இம்முறை ஆசியக் கிண்ணப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்

1725
@ AFP

இந்தியாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2018ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் தற்போது, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

அரசியல் ரீதியான காரணங்களினால் இந்தியாவில் இடம்பெறவிருந்த இந்த தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுவதில் சந்தேகம் நிலவியிருந்தது. இதுவே, தற்போது தொடர் நடைபெறும் இடம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட காரணமாக இருக்கின்றது.

2018 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில்?

இந்த ஆண்டு செம்டம்பர் மாதம்…

அதோடு இந்த தொடரினை நடாத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும் என முன்னர் கூறப்பட்டிருந்த போதிலும், குறித்த காலப்பகுதியில் இலங்கையில் லங்கன் பிரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இதுவும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு ஆசியக் கிண்ணத் தொடர் மாற்றப்பட இன்னுமொரு காரணமாகும்.

“இந்த விடயம் தொடர்பாக ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) ஆராய்ந்ததன் அடிப்படையில் இதுவே முன்னேற்றத்திற்கான சிறந்த வழியாக (ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்துவது) இருந்தது.” என ஆசிய கிரிக்கெட் வாரியத்தினதும், பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனத்தினதும் தலைவரான நஜாம் சேதி குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணப் போட்டிகளில் ஆறு அணிகள் பங்கெடுக்கின்றன. இதில் ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவ நாடுகள் ஐந்தும், (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான்) ஆசியக் கிண்ணத்திற்கான தெரிவுப் போட்டிகளில் வெல்லும் ஆசிய அணி ஒன்றும் அடங்குகின்றன. இந்த தெரிவுப் போட்டிகளில் ஐக்கிய அரபு இராச்சியம், ஹொங்கோங், நேபாளம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் மோதுவது குறிப்பிடத்தக்கது.

14 ஆவது தடவையாக இந்த ஆண்டு இடம்பெறும் ஆசியக் கிண்ணப் போட்டிகள் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி தொடக்கம், செப்டம்பர் 28ஆம் திகதி வரை நடைபெறுகின்றன.

இறுதியாக 2016ஆம் ஆண்டு T20 போட்டிகளாக பங்களாதேஷில் இடம்பெற்றிருந்த ஆசியக் கிண்ணப் போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<