ஷானகவுடன் கருத்து முரண்பாடா? உண்மையை கூறும் மிக்கி ஆர்தர்

India tour of Sri Lanka 2021

1098

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமான முறையில் தோல்வியடைந்தது.

இந்தப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்த போதும், கடைசி நேரத்தில் விடப்பட்ட தவறுகள் காரணமாக இலங்கை அணி தோல்வியை தழுவியது. இதில், தசுன் ஷானகவின் தலைமைத்துவத்தில் சில தவறுகள் விடப்பட்டதாகவும் விமர்சிக்கப்பட்டுவந்தன.

>> போராடி வென்ற இந்திய கிரிக்கெட் அணி

அந்தவகையில், போட்டி நிறைவடைந்த பின்னர் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தருக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டதுடன், குறித்த புகைப்படங்கள் சமுகவலைத்தளங்களில் தீவிரமாக வைரலாகின.

குறித்த இந்த போட்டியின் வர்னணையாளராக இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட், தனது டுவிட்டர் தளத்தில் இதுதொடர்பிலான கருத்து ஒன்றினை பகிர்ந்திருந்தார்.

குறித்த பதிவில், “அணித்தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளருக்கு இடையிலான கருத்து முரண்பாடுகள் மைதானத்தில் இருக்கக்கூடாது. உடைமாற்றும் அறையில் இருக்கலாம்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், குறித்த கருத்துக்கு தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலிருந்து மிக்கி ஆர்தர் பதில் கருத்து வெளியிட்டுள்ளார். “நாம் ஒன்றாகவே வெற்றிபெறுகிறோம். ஒன்றாகவே தோல்வியடைகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். 

நான் மற்றும் தசுன் ஷானக இணைந்து ஒரு அணியை கட்டியெழுப்பி வருகின்றோம். இந்தப்போட்டியில் நாம் வெற்றிபெறாமையை நினைத்து ஏமாற்றமடைந்துள்ளோம். குறித்த தருணத்தில் இடம்பெற்றது ஒரு நல்ல விவாதம். அதிலிருந்து எந்த தீங்கினையும் வெளிக்கொண்டுவர தேவையில்லை” என பதிவிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டு ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (23) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<