பேருவுடனான போட்டியை கோலின்றி சமநிலையில் முடித்த ஆர்ஜன்டீனா 1970 ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறாமல் வெளியேறும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது.

2018 இல் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு தென் அமெரிக்காவில் இருந்து நான்கு அணிகளே நேரடி தகுதி பெற முடியும் என்ற நிலையில், ஆர்ஜன்டீன அணிக்கு மேலும் ஒரு போட்டியே எஞ்சியுள்ள நிலையில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இரண்டு முறை உலக சம்பியனான ஆர்ஜன்டீனா தனது உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஈக்வடோருடனான தனது கடைசி தகுதிகாண் போட்டியில் கட்டாயம் வெற்றிபெறவேண்டும். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் குறைந்தது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறுவதன் மூலம் நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டு கட்ட பிளே ஓப் (play-off) போட்டிகளுக்கு தகுதி பெற முடியும்.

ஆர்ஜன்டீனாவின் தலைவிதியை தீர்மானிக்கும் இந்த சுற்று போட்டி இலங்கை நேரப்படி எதிர்வரும் புதன்கிழமை (11) நடைபெறவுள்ளது.

ஆர்ஜன்டீன பயிற்சியாளர் ஜோர்க் சம்போலி, நிலைமை உறுதியாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். “பேருவுக்கு எதிராக செயற்பட்டது போல் நாம் உறுதியாக விளையாடினால் உலகக் கிண்ணத்தில் இருப்போம்” என்றார்.

ஆர்ஜன்டீன தலைநகரில் 49,000 ரசிகர்கள் மத்தியில் இலங்கை நேரப்படி நேற்று நடைபெற்ற பேருவுடனான போட்டியில் பார்சிலோனா கழக முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி ஆர்ஜன்டீன அணிக்கு பல வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தபோதும் அந்த அணியால் அவைகளை கோலாக மாற்ற முடியாமல்போனது.

2014 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆர்ஜன்டீனா தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பேருவுடன் புள்ளிகள் (25) மற்றும் கோல் வித்தியாசம் (+1) இரண்டிலும் சமநிலையில் உள்ளது. எனினும் பேரு அணி கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

FIFA உலகக் கிண்ண தகுதிகாண் இறுதிக் கட்டப் போட்டிகள் எவ்வாறு இருக்கும்?

கடந்த இரண்டரை ஆண்டுகளில், கிட்டத்தட்ட 800 கால்பந்துப் போட்டிகளில், 2,177 கோல்கள்…

இவ்வாறு புள்ளி வித்தியாசம் மிக குறைவாக காணப்படும் நிலையில், இரண்டாவது இடத்தில் இருக்கும் உருகுவே (28) மற்றும் ஏழாவது இடத்தில் இருக்கும் பரகுவே (24) அணிகளுக்கு இடையில் வெறும் நான்கு புள்ளிகளே வித்தியாசம் உள்ளது. இதனால் ஆர்ஜன்டீனா தனது கடைசி தகுதிகாண் போட்டியில் வென்றால் நேரடி தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

எனினும் தனது கடைசி மூன்று தகுதிகாண் போட்டிகளையும் சமநிலை செய்ய மாத்திரமே முடிந்த ஆர்ஜன்டீன அணி, கடல் மட்டத்தில் இருந்து 2,900 உயரத்தில் உள்ள ஈக்வடோர் தலைநகர் குயிடோவில் அண்மைக்காலத்தில் சோபிக்க தவறியுள்ளது. இங்கு கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்ற ஆர்ஜன்டீனா மற்றைய ஆட்டத்தை சமநிலையிலேயே முடித்தது.

இந்த நிலையிலேயே ஆர்ஜன்டீனா, ஈக்வடோர் தலைநகரில் நடைபெறவுள்ள ஈக்வடோர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. எனினும் ஈக்வடோர் அணி தனது முந்தைய ஐந்து தகுதிகாண் போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

இந்நிலையில் பேரு அணி தனது சொந்த மண்ணில் நான்காவது இடத்தில் உள்ள கொலம்பியாவுடனான போட்டியை குறைந்தது சமநிலையில் முடித்து ஆர்ஜன்டீனா தனது கடைசி போட்டியில் வெற்றி பெறாத பட்சத்தில் ஆர்ஜன்டீனா உலகக் கிண்ணத்தில் விளையாடும் சந்தர்ப்பத்தை இழந்துவிடும்.

தென் அமெரிக்க கண்டத்தில் இதுவரை பிரேஸில் மாத்திரமே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

இதேவேளை பெல்பாஸ்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் வடக்கு அயர்லாந்து அணியை 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்புச் சம்பியன் ஜெர்மனி, உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

அதேபோன்று ஐரோப்பிய மண்டலத்தில் F குழுவில் ஆடும் இங்கிலாந்து அணி புதன்கிழமை (05) நடந்த தகுதிகாண் போட்டியில் ஸ்லோவேனியாவை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் தனது இடத்தை உறுதி செய்துகொண்டது. இதன்போது போட்டியின் மேலதிக நேரத்தில் ஹர்ரி கேன் போட்ட அபார கோலே இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.