பிரான்ஸுடனான காலிறுதிக்கு இங்கிலாந்து தகுதி

154

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இலங்கை நேரப்படி ஞாயிறு (04) மற்றும் திங்கள் (05) அதிகாலை நடைபெற்ற இரண்டு நொக் அவுட் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் இலகுவாக வெற்றியீட்டி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

இங்கிலாந்துக்கு இலகு வெற்றி

செனகல் அணிக்கு எதிரான நொக் அவுட் சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றியீட்டிய இங்கிலாந்து நடப்புச் சம்பியன் பிரான்ஸுக்கு எதிரான காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

>> ஆர்ஜன்டீனா, நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

இதன்படி பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் காலிறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

அல் பைத் அரங்கில் இலங்கை நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை நடைபெற்ற போட்டியில் 38 ஆவது நிமிடத்தில் ஜோர்டன் ஹென்டர்சன் இங்கிலாந்து சார்பில் முதல் கோலை புகுத்தியதோடு முதல்பாதி முடியும் தருவாயில் ஹரி கேன் மற்றோரு கோலை செலுத்தினார்.

தொடர்ந்து 57ஆவது நிமிடத்தில் புகாயோ சாகா மூன்றாவது கோலை பதிவு செய்தார்.

செனகலுக்கு கோல் வாய்ப்புகள் கிட்டியபோதும் ஆபிரிக்கச் சம்பியனால் ஒன்றைக் கூட வலைக்குள் செலுத்த முடியாமல் போனது.

இதன்போதும் முதல் பாதியின் கடைசி உதையாக ஹரி கேன், மின்னல் வேகத்தில் அடித்த பந்து செனகல் கோல் காப்பாளர் எடவார்ட் மென்டிக்கு பிடிபடாமல் கோலுக்குள் சென்றது. இதன் மூலம் அவர் இங்கிலாந்து சார்பில் அதிக கோல்களை பெற்ற வேன் ரூனியின் சாதனையை நெருங்கியுள்ளார். 53 கோல்களை பெற்ற வேன் ரூனியை விட அவர் ஒரு கோலால் பின்தங்கியுள்ளார்.

இங்கிலாந்து அணி 1966 ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் உலகக் கிண்ணத்தை வென்ற பின் அதனை மீண்டும் கைப்பற்றும் எதிர்பார்ப்புடனேயே இம்முறை களமிறங்கியுள்ளது.

நடப்புச் சம்பியன் முன்னேற்றம்

கைலியன் ம்பப்பே மற்றும் ஒலிவியர் கிரௌட்டின் கோல்கள் மூலம் போலந்துக்கு எதிரான நொக் அவுட் போட்டியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றியீட்டிய நடப்புச் சம்பியன் பிரான்ல் உலகக் கிண்ணத்தின் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அல் துமாமா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற போட்டியில் முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு ஒரு நிமிடம் இருக்கும்போது ஒலிவியர் கிரௌட் பிரான்ஸுக்காக முதல் கோலை புகுத்தினார்.

பிரேசிலுடனான நொக் அவுட் போட்டிக்கு தென் கொரியா தகுதி; வென்றும் வெளியேறியது உருகுவே

இது அவர் பிரான்ஸுக்காக பெறும் 52 ஆவது கோல் என்பதோடு பிரான்ஸுக்கு அதிக கோல்கள் பெற்ற தியரி ஹென்ரியின் சாதனையை இதன் மூலம் முறியடித்தார்.

இந்நிலையில் ம்பப்பே 74 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் போலந்தின் எதிர்பார்ப்பை சிதைத்தது. 16 யார் தொலைவில் இருந்து மின்னல் வேகத்தில் அவர் உதைத்த பந்து எதிரணி கோல் காப்பாளருக்கு பிடிக்க முடியாமல் வலையின் மேல் பாகத்தில் நுழைந்தது.

பின்னர் வழங்கப்பட்ட மேலதிக நேரத்திலும் ஒரு கோலை பெற்ற ம்பப்பே இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிக கோல்கள் பெற்றோர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவர் மொத்தம் ஐந்து கோல்களை பெற்றுள்ளார். அவர் இதுவரை ஆடியிருக்கும் 11 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் 9 கோல்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே போட்டி கைநழுவிய நிலையில் 99 ஆவது நிமிடத்தில் 34 வயதான போலந்து அணித்தலைவர் ரொபர்ட் லிவன்டோஸ்கி பெனால்டி மூலம் கோல் ஒன்றை பெற்றார்.

இதன்படி 60 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசில் நடப்புச் சம்பியனாக உலகக் கிண்ணத்தை தக்கவைத்த பின், முதல் முறை அந்த சாதனையை படைக்கும் பயணத்தில் பிரான்ஸ் தொடர்ந்து முன்னேறியுள்ளது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<