35 மில்லியன் ரூபாவுக்கும் அதிக விலை போகவுள்ள சாமிக கருணாரத்ன

SA20 League

6063

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்படவுள்ள T20 லீக் தொடருக்கான (SA20) வீரர்கள் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலில் இலங்கையின் நட்சத்திர சகலதுறை வீரர் சாமிக கருணாரத்ன இடம்பிடித்துள்ளார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் அடுத்த ஆண்டு ஜனவரி – பெப்ரவரி மாதங்களில் நடத்தப்படவுள்ள புதிய T20 லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்மாதம் 19ஆம் திகதி கேப்டவுனில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தென்னாபிரிக்கா T20 லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மற்றும் அந்த வீரர்கள் விண்ணப்பித்த அடிப்படைத் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் 318 வீரர்களின் பட்டியலை போட்டி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதில் எட்டு முன்னணி வீரர்களின் பெயர்கள் அதிகபட்ச அடிப்படை விலையாக 1,700,000 தென்னாப்பிரிக்கா ராண்ட் (ZAR) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது இலங்கை பணப் பெறுமதியில் 35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

மேலும் இந்த தொகையானது அடிப்படை விலை என்பதால் ஏலத்தின் போது ஒவ்வொரு வீரருக்குமான கேள்விக்கு ஏற்ப இந்த தொகை மேலும் அதிகரிக்கும்.

அதன்படி, இலங்கையின் சகலதுறை வீரர் சாமிக கருணாரத்ன, இங்கிலாந்து வீரர்களான ஜேசன் ரோய், இயேன் மோர்கன், டைமல் மில்ஸ், ஆடில் ரஷித், நியூசிலாந்தின் ஜிம்மி நீஷம், மேற்கிந்திய தீவுகளின் ஒடியன் ஸ்மித் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோரது பெயர்கள் இந்தப் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது.

SA20 வீரர்கள் ஏலத்தில் 2ஆவது அதிகபட்ச அடிப்படை விலையின் கீழ் 52 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இது தென்னாப்பிரிக்கா பணப்பெறுமதியில் ZAR 850,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த 52 வீரர்களில் தனன்ஜய டி சில்வா, சரித் அசலங்க, பெதும் நிஸ்ஸங்க உள்ளிட்ட 11 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மேலும், குறித்த 52 வீரர்களில் 13 இங்கிலாந்து வீரர்கள், 10 தென்னாபிரிக்கா வீரர்கள், 7 மேற்கிந்திய தீவுகள் வீரர்கள், 6 ஆப்கானிஸ்தான் வீரர்கள், தலா இரண்டு நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ஒரு அயர்லாந்து வீரர் இடம்பெற்றுள்ளனர்.

SA20 தொடருக்கான வீரர்கள் 158 வெளிநாட்டு வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதில் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் இங்கிலாந்திலிருந்து (54) இணைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து (31) இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் 30 வீரர்களுடன் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஹொங் கொங் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இம்முறை ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

எனினும், SA20 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது சிறப்பு.

SA20 தொடருக்காக ஆறு அணிகள் களமிறங்கவுள்ளன. இந்த அணிகளின் உரிமையை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

இதன்காரணமாக, இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை என ஊகங்கள் கிளம்பியிருந்த போதிலும், சர்வதேசப் போட்டிகள் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இதில் பங்கேற்கவில்லை என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர் உன்முக்த் சாந்த் மட்டுமே இந்த பட்டியலில் ஒரேயொரு இந்திய வீரராக இடம்பெற்றுள்ளார். மேலும் அவர் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டியலில் தனது பெயரை பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, வெளிநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளதால், வீரர்கள் ஏலத்தில் எந்தவொரு இந்திய வீரரும் இடம்பெறவில்லை.

இதனிடையே, SA20 தொடரில் களமிறங்கவுள்ள ஆறு அணிகளும் தலா நான்கு வீரர்களை ஏலத்துக்கு முன் அதிக விலைக்கு தங்கள் அணிகளில் இணைத்துக் கொண்டுள்ளன. இதில் ஜொஹனஸ்பர்க் சுபர் கிங்ஸ் அணி இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனவை ஒப்பந்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<