ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டியில் அனித்தா, ஹெரினாவுக்கு வெற்றி

666

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டம் இன்றைய தினம் (27) கொழும்பு சுகததாஸ மைதானத்தில் ஆரம்பமாகியது.

இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் முதலிடத்தையும், சந்திரசேகரன் ஹெரினா மூன்றாவது  இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

கிந்துஷனுக்கு இரட்டைத் தங்கம்: வேகநடையில் வட பகுதி வீரர்கள் அசத்தல்

எனினும், கடந்த 3 தினங்களுக்கு முன் இதே மைதானத்தில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை முறியடித்த அனித்தாவுக்கு, இன்றைய போட்டியில் எதிர்பார்த்தளவு சோபிக்க முடியாமல் போனது.

அதிலும் குறிப்பாக, கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் போது அவர் பயன்படுத்திய புதிய சப்பாத்தினால் இடது காலின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதனையும் பொருட்படுத்தாமல் ஆசிய விளையாட்டு விழாவுக்கான தனது இலக்கினை பூர்த்தி செய்யும் எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டியில் அவர் பங்குபற்றியிருந்தார்.

இதன்படி, ஆரம்பத்தில் 3.30 மீற்றர் உயரத்தை 2 ஆவது முயற்சியில் வெற்றி கொண்ட அனித்தா, அடுத்த இலக்காக 3.45 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்தார். எனினும், காலில் ஏற்பட்ட உபாதை மற்றும் வலி காரணமாக அவரால் அந்த இலக்கை அடைய முடியாது போனது. இறுதியில் 3.30 மீற்றர் உயரத்தை தாவி அவர் ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டிகளுக்கான முதல் கட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், தேசிய சாதனை படைத்து 2 நாட்கள் செல்வதற்கு முன் இவ்வாறு அனித்தாவுக்கு உபாதையுடன் குறித்த தகுதிகாண் போட்டியில் பங்குபற்ற வேண்டிய எந்த தேவையும் கிடையாது. அவருக்கு காயத்திலிருந்து குணமடைந்து இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் நடைபெறவுள்ள 2ஆவது தகுதிகாண் போட்டியில் தாரளமாக பங்குபற்றியிருக்கலாம். அவ்வாறான சூழ்நிலையில் காலில் ஏற்பட்ட காயத்துடன் அவர் போட்டியில் பங்குபற்றியிருந்தமை தொடர்பில் போட்டி நடுவர்கள் போட்டியின் பிறகு மைதானத்தில் வைத்து கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

எனவே, வட மாகாணத்துக்கு அண்மைக்காலமாக தேசிய மட்டத்தில் கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்து வருகின்ற ஒரேயொரு வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற அனித்தாவின், உபாதை மற்றும் உடற்தகுதி தொடர்பில் இனிவரும் காலங்களிலும் அவருடைய பயிற்றுவிப்பாளர் சுபாஸ்கரன் கூடிய அவதானம் செலுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

கிந்துஷனுக்கு இரட்டைத் தங்கம்: வேகநடையில் வட பகுதி வீரர்கள் அசத்தல்

இந்நிலையில், குறித்த போட்டித் தொடரின் 2 ஆவது கட்டம் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் அல்லது ஜுன் மாதம் முற்பகுதியில் இதே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான அடைவுமட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள 3.60 மீற்றருக்கான இறுதி முயற்சியில் அனித்தா வெற்றிபெறுவார் என பெரிதும் நம்பப்படுகின்றது.

ஹெரினாவின் சிறந்த பதிவு

யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் மற்றுமொரு இளம் வீராங்கனயான சந்திரசேகரன் ஹெரினாவும் இன்றைய தினம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டிகளுக்கான முதல் கட்டத்தில் பங்குபற்றியிருந்தார்.

எனினும், கடந்த 3 தினங்களுக்கு முன் இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தனது போட்டி சாதனையை 0.01 மீற்றரினால் தவறவிட்டு 2.90 மீற்றர் உயரத்தைத் தாவிய ஹெரினா, தேசிய மட்ட வீராங்கனைகள் பங்குபற்றிய இன்றைய போட்டியில் 3.10 மீற்றர் உயரத்தைத் தாவி 2  ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் தனது சிறந்த உயரத்தையும் இதன்போது பதிவு செய்தார்.

இப்போட்டியின் ஆரம்பத்தில் 3.00 மீற்றர் உயரத்தை 3 ஆவது முயற்சியில் வெற்றிகொண்ட ஹெரினா, 2 ஆவது சுற்றில் 3.10 மீற்றர் உயரத்தை தாவுவதற்கான சவாலில் முதல் முயற்சியிலேயே வெற்றி கொண்டார்.

இதனையடுத்து மற்றுமொரு முயற்சியாக 3.20 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு ஹெரினா தீர்மானித்தார். எனினும், அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய இறுதியில் 3.10 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்து மூன்றாவது  இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டு விழாவுக்கு மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மொத்தமாக 71 போட்டிகள் நடைபெறவுள்ளது. எனினும் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி எந்தவொரு வீரர்களும் பங்குபற்றவில்லை என்பது கவனிக்கத்தக்கது.