2018 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில்?

6676

இந்த ஆண்டு செம்டம்பர் மாதம் இந்தியாவில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி விளையாடுவதில் சிக்கல்கள் உள்ள காரணத்தினால், குறித்த தொடரினை இலங்கையில் நடாத்த ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

[rev_slider LOLC]

கடந்த 2015ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத் தொடரின் போது, 2018ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்தும் நாடாக இந்தியா பெயரிடப்பட்டிருந்தது. எனினும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அயல் நாடுகளிடையே அரசியல் ரீதியாக குளறுபடிகள் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து விளையாடுவதில் பிரச்சினைகள் இருக்கின்றன. இதன் காரணமாக, இந்தியாவில் இந்த ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்துவது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.  

தாய்நாட்டுக்கு ஆட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மறுத்த குசல் பெரேரா

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் தடை…

இதற்கு முன்னதாக, 19 வயதின் கீழ்ப்பட்ட அணிகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் இந்தியாவில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும், இதே காரணங்களுக்காக பின்னர், குறித்த தொடர் மலேசியாவுக்கு மாற்றப்பட்டிருந்தது. இப்படியான பிரச்சினைகளுக்கு மத்தியில் நடாத்தப்பட்டிருந்த இந்த ஆசியக் கிண்ணத் இளையோர் தொடரில் ஆப்கான் கனிஷ்ட அணியினர் சம்பியன் பட்டத்தினை சுவீகரித்திருந்தனர்.

“இந்த தொடருக்கான (ஆசியக் கிண்ணத்திற்கான) மேலதிக விடயங்களை உறுதி செய்வதில் நாம் ஈடுபட்டுக்கொண்டுள்ளோம். எனினும், தொடரினை நடாத்தும் வாய்ப்பு இலங்கைக்கே வழங்கப்படும்.“ என ஆசிய கிரிக்கெட் வாரிய உத்தியோகத்தர் ஒருவர் ThePapare.com இடம் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் செப்டம்பர் 15ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறுகின்ற ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடராக அமைகின்றது. இம்முறைக்கான தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியக் கிண்ணத்தின் தெரிவுப் போட்டியில் வெல்லும் அணி)

கடைசியாக ஆசியக் கிண்ணத் தொடர் 2016ஆம் ஆண்டின் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பங்களாதேஷில் நடைபெற்றிருந்தது. T-20 போட்டிகளாக நடைபெற்றிருந்த குறித்த தொடர், இந்தியாவில் அதே ஆண்டு நடைபெற்ற T-20  உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு ஆசிய அணிகளை தயார்படுத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தினை உருவாக்கித் தந்திருந்தது.