நீளம் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற கமல் ராஜ் மற்றும் ஜெனுஷன்

152

அகில இலங்கை மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் கொழும்பைச் சேர்ந்த கமல் ராஜ் மற்றும் மன்னாரைச் சேர்ந்த ஜெனுஷன் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளின் மூன்றாம் நாளான நேற்று (01) மேலும் 13 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. 

கோலூன்றிப் பாய்தலில் அருணோதயாவின் திஷாந்துக்கு தங்கம்: மகாஜனாவின் சுவர்ணாவுக்கு முதல் பதக்கம்

35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள்……

இதன்படி, போட்டிகளின் முதல் நாளன்று 4 சாதனைகளும், இரண்டாம் நாளன்று 11 புதிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டு ஒட்டுமொத்தமாக 28 புதிய போட்டிச் சாதனைகள் இதுவரை முறியடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஒரு சாதனை சமப்படுத்தப்பட்டதுடன், 13 முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

கமல் ராஜுக்கு வெள்ளிப் பதக்கம்

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம்பாய்தல் போட்டியில் பங்குகொண்ட வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த கமல் ராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 7.19 மீற்றர் தூரத்தைப் பாய்ந்தார். 

அண்மையில் நிறைவுக்குவந்த கனிஷ்ட தேசிய மெய்வல்லுனரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்ற கமல் ராஜ், 20 வயதுக்கு உட்பட்ட வயதுப்பிரிவில் அதிசிறந்த வீரராகவும், கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வருடத்தின் அதிசிறந்த கனிஷ்ட மெய்வல்லுனராகவும் தெரிவாகியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளிலும் பங்குபற்றிய அவர், வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், கனிஷ்ட மெய்வல்லுனர் கமல் ராஜுடன் போட்டியிட்டு வெண்கலப் பதக்கம் வென்ற கேகாலை புனித மரியாள் கல்லூரியின் ஆர். தஸநாயக்க (7.28 மீற்றர்) இம்முறை அகில இலங்கை மெய்வல்லுனரில் தங்கப் பதக்கத்தினையும் வெற்றிகொள்ள, அதே கல்லூரியைச் சேர்ந்த எம். யோசதிங்க (7.16 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தார்.

இதேவேளை, குறித்த போட்டியில் பங்குகொண்ட அநுராதபுரம் விஜிதபுர விஜித மகா வித்தியாலயத்தின் மொஹமட் அரூஸ் 6.69 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து ஏழாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். 

ஜெனுஷனுக்கு மூன்றாமிடம் 

18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் கொண்டச்சி முஸ்லிம் கலவன் பாடசாலையைச் சேர்ந்த கே.பி ஜெனுஷன் வர்ண சாதனையுடன் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியில் அவர் 6.99 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியிலும் இதே போட்டியில் அவர் வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், குறித்த போட்டியில் மாத்தறை ராகுல கல்லூரியைச் சேர்ந்த ஷான் அமந்த (7.05 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பசிந்து மல்ஷான் (7.00 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தினையும் சுவீகரித்தனர். 

13 போட்டிச் சாதனைகள் முறியடிப்பு

14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 80 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 11.64 செக்கன்களில் நிறைவுசெய்த கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியைச் சேர்ந்த ஏஞ்சலோ விதுஷ புதிய சாதனையை நிலைநாட்டினார்.

இதேநேரம், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட மினுவாங்கொடை மாரப்பொல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த என். மின்சர (5.18 மீற்றர்) புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டினார்.

அத்துடன். 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த நதுன் கே பண்டார (13.80 செக்.) புதிய போட்டிச் சாதனை படைத்தார்.

18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 24.88 செக்கன்களில் நிறைவு செய்த சிலாபம் புனித மரியாள் ஆண்கள் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். மிலந்த பெரேரா புதிய சாதனை படைத்தார்.

இது இவ்வாறிருக்க, 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் ராஜகிரிய கேட்வே கல்லூரியின் சதீபா ஹெண்டர்சன் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 24.88 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கந்தானை புனித செபெஸ்டியன் மகளிர் கல்லூரியின் ஹேஷினி மஹேஷிகா (38.16 மீற்றர்) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். 

Photos: All Island Schools Games Athletics 2019 – Day 03

ThePapare.com | Sithija De Silva | 02/11/2019 Editing and re-using images without permission of ThePapare.com……

16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.81 செக்கன்களில் நிறைவு செய்த இரத்தினபுரி சுமனா பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த டி. கஹங்கம புதிய சாதனை நிலைநாட்டினார்.

18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.55 செக்கன்களில் நிறைவு செய்த பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தைச் சேர்ந்த செனுரி அனுத்தரா புதிய போட்டிச் சாதனை நிலைநாட்டினார். 

அஞ்சலோட்டத்தில் மூன்று சாதனைகள்

நேற்று நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டப் போட்டியில் (42.15 செக்.) பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி அணி புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டியது.

இதேநேரம், 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டியில் (3 நிமி. 27.57 செக்.) குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல வித்தியாலயமும், அதே வயதுப் பிரிவில் பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டியில் (3 நிமி. 56.77 செக்.) வலல்ல ஏ. ரத்னாயக்க மத்திய மகா வித்தியாலயமும் புதிய போட்டிச் சாதனைகளை நிலைநாட்டின. 

மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க