இலங்கை – மேற்கிந்திய தீவுகள் போட்டி அட்டவணை வெளியானது!

82

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு T20I போட்டிகளில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி எதிர்வரும் மாதம் 10ம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. குறித்த தொடர் நிறைவடைந்த பின்னர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இலங்கை விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சிம்மென்ஸின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

பிராவோ, பொல்லார்ட்டின் அபார பந்துவீச்சு…..

இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும், இலங்கை கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டிருக்கவில்லை. எனினும், இன்றைய தினம் (21) தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி பெப்ரவரி 17ம் திகதி கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் முதல் பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி தொடருக்கு சற்று முன்னதாக தயாராகும் முகமாக இந்த உத்தியோகபூர்வமற்ற பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது.

எனினும், தொடரானது உத்தியோகபூர்வமாக பெப்ரவரி 20ம் திகதி, கட்டுநாயக்க – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி பெப்ரவரி 22ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 26ம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி கண்டி – பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

இதில், எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டி பகல் நேர போட்டியாக நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறவுள்ளன.

அதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு T20I போட்டிகள் மார்ச் 4 மற்றும் 6ம் திகதிகளில் கண்டி – பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. 

ஜிம்பாப்வே அணியின் ஆதிக்கத்தை சுழலால் கட்டுப்படுத்திய எம்புல்தெனிய

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான முதல்….

மேற்கிந்திய தீவுகள் அணி இறுதியாக 2015ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 T20I போட்டிகளில் விளையாடியதுடன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை முழுமையாக இழந்ததுடன், T20I தொடரை மாத்திரம் 1-1 என சமப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

போட்டி அட்டவணை

  • முதல் பயிற்சிப் போட்டி – பெப்ரவரி 17 – பி.சரா ஓவல் (உத்தியோகபூர்வமற்றது)
  • இரண்டாவது பயிற்சிப் போட்டி – பெப்ரவரி 20 – கட்டுநாயக்க
  • முதல் ஒருநாள் போட்டி – பெப்ரவரி 22 – எஸ்.எஸ்.சி. மைதானம்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி – பெப்ரவரி 26 – ஹம்பாந்தோட்டை
  • மூன்றாவது ஒருநாள் போட்டி – மார்ச் 01 – கண்டி – பல்லேகலை
  • முதல் T20I போட்டி – மார்ச் 04 – கண்டி – பல்லேகலை
  • இரண்டாவது T20I போட்டி – மார்ச் 06 – கண்டி – பல்லேகலை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<