நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது ஒரு ஓட்டத்தினால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.
WATCH – நியூசிலாந்து தொடரில் இலங்கை அணியின் இலக்கு என்ன? கூறும் திமுத்!
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வாரம் மவுண்ட் மங்னாயில் நிறைவடைந்து தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியானது வெள்ளிக்கிழமை (24) வெலிங்டன் நகரில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் தலைவர் டிம் சௌத்தி முதலில் இங்கிலாந்து வீரர்களை துடுப்பாடப் பணித்ததோடு, அதன்படி அவ்வணி வீரர்கள் முதல் இன்னிங்ஸிற்காக 8 விக்கெட்டுக்களை இழந்து 435 ஓட்டங்கள் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தனர்.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹர்ரி புரூக் சதம் விளாசி 186 ஓட்டங்கள் பெற்றதோடு, ஜோ ரூட் ஆட்டமிழக்காது 153 ஓட்டங்கள் எடுத்திருந்தார். நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் மேட் ஹேன்ரி 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 209 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தது. நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பாக அதன் தலைவர் டிம் சௌத்தி 49 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை அதிரடியாக எடுத்தார். இதேவேளை, இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டுவார்ட் ப்ரோட் 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதனால் அவ்வணி பலோவ் ஒன் முறையில் மீண்டும் துடுப்பாடியதோடு, இம்முறை கேன் வில்லியம்சன் அபார சதம் பெற்று தனது தரப்பினை வலுப்படுத்தினார்.
இதனால் நியூசிலாந்து அணியானது இரண்டாம் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 483 ஓட்டங்களை எடுத்தது. நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் கேன் வில்லியம்சன் 132 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம், டொம் ப்ளன்டல் உம் 90 ஓட்டங்களுடன் தனது தரப்பிற்கு பலம் சேர்த்திருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜேக் லீச் 5 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.
நியூசிலாந்தின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக 258 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது 74.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்ததோடு 256 ஓட்டங்களை பெற்று வெறும் ஒரு ஓட்டத்தினால் தோல்வி அடைந்தது.
கிரிக்கெட் யாப்பு குழுவில் இருந்து விலகும் பர்வீஸ் மஹரூப்
இங்கிலாந்து அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 95 ஓட்டங்கள் பெற்றிருந்த போதும் அது வீணாகியது. மறுமுனையில் நியூசிலாந்து பந்துவீச்சு சார்பில் நெயில் வேக்னர் 4 விக்கெட்டுக்களைச் சாய்த்தும், டிம் சௌத்தி 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
அத்துடன் இப்போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது பலோவ் ஒன் இடம்பெற்ற பின்னர் டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றியைப் பதிவு செய்த நான்காவது அணியாகவும், டெஸ்ட் போட்டியொன்றில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியினைப் பதிவு செய்த இரண்டாவது அணியாகவும் மாறியது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 435/8d (87.1) ஹர்ரி புரூக் 186 (176), ஜோ ரூட் 153(224), மேட் ஹென்ரி 100/4(22.1)
நியூசிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 209 (53.2) டிம் சௌத்தி 73(49), ஸ்டுவார்ட் ப்ரோட் 61/4(14.2)
நியூசிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 483 (162.3) கேன் வில்லியம்சன் 132(282), ஜேக் லீச் 157/5(61.3)
இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 256 (74.2) ஜோ ரூட் 95 (113), நெயில் வெக்னர் 62/4 (15.2)
முடிவு – இங்கிலாந்து ஒரு ஓட்டத்தினால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<