழங்கும் பெட் கம்மின்ஸ்

இந்தியாவில் வருடாந்தம் நடைபெறும்…

பங்களாதேஷ் அணியின் திறமையான மித வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் சரீப், முதற்தர போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர், 393 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டில் முதற்தர போட்டிகளில் அறிமுகமான இவர், 2001ம் ஆண்டு 17 வயதாகும் போது, தேசிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகினார். இவர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய அதே ஏப்ரல் மாதத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமகமாகினார்.

எனினும், அவருக்கு ஏற்பட்ட தொடர் உபாதைகள் காரணமாக 2002ம் ஆண்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதுடன், 2003ம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கான குழாத்திலும் இடம்பெறவில்லை.

பின்னர், உபாதையிலிருந்து மீண்டு, சிறப்பாக விளையாடி, தேசிய அணிக்குள் நுழைந்தாலும், 2007ம் ஆண்டு இறுதியாக தேசிய அணிக்காக விளையாடியிருந்தார். தனது ஓய்வு குறித்து கருத்து வெளியிட்ட மொஹமட் சரீப்,

“என்னால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு முதற்தர போட்டிகளில் விளையாட முடியும் என்றபோதும், நான் அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன். அதேநேரம், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் இணைந்து எனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டு, பணிபுரியவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்” என்றார்.

அதேநேரம், மொஹமட் சரீப்பின் இந்த திடீர் முடிவுக்கு காரணம், தொடரச்சியாக அவருக்கு ஏற்பட்டு வரும் தோற்பட்டை உபாதை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 

“எனக்கு ஏற்பட்டு வரும் தோற்பட்டை உபாதைதான் இந்த முடிவினை எடுப்பதற்கு காரணமாக இருந்தது. சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், 50 சதவீதமே என்னால் கொடுக்க முடியும் என சிந்திக்கிறேன். எனவே, நான் கழக அணியிலிருந்து வெளியேற தீர்மானித்தேன்.

காரணம், இந்த நிலைமையுடன் கழகத்தில் இணைந்திருந்தால் அவர்களை ஏமாற்றுவது போன்று ஆகிவிடும். எனது கழகத்தை ஏமாற்ற எண்ணமில்லை. என் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் என்னை அணியில் இணைத்துள்ள நிலையில், என்னால் நூறு சதவீதத்தை கொடுக்க முடியாது என்றால் நான் விளையாடுவதில் அர்த்தமில்லை.

அத்துடன், எனது இடத்துக்கு மற்றுமொரு இளம் வீரரை இணைக்க முடியும். எனவே, நான் ஒரு வீரரின் இடத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால் ஓய்வுபெறுகிறேன்” என மேலும் சுட்டிக்காட்டினார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<