அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா நவம்பரில்

64
All Island School Games
 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவை எதிர்வரும் நவம்பர் 22, 23, 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வி அமைச்சின் பணிப்பாளர் தயா பண்டார, பிரதிக் கல்விப் பணிப்பாளர் உபாலி அமரதுங்க, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ருவன் பத்திரன, தில்ருக் ஜயவர்தன மற்றும் பிரபாத் இந்திக்க ஆகியோரது பங்குபற்றலுடன் இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவை நடத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

அத்துடன், இந்த ஆண்டுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் அனைத்தும் வழமை போன்று மாகாண மட்டத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, 20 வயதுக்குட்பட்ட (ஆண்கள் மற்றும் பெண்கள்), 18 வயதுக்குட்பட்ட (ஆண்கள் மற்றும் பெண்கள்), 16 வயதுக்குட்பட்ட (ஆண்கள் மற்றும் பெண்கள்), 17 வயதுக்குட்பட்ட (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் 12 வயதுக்குட்பட்ட (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய வயதுப் பிரிவுகளில் இம்முறை போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதனிடையே, இந்த ஆண்டு அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் குழுநிலை மற்றும் எடைப் பிரிவு விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் மூன்று கட்டங்களாக இடம்பெறும்.

இதில் முதல் கட்டம் செப்டம்பர் 17, 18 மற்றும் 19 ஆகிய திகதிகளிலும், இரண்டாவது கட்டம் செப்டம்பர் 23, 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளிலும்,

மூன்றாவது கட்டம் ஒக்டோபர் 01, 02, 03 மற்றும் 04 ஆகிய திகதிகளிலும் நடைபெறும்.

இதேவேளை, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவிற்கான கல்வி வலய பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் முதல் சுற்றுப் போட்டிகள் ஜூன் 15ஆம் திகதிக்கு முன்னரும், மாகாண மட்டப் போட்டிகள் செப்டெம்பர் 10ஆம் திகதிக்கு முன்னரும் நடத்தப்படும் என கல்வி அமைச்சின் விளையாட்டு மற்றும் உடற்கல்விப் பிரிவு அறிவித்துள்ளது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<