ஆசிய இளையோர் மெய்வல்லுனரில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்

4th Asian youth Athletics Championship 2022

175
Avishka and Praveen through to Finals

ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கதங்களை வென்று இலங்கை வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

4ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் (18 வயதுக்குட்பட்ட) குவைத், கய்ஃபான் மெய்வல்லுனர் விளையாட்டரங்கில் நேற்று (13) ஆரம்பமாகியது.

இம்முறை போட்டித் தொடரில் இலங்கை சார்பில் 8 வீரர்கள் பங்குபற்றியுள்ளதுடன், போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (14) இலங்கை அணி இரண்டு பதக்கங்களை சுவீகரித்தது. இந்த இரண்டு பதக்கங்களும் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் கிடைக்கப் பெற்றமை சிறப்பம்சமாகும்.

இதன்படி, ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பிரவீன் ஜயதிலக்க வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 48.56 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார். அவருடன் போட்டியிட்ட சக நாட்டவரான அவிஷ்க தெமிந்த போட்டியை 48.70 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

முன்னதாக நேற்று (13) நடைபெற்ற ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் இந்த இரண்டு வீரர்களும் முதலிடங்களைப் பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த இரண்டு பதக்கங்களுடன் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் போட்டிகள் வரலாற்றில் 10ஆவது மற்றும் 11ஆவது பதக்கங்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றது.

இதனிடையே, இலங்கை வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த ஈரான் நாட்டு வீரர் மொஹமட் சையத், 48.37 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட நெத்மிகா மதுஷானி, 5.47 மீட்டர் தூரம் பாய்ந்து 9ஆவது இடத்தையும், பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட சிதுலி சதித்யா 1.60 மீட்டர் உயரம் தாவி 8ஆவது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<