வேகப்பந்துவீச்சாளர் மீது நம்பிக்கை வைக்கும் தசுன் ஷானக!

ICC T20 World Cup 2022

663

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் T20 உலகக்கிண்ணத்தில் அணியின் பிரகாசிப்புகளில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக இருப்பர் என இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே குறித்த இந்த விடயத்தினை தசுன் ஷானக தெரிவித்தார்.

ஆசியக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை மகளிர் தோல்வி

அதேநேரம், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு குழாத்தில் மணிக்கு 140 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் பந்துவீசக்கூடியவர்கள் மூவர் இருப்பது அணிக்கு மேலும் பலம் கொடுக்கும் என குறிப்பிட்டார்.

“அணித்தலைவர் என்ற ரீதியில் மணிக்கு 140 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் பந்துவீசக்கூடியவர்கள் இருப்பது அணித்தலைவர் என்ற ரீதியில் தனக்கு சாதகத்தை கொடுக்கும்.

எமது கிரிக்கெட் வரலாற்றில் இவ்வாறு மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரே குழாத்தில் இருந்தது இல்லை. அதிகபட்சமாக இரண்டு வீரர்கள் மாத்திரம் இருந்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களின் திறமைகள் மற்றும் பந்துவீச்சு மாற்றங்களுடன் இந்த உலகக்கிண்ணத்தில் சிறந்த விடயத்தை செய்ய முடியும் என நினைக்கிறேன்” என்றார்.

அதேநேரம் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் உபாதைகளுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், துஷ்மந்த சமீர ஆசியக்கிண்ணத்தை தவறவிட்டதுடன், லஹிரு குமார கடந்த மார்ச் மாதத்துக்கு பின்னர் போட்டிகளில் விளையாடவில்லை.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் சிறந்த உடற்தகுதியுடன் T20 உலகக்கிண்ணத்தில் விளையாட தயாராக இருப்பதாக மேலும் ஷானக சுட்டிக்காட்டினார்.

“துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார எம்முடைய பயிற்சி முகாமில் இணைந்திருந்தனர். அவர்கள் தங்களுடைய 4 ஓவர்களையும் வீசியிருந்தனர். அவர்கள் சிறப்பாக பந்துவீசினர். எனவே, உலகக்கிண்ணத்துக்கு அவர்கள் தயாராக உள்ளனர்” என்றார்.

ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி ஞாயிற்றுக்கிழமை (02) அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கவுள்ளதுடன், 16ம் திகதி தங்களுடைய முதல் போட்டியில் நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<