T20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய அவிஷ்க பெர்னாண்டோ

International League T20

50
International League T20

இன்டர்நேஷனல் லீக் T20 (ILT20) கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக அரைச் சதம் கடந்த வீரர் எனும் சாதனையை இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ படைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ஒரு இலங்கை துடுப்பாட்ட வீரர் அடித்த அதிவேகமான T20 அரைச் சதமும் இதுவாகும். முன்னதாக சசெக்ஸ் அணிக்கு எதிராக 18 பந்துகளில் 50 ஓட்டங்களைக் குவித்து  முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் இந்த சாதனையை படைத்திருந்தார்.

இன்டர்நேஷனல் லீக் T20 கிரிக்கெட் தொடரின் 3ஆவது அத்தியாயம் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று (17) நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் ஷார்ஜா வொரியர்ஸ் மற்றும் துபாய் கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய துபாய் கேபிட்டல்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் ஷாய் ஹோப் அரைச் சதம் கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பௌண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 83 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார். ஷார்ஜா வொரியர்ஸ் அணி தரப்பில் டிம் சௌதீ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் 202 ஓட்டங்கள் என்ற சாதனை இலக்கை நோக்கி களமிறங்கிய ஷார்ஜா வொரியர்ஸ் அணிக்கு ஜேசன் ரோய் – ஜொன்சன் சார்ளஸ் அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 56 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை எடுத்த நிலையில், 37 ஜொன்சன் சார்ளஸ் 37 ஓட்டங்களுடனும், ஜேசன் ரோய் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 16 பந்துகளில் தனது அரைச் சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் ILT20 கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் சாதனையையும் அவிஷ்க பெர்னாண்டோ படைத்தார். இதற்கு முன் கடந்த ஆண்டு டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்காக ஆடிய பாகிஸ்தான் வீரர் அசாம் கான் 18 பந்துகளில் அரைச் சதம் அடித்மு இந்த சாதனையை நிகழ்த்.தியிருந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவிஷ்கா பெர்னாண்டோ 27 பந்துகளில் 6 பௌண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 81 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ரொஹான் முஸ்தபா 17 ஓட்டங்களையும், கரிம் ஜன்னத் ஒரு ஓட்டத்தையும் எடுத்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லுக் வெல்ஸ் 31 ஓட்டங்களை எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஷார்ஜா வொரியர்ஸ் அணி 18.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

அதன்மூலம் இன்டர்நேஷனல் லீக் T20 கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையை துரத்தி அடித்த  அணி என்ற  சாதனையையும் ஷார்ஜா வொரியர்ஸ் அணி பதிவு செய்தது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<