இலங்கை மெய்வல்லுனர்களுக்கு இராணுவத்தால் பயிற்சி அளிக்கப்படும் – அமைச்சர் ஹரீன்

400

நேபாளத்தில் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள மெய்வல்லுனர் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு அணிகளுக்கும் இலங்கை இராணுவத்தினால் விசேட பயிற்சிகளை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.

கட்டாரின் டோஹாவில் உள்ள கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த 23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்று பெண்களுக்கான முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கம் வென்ற விதூஷா லக்‌ஷானி உள்ளிட்ட இலங்கை மெயவல்லுனர் குழாத்தில் இடம்பெற்ற வீரர்கள் மற்றும் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் அதிகாரிகளுடனான விசேட சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் (02) விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

நாட்டின் சகல விளையாட்டுப் போட்டிகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சகல…

இதன்போது ஆசிய மெய்வல்லுனர் சம்பின்ஷிப்பில் இலங்கை வீரர்களின் பின்னடைவுக்கான காரணம் என்ன? என இலங்கை மெய்வல்லுனர் வீரர்கள் தற்போது சந்தித்து வருகின்ற குறைபாடுகள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கேட்டறிந்தார்.

இந்த நிலையில், அன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதுகுறித்து கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்,

”சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தகுதிபெற்றுக் கொள்கின்ற வீரர்களுக்கு எதிர்காலத்தில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் வீர, வீராங்கனைகளின் உடற்தகுதியை அதிகரிக்கும் பொருட்டு இலங்கை இராணுவத்தில் தங்குமுகாம் பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கு இராணுவம் இணங்கியுள்ளது. இந்த சிறப்புப் பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு போஷாக்கு உணவுகளும் வழங்கப்படும்” என தெரிவித்தார்.

”இது தொடர்பில் நாங்கள் ஏற்கனவே இலங்கை இராணுவத்துடன் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருந்தோம். எனவே தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான அணிகள் பெயரிடப்பட்ட பிறகு குறித்த வீரர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவர்.

உண்மையில், இலங்கைக்காக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கின்ற பெரும்பாலான வீரர்கள் இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் இலங்கை இராணுவம் தான் செய்து கொடுக்கின்றது. எனவே, அரசாங்கத்தினால் வீரர்களுக்காக ஒதுக்கப்படுகின்ற பணத்தை உரிய முறையில் செலவு செய்யப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த முறையை நாங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளோம். அதேபோல, இலங்கை இராணுவமும் அதற்கான வேலைத்திட்டங்களை எங்களுக்கு சமர்பித்துள்ளனர். இதன்படி, தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான வீரர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு நாட்டிலுள்ள முக்கியமான இராணுவ முகாம்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்” என தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி, இவ்வாறு வீரர்களை இலங்கை இராணுவத்துக்கு ஒப்படைக்கப்படுவது இராணுவ பயிற்சிகளுக்காக அல்ல என தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர், இராணுவத்தினால் அவர்களுக்கு கிடைக்கின்ற பயிற்சிகள் நிச்சயம் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வாரம் கட்டாரில் நிறைவுக்கு வந்த ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை வீரர்களின் பின்னடைவு குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில்,

ஆசிய மெய்வல்லுனரில் விதூஷா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…

”கட்டாரின் டோஹாவில் உள்ள கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் எமக்கு ஓரேயொரு பதக்கத்தையே வெற்றிகொள்ள முடிந்தது. எமது வீரர்களின் முன்னைய பெறுபேறுகளின் அடிப்படையில் குறைந்தது ஐந்து பதக்கங்களாவது எமக்கு கிடைத்திருக்கவேண்டும். எனினும், அது நிறைவேறாமல் போனது ஏமாற்றம் அளிக்கின்றது. வெளிநாடுகளில் உள்ள செயற்கை ஓடுபாதைகளில் (மொண்டோ ஓடுபாதை) எமது வீரர்களுக்கு பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் எமது வீரர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்ததாக என்னிடம் தெரிவித்தனர்.

எனவே, அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கு எதிர்வரும் காலங்களில் இலங்கையில் ஏழு முதல் ஒன்பது வரையான விளையாட்டரங்குகளில் செயற்கை ஓடுபாதைகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அத்துடன் தியகமவில் செயற்கை ஓடுபாதையை மிக விரைவில் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல அடுத்த மாதம் ஆறு விளையாட்டுத் தொகுதிகளை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<