ஆசிய இளையோர் மெய்வல்லுனரில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

4th Asian youth Athletics Championship 2022

134

குவைத்தின் கய்ஃபான் மெய்வல்லுனர் விளையாட்டரங்கில் இன்று (16) நிறைவுக்கு வந்த 4ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணி, 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியது.

போட்டித் தொடரின் இரண்டாவது நாளான கடந்த 14ஆம் திகதி ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பிரவீன் ஜயதிலக்க வெள்ளிப் பதக்கத்தையும், அவிஷ்க தெமிந்த ராஜபக்ஷ வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

இந்த நிலையில், மூன்றாவது நாளான நேற்று (15) நடைபெற்ற போட்டிகளில் இலங்கை வீரர்கள் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தனர்.

இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 15.42 செக்கன்களில் நிறைவு செய்த கசுனி நிர்மாலி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதனிடையே, 2 நிமிடங்கள் 06.79 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த இந்தியா வீராங்கனை அசாகிரன் பர்லா தங்கப் பதக்கத்தையும் ஈராக்கின் நர்ஜிஸ் ஹொசைன் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

இந்த நிலையில், ஆண்களுக்கான உயரம் பாய்தலில் இலங்கை வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இதில் 2.01 மீட்டர் உயரத்தைத் தாவிய தெனெத் அநுஹஸ் வெள்ளிப் பதக்கத்தையும், 1.97 மீட்டர் உயரத்தைத் தாவிய லெசெந்து அர்தாவிது வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

குறித்த போட்டியில் 2.21 மீட்டர் உயரத்தைத் தாவிய தென் கொரியாவைச் சேர்ந்த சோய் ஜின்வோ தங்கப் பதக்கத்தை வென்றார்.

இது இவ்வாறிருக்க, போட்டிகளின் கடைசி நாளான இன்று (16) ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட ரஸ்வின் கரீம், 6.77 மீட்டர் தூரம் பாயந்து 6ஆவது இடத்தைப் பிடித்தார்.

முன்னதாக, பெண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட நெத்மிகா மதுஷானி, 5.47 மீட்டர் தூரம் பாய்ந்து 9ஆவது இடத்தையும், பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட சிதுலி சதித்யா 1.60 மீட்டர் உயரம் தாவி 8ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பில் 8 வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், இதில் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என ஐந்து வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.

>>  மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<