சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற FA கிண்ணத்தின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கால்பந்துக் கழகத்தினை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய ராணுவப்படை விளையாட்டுக் கழகம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் இராணுவப்படை விளையாட்டுக் கழகம், பேருவளை சுப்பர் சன் விளையாட்டுக் கழகத்தை 12-1 என அபாரமாக வெற்றி கொண்டது. எனினும் கொழும்பு கால்பந்துக் கழகம், பலம் மிக்க விமானப்படை அணியுடனான விறுவிறுப்பான போட்டியில் 1-0 என வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

அரையிறுதி குறித்த ஒரு முன்னோட்டம்

இந்நிலையில் இன்று சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமான இப்போட்டியின் ஆரம்ப நிமிடங்கள் சற்று களையிழந்த நிலையில் சென்றது. இரு அணி வீரர்களும் வேகமாக அல்லாமல் நிதானமாக பத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அணியினராலும் பெரிதாக வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் போனது.

எனினும் 12ஆவது நிமிடத்தில் ராணுவப்படையின் பெனால்டி பகுதிக்கு வெளியில் கொழும்பு அணிக்கு ப்ரி கிக் வாய்ப்பு கிடைக்கப்பெற்றாலும் ரௌமி மொஹிடீன் பந்தை கம்பங்களுக்கு மேலாக அடித்து வாய்ப்பினை கோட்டை விட்டார்.

தொடர்ந்து 22ஆவது நிமிடத்தில், உயர்ந்து வந்த பந்தை இஸ்ஸடீன் தலையால் முட்டி கோலுக்குள் அனுப்பினார். இதன்போது கொழும்பு அணியின் கோல் காப்பாளர் மொஹமட் இம்ரான் மேற்கொண்ட தடுப்பிற்கான முயற்சி பயனளிக்கவில்லை.

தொடர்ந்து 25ஆவது நிமிடத்தில் கொழும்பு அணியின் பெனால்டி பகுதியில் வைத்து ரமீஸ் பந்தை கையால் கையாண்டமையினால் ராணுவப்படை அணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பொன்று கிடைத்தது. அதனை கோலாக மாற்றி கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார் மொஹமட் இஸ்ஸடீன்.

எதிரணி அடித்த இரண்டு கோல்களின் காரணமாக கொழும்பு கழகம் தமது நட்சத்திர வீரர் மொஹமட் சர்வானை மைதானத்திற்கு அறிமுகப்படுத்தியது.

அதன் பின்பு ஆர்வத்துடன் விளையாடிய கொழும்பு அணிக்கு ஒரு சில வாய்ப்புகள் உருவாகின. குறிப்பாக தனுஷ்க மதுஷங்கவிற்கு கிடைத்த வாய்ப்பினை அவரால் சரியாக கோல் கம்பங்களுக்குள் அடிக்க முடியவில்லை.

மறு முனையில் ராணுவப்படை அணிக்காக சஜித் குமாரவிற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பினையும் அவர் தவறவிட்டார்.

இதன் காரணமாக FA கிண்ணத்தின் நடப்புச் சம்பியன் இராணுவப்படை முதல் பாதியிலேயே முன்னிலை பெற்றது.

முதல் பாதி: இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 2 – 0 கொழும்பு கால்பந்துக் கழகம்

இரண்டாம் பாதி எதிர்பார்த்ததை போன்று மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமானது. இரு அணிகளும் மாறி மாறி தமக்கான வாய்ப்புகளை உருவாக்கி போட்டியின் விறுவிறுப்பை உச்ச கட்டத்தில் வைத்திருந்தன.

போட்டியின் 50ஆவது நிமிடத்தில் இராணுவப்படையின் களத்தடுப்பாளர்கள் செய்த சிறு தவறினால் பந்து டிலான் கௌஷல்யவிற்கு செல்ல, அவர் அதனை லாவகமாக கோல் கம்பங்களுக்குள் உதைத்தார். அவர் அடித்த கோலினால் உத்வேகமடைந்த கொழும்பு வீரர்கள் அடுத்த கோலிற்காக முழு முயற்சியுடன் செயற்பட்டனர்.

போட்டி மேலும் சூடு பிடிக்க இரு அணி வீரர்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் இரு அணி வீரர்களும் அவற்றை சரிவரப் பயன்படுத்தவில்லை. குறிப்பாக இஸ்ஸடீனிற்கு கிடைத்த அருமையான வாய்ப்பினை அவர் தவறவிட்டார்.

போட்டியின் ஒரு மணி நேரம் கடந்த நிலையில் டிலான் கௌஷல்ய யாரும் எதிர்பாரா வண்ணம் அபாரமான கோலின்றினை நீண்ட தூரத்தில் இருந்து போட்டார். அவர் அடித்த பந்து கோல் காப்பாளர் குமார சிறிசேனவைத் தாண்டி கோலினுள் புகுந்தது.

இரு அணிகளும் மீண்டும் சமநிலை பெற போட்டியின் வெற்றி கோலிற்காக இரு அணிகளும் முட்டி மோதிக்கொண்டன.

தர்ஜினியின் அறிமுகம் முன்னரே கிடைத்திருந்தால்

கொழும்பு அணி ஒரு புறம் சாரமாரியாக கோல் வாய்ப்புகளை உருவாக்க, மறுமுனையில் கவுண்டர் முறையில் இராணுவப்படை வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தனர்.

ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்தில் சந்திரசேகர அடித்த பந்தினை மொஹமட் இம்ரான் தடுக்க அப்பந்து மீண்டும் மொஹமட் இஸ்ஸடீனிற்கு சென்றது. அவர் அதனை தலையால் முட்டி கோலாக்கினார்.

மீண்டும் முன்னிலை பெற்ற இராணுவப்படை இறுதி நிமிடங்களில் களத்தடுப்பில் முழுக் கவனத்தையும் செலுத்தியது.

சர்வான் ஜோஹர் மற்றும் நாகுர் மீரா அடித்த வாய்யப்புகள் தடுக்கப்பட, ஆட்டத்தின் இறுதியில் இராணுவப்படை அணி வெற்றியை பதிவு செய்தது.

முழு நேரம்: இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 3 – 2 கொழும்பு கால்பந்துக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – மொஹமட் இஸ்ஸடீன் (இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – மொஹமட் இஸ்ஸடீன் 22′, 25′, 86′

கொழும்பு கால்பந்துக் கழகம் – டிலான் கவ்ஷல்ய 50′, 65′

மஞ்சள் அட்டைகள்  

கொழும்பு கால்பந்துக் கழகம் – மொஹமட் அபீல் 29′, சர்வான் ஜோஹர் 51′, ரௌமி மொஹிடீன் 75′