இலங்கையின் புதிய உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பு

1319

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஆண்டுக்கூட்டத்தின் போது இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டிற்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொடர் கட்டமைப்பு (Tournament Structure) குறித்து குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதன்படி, அரவிந்த டி சில்வா தலைமயிலான இலங்கை கிரிக்கெட் சபையினுடைய தொழில்நுட்பக் குழுவின் ஆலோசனைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர் கட்டைமைப்பினை சமன்த தொடவெல வடிவமைத்திருக்கின்றார்.

T20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்த இசுரு உதான

புதிய கட்டமைப்பிற்கு ஏற்றவாறு இலங்கை கிரிக்கெட் சபை 2021/22ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கழக Tier A மற்றும் Tier B பிரிவு கிரிக்கெட் தொடர்களில் மாற்றம் மேற்கொள்ளவிருக்கின்றது. தற்போது இருக்கும் கட்டமைப்பிற்கு அமைய Tier A பிரிவில் 14 அணிகளும், Tier B பிரிவில் 12 அணிகளும் காணப்படுகின்றன. அதேநேரம், தற்போது மூன்று நாட்கள் கொண்ட முதல்தர கிரிக்கெட் போட்டிகளும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஆனால், புதிய தொடர் கட்டமைப்பிற்கு அமைய தற்போது உள்ள 26 உள்ளூர் கிரிக்கெட் கழக அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, மேஜர் கிரிக்கெட் கழக முதல்தரக் கிரிக்கெட் தொடரினையும், 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரினையும் விளையாடவுள்ளன. இந்த கிரிக்கெட் தொடர்கள் தற்போது உள்ள நாட்டின் நிலைமையினைக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சின் அனுமதியுடன் இடம்பெறவிருக்கின்றன. 

இந்த புதிய தொடர் கட்டமைப்பில் ஒவ்வொரு அணியும் 3 நாட்கள் கொண்ட 12 முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளிலும், 12 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளன. 

இந்த கிரிக்கெட் தொடரின் ஒவ்வொரு குழுவிலும் இறுதி இரண்டு இடங்களைப் பெறும் அணிகளுக்கு, அடுத்த பருவகாலத்தில் இருந்து நடைபெறும் ஆளுனர் கிண்ணத் தொடரில் (Governor’s Trophy) விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மறுமுனையில், குறித்த தொடரில் முதல்தரப் போட்டிகளில் இரண்டு குழுக்களிலும் முதலில் வரும் அணிகள் இரண்டும், உள்ளூர் கிரிக்கெட் தொடரின் சம்பியன் கழகத்தினை தெரிவு செய்வதற்காக நடைபெறும் நான்கு நாட்கள் கொண்ட போட்டியில் பங்கேற்கவிருக்கின்றன. 

மட்டுப்படுத்த ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் இரண்டு அணிகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றின் இடையே தொடரின் அரையிறுதி, இறுதிப் போட்டிகள் என்பன நடைபெறவுள்ளன. 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் குசல்!

இலங்கை கிரிக்கெட் சபையின் தொடர் ஏற்பாட்டுக்குழுவானது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கிரிக்கெட் தொடர்களினுடைய இறுதிப்போட்டிகள் அனைத்தினையும் 2022ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கு முன்னர் நடாத்தி முடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

இதற்கு மேலதிகமாக தேசிய சுபர் லீக் (National Super League) என்னும் புதிய கிரிக்கெட் தொடரும் ஒழுங்கு செய்யப்படவிருக்கின்றது. இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கையின் முக்கிய நகரங்களாக காணப்படும் காலி, கொழும்பு, கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 இடங்களினை பிரதிநிதித்துவம் அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றன. இந்த தொடர், இலங்கையின் பிரதான உள்ளூர் கிரிக்கெட் தொடராக கருதப்படுவதாக கூறப்பட்டிருக்கின்றது.  

இந்த தொடரில் பங்கெடுக்கும் வீரர்கள் கழகங்கள் இடையே நடைபெறும் கிரிக்கெட் தொடரில் வெளிப்படுத்தும் ஆட்டத்திற்கு அமைய தெரிவு செய்யப்படவிருக்கின்றனர். தேசிய சுபர் லீக் தொடரானது நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகளாவும், 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாகவும் இடம்பெறவுள்ளன. அதேநேரம், தொடரின் போட்டிகள் யாவும் எதிர்வரும் ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

எவரஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கும் சீக்குகே பிரசன்ன

இந்த ஆண்டு இரண்டாவது பருவகாலத்திற்கான லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் காரணத்தினால், கழகங்கள் இடையிலான மேஜர் லீக் T20 தொடர் இந்த ஆண்டு நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

புதிய கட்டமைப்பானது 2023/24, 2023/24 வரையிலான பருவகாலங்களுக்கு முதலில் செல்லுபடியாகுமாறு உருவாக்கப்பட்டிருப்தோடு 2024ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் 15 முதல்தரக் கிரிக்கெட் கழகங்களே காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 2023/24ஆம் ஆண்டுக்கான தொடரின் பின்னர், 3 அணிகளே ஆளுனர் கிண்ணத்தொடரில் ஆடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படவிருக்கின்றன. 

இதற்கு மேலதிகமாக இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் 23 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் பங்குபெறும் கழக அணிகள் 22 இடையிலான மேஜர் எமர்ஜிங் கிரிக்கெட் தொடரும் இடம்பெறவிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<