பந்து சேதப்படுத்துவது சட்டரீதியாக அனுமதிக்கப்படுமா?

80
legalizing ball-tampering
Image Courtesy - AFP
 

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் ஆபத்து முழுமையாக இல்லாமல் போகும் சந்தர்ப்பத்திலேயே உலகில் கிரிக்கெட் போட்டிகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.  

உமர் அக்மலுக்கு 3 வருடங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை

வழமையாக சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளும் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரரான உமர்..

இவ்வாறு கிரிக்கெட் போட்டிகள் மீளும் சந்தர்ப்பத்தில் பந்துவீச்சாளர்கள் வழமை போன்று தங்களது உமிழ்நீரை பந்தில் பூசி பந்தின் ஒருபக்கத்தை மிளிர வைக்க (Shine) முயல்வது கொரோனா போன்ற நோய்க் கிருமிகளை மீண்டும் பரவ வழி செய்யும் என்பதால், பந்தினை மிளிர வைக்கும் புதிய வழிமுறைகள் தொடர்பில் ஐ.சி.சி. கலந்துரையாடல்களை ஆரம்பித்திருக்கின்றது. 

இந்த புதிய வழிமுறைகளில் தற்போது பந்தினை சேதப்படுத்தும் வழிமுறையாக உள்ள செயற்கைப் பதார்த்தங்களைப் பந்தின் மேற்பரப்பில் செலுத்துதல் பற்றியும் பேசப்பட்டு வருகின்றது. 

எனினும், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான மிக்கி ஆத்தர் பந்தின் மீது செயற்கைப் பதார்த்தங்களை பயன்படுத்துவது பொருத்தமான முறையாக இருக்காது எனக் கூறி, பந்தினை தொடர்ந்தும் மிளிர வைக்க புதிய ஆலோசனை ஒன்றினையும் தனது டுவிட்டர் கணக்கு மூலமாக  வழங்கியிருக்கின்றார். 

மிக்கி ஆத்தரின் ஆலோசனையாக இருப்பது, பந்தினை சேதப்படுத்தும் விடயம் ஒன்றினை போட்டி நடுவருக்கு முன்னால் வைத்து செய்வது சிரமமாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு 55 ஓவர்களுக்கும் புதிய பந்து ஒன்றைப் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதாகும்.  

அந்தவகையில் மிக்கி ஆத்தரின் ஆலோசனையானது டெஸ்ட் போட்டிகளுக்கு மாத்திரமே சாத்தியமாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது. ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே இன்னிங்ஸின் ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும்புதிய பந்து பயன்படுத்தப்படுகின்றது. 

அதேநேரம், ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிற்கும் (50 ஓவர்களுக்கு) ஒரு புதிய பந்து பயன்படுத்தப்படுவதோடு, மொத்தமாக 40 ஓவர்களே இருக்கும் T20 போட்டிகளில் ஒரு பந்து மாத்திரமே பயன்படுகின்றது. 

மிக்கி ஆத்தரின் ஆலோசனை ஒருபக்கம் இருக்க முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், தற்போதைய கிரிக்கெட் வீரர்களும் பந்து மிளிர வைப்பது தொடர்பில் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். 

இதில் அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசல்வூட் உமிழ் நீரினை டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சுத்தரப்பு பயன்படுத்த அனுமதிக்கப்படாமல் போனால், அது பந்துவீச்சு தரப்பிற்கு பெரிய நெருக்கடியாக அமையும் எனக்கூறி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் உமிழ்நீரினை பயன்படுத்தாமல் விடுவது பிரச்சினை தராது எனவும் தெரிவித்திருந்தார்.  

தொலைத்த உலகக் கிண்ணப் பதக்கத்தை கண்டெடுத்த ஆர்ச்சர்

நீங்கள் தொலைத்த பொருள் ஒன்று, நீங்கள் கடைசியாக தேடிய இடத்திலேயே இருக்கும்..

இதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான வகார் யூனிஸ் டெஸ்ட் போட்டிகளில் உமிழ்நீர் கொண்டு பந்தினை மிளிரவைப்பது இயற்கையான விடயம் எனக் குறிப்பிட்டு செயற்கைப் பதார்த்தங்களை பந்தில் செலுத்துவது சரியாக இருக்காது எனத் தெரிவித்திருந்தார்.

அதோடு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் அலன் டொனால்டும் பந்தில் செயற்கைப் பதார்த்தங்களை செலுத்துவது சிறந்த விடயமாக இருக்காது எனத் தெரிவித்திருக்கின்றார்.

நிலைமைகள் இவ்வாறு இருக்க ஐ.சி.சி. இந்த விடயம் தொடர்பான முடிவு ஒன்றை அதனது நிர்வாகக் கூட்டம் நடைபெற்ற பின்னரே தெரிவிக்கும் என கூறப்படுகின்றது. ஐ.சி.சி. இன் நிர்வாகக் கூட்டம் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக வீடியோ கலந்துரையாடல் (Video Conference) மூலம் மே மாதத்திலோ அல்லது ஜூன் மாத ஆரம்பத்திலோ நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<