திமுத், சச்சித்ர அபாரம்: SSC கழகம் 209 ஓட்டங்களால் வெற்றி

200
SLC Premier League

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘A’ மட்டத்திற்கான இரண்டு சுப்பர் 8 போட்டிகள் இன்று நிறைவுபெற்றன. இப்போட்டிகளில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் SSC கழக அணிகள் வெற்றிகளை சுவீகரித்தன.

மேலும் இரண்டு சுப்பர் 8 போட்டிகளின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றதுடன், அப்போட்டிகள் நாளை இறுதி நாளாக இடம்பெறும்.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம்

கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

மஹேல உடவத்த மற்றும் அஷேன் சில்வா ஆகியோர் தலா 52 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொண்ட போதிலும், இராணுவ அணியின் தனுசிக பண்டார (5/36) மற்றும் நளின் பிரியதர்ஷன (4/61) தமக்கிடையே 9 விக்கெட்டுகளை பங்கிட்டுக் கொள்ள, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 190 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அடுத்து களமிறங்கிய இராணுவ விளையாட்டுக் கழகம் எதிரணியின் ஓட்ட எண்ணிக்கையை நெருங்கி வந்த போதிலும், 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேரசிங்க 4 விக்கெட்டுக்களையும் மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். துடுப்பாட்டத்தில் இராணுவ அணியின் டில்ஷான் டி சொய்சா அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

7 ஓட்டங்கள் முன்னிலையில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. மீண்டும் திறமையாக பந்துவீசிய நளின் பிரியதர்ஷன (5/68) மற்றும் விமுக்தி துஷான் (4/37) எதிரணியை 148 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி தங்களது அணிக்கு நம்பிக்கையளித்தனர். சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பில்  தொடக்க வீரர் ஷெஹான் ஜயசூரிய அதிகபட்சமாக 38 ஓட்டங்களை குவித்தார்.

இதன்படி இராணுவ அணிக்கு 156 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அனுபவமிக்க வீரரான மலிந்த புஷ்பகுமார சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, இராணுவ விளையாட்டுக் கழகம் 140 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 15 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக் கொண்டது. இராணுவ அணியின் ஜனித் சில்வா அதிகபட்சமாக 37 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 190 (61.2) – மஹேல உடவத்த 52,  அஷென் சில்வா 52, தனுசிக பண்டார 5/36, நளின் பிரியதர்ஷன 4/61

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 183 (74.2) –  டில்ஷான் டி சொய்சா 47, ஹிமாஷ லியனகே 32, சச்சித்ர சேரசிங்க 4/29, மலிந்த புஷ்பகுமார 3/46

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 148 (36.4) – ஷெஹான் ஜயசூரிய 38, நளின் பிரியதர்ஷன 5/68, விமுக்தி துஷான் 4/37

இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 140 (61) – ஜனித் சில்வா 37, மலிந்த புஷ்பகுமார 5/59

முடிவு: சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 15 ஓட்டங்களினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 16.69

இராணுவ விளையாட்டுக் கழகம் – 4.615


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி கட்டுநாயக்கவில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய SSC அணி அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் சதத்தின் உதவியுடன் 293 ஓட்டங்களை குவித்தது. மேலும் தசுன் ஷாணக 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சார்பாக பந்துவீச்சில் தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுகளையும் இஷான் ஜயரத்ன 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக் கொண்டனர்.

அடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிரணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 100 ஒட்டங்களுக்கே சுருண்டது. அவ்வணியின் தொடக்க வீரர் சதீர சமரவிக்ரம அதிகபட்சமாக 22 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட சச்சித்ர சேனநாயக்க 4 விக்கெட்டுகளையும் கசுன் மதுஷங்க மற்றும் விமுக்தி பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதமும் பதம்பார்த்தனர்.

193 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த SSC கழகம், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவ்வணியின் கவிந்து குலசேகர 54 ஓட்டங்களையும் கீழ்வரிசை வீரர் கசுன் மதுஷங்க 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். மீண்டும் பந்துவீச்சில் அசத்திய தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுக்களையும் நிசல தாரக 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிக் கொண்டனர்.

இதன்படி கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு 387 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இம்முறையும் சிறப்பாக பந்துவீசிய சச்சித்ர சேனநாயக்க 4 விக்கெட்டுகளையும் விமுக்தி பெரேரா மூன்று விக்கெட்டுக்களையும் பதம்பார்க்க, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் தனித்து போராடிய கீழ்வரிசை வீரர் இஷான் ஜயரத்ன 40 பந்துகளில் 7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 85 ஓட்டங்களை விளாசினார்.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 293 (85) – திமுத் கருணாரத்ன 125, தசுன் ஷானக 59, கவிந்து குலசேகர 44*, தில்ருவன் பெரேரா 4/75, இஷான் ஜயரத்ன 3/64

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 100 (31) – சதீர சமரவிக்ரம 22, சச்சித்ர சேனநாயக்க 4/31, விமுக்தி பெரேரா 3/20, கசுன் மதுஷங்க 3/49

SSC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 193 (57.3) – கவிந்து குலசேகர 54, கசுன் மதுஷங்க 48, தில்ருவன் பெரேரா 4/56, நிசல தாரக 3/46

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 177 (27.5) – இஷான் ஜயரத்ன 85, சச்சித்ர சேனநாயக்க 4/53, விமுக்தி பெரேரா 3/36

முடிவு: SSC கழகம் 209 ஓட்டங்களினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

SSC கழகம் – 17.43

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 4.385


NCC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

NCC கழகம் தமது முதல் இன்னிங்சிற்காக 265 ஓட்டங்களையும், ராகம் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் 127 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.

இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வந்த NCC அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றிருந்தது. இன்று அவ்வணி 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் இன்னிங்சின் போது சகல துறைகளிலும் திறமையை வெளிக்காட்டிய சதுரங்க டி சில்வா இம்முறை 78 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், ஜெஹான் முபாரக் 49 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் ராகம அணியின் திலக்ஷ சுமனசிறி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி ராகம் அணிக்கு 352 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை நோக்கி களமிறங்கிய அவ்வணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை பெற்றிருந்தது. லஹிரு மிலந்த 59 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், பொறுமையாக துடுப்பெடுத்தாடி வரும் தொடக்க வீரர் ஜனித் லியனகே 56 ஓட்டங்களுடன் களத்திலுள்ளார். மீண்டும் பந்துவீச்சில் தனது கைவரிசையை காட்டிய சதுரங்க டி சில்வா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 265 (62) – சதுரங்க டி சில்வா 83, எஞ்சலோ பெரேரா 59, சதுர பீரிஸ் 4/60

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 127 (47.3) – சமீர டி சொய்சா 57, சதுரங்க டி சில்வா 4/21, பர்வீஸ் மஹ்ரூப் 3/28

NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 213 (53.5) – சதுரங்க டி சில்வா 78, ஜெகன் முபாரக் 49, திலக்ஷ சுமனசிறி 3/28

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 161/4 (65) – லஹிரு மிலந்த 59, ஜனித் லியனகே 56*, சதுரங்க டி சில்வா 3/43

நாளை போட்டியின் நான்காவதும் இறுதியுமான நாளாகும்.


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்ட 377 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழகம் நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகளை இழந்து 406 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அபாரமாக துடுப்பெடுத்தாடியிருந்த ரொன் சந்திரகுப்த நேற்று 157 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தார். அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய லஹிரு மதுஷங்க 164 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்று ஆட்டமிழந்தார். அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய கீழ்வரிசை வீரர் ஷாலுக சில்வா 63 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி கொழும்பு கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 497 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. தமிழ் யூனியன் அணி சார்பில் சாமிக கருணாரத்ன 4 விக்கெட்டுக்களையும் லஹிரு சமரகோன் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

மழையின் காரணமாக குறைந்தளவு ஓவர்களே வீசப்பட்ட நிலையில், தமிழ் யூனியன் அணியினர் இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 63 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 377 (87.3) – கித்ருவன் விதானகே 130, மனோஜ் சரத்சந்திர 63, சாமிக கருணாரத்ன 50, ஜீவன் மெண்டிஸ் 40, லஹிரு மதுஷங்க 4/77, லஹிரு கமகே 3/83

கொழும்பு கிரிக்கெட் கழகம்  (முதல் இன்னிங்ஸ்) – 497 (112.1) – ரொன் சந்திரகுப்த 157, லஹிரு மதுஷங்க 164, ஷாலுக சில்வா 63, சாமிக கருணாரத்ன 4/128, லஹிரு சமரகோன் 3/102

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 63/2 (18)

நாளை போட்டியின் நான்காவதும் இறுதியுமான நாளாகும்.

இதேவேளை பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளின் தட்டு (Plate) பிரிவிற்கான 3 போட்டிகள் இன்றைய தினம் நிறைவடைந்தன.

பதுரேலிய விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

இப்போட்டி BRC மைதானத்தில் இடம்பெற்றதுடன், நாணய சுழற்சியில் வென்ற சோனகர் விளையாட்டுக் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஹன் விஜேரத்ன சதம் கடந்த நிலையில் 102 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் மற்றைய வீரர்களில் ஒருவரேனும் 40 ஓட்டங்களைக் கடக்காத காரணத்தினால் பதுரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 88.1 ஓவர்களில் 300 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் சோனகர் விளையாட்டுக் கழகத்தின் நிலங்க சந்தகன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சோனகர் விளையாட்டுக் கழகம், பபசார வடுகே பெற்றுக் கொடுத்த 71 ஓட்டங்களின் உதவியுடன் 214 ஓட்டங்களை குவித்தது. பதுரேலிய விளையாட்டுக் கழகம் சார்பாக பந்துவீச்சில் அசத்திய டிலேஷ் குணரத்ன மற்றும் அலங்கார அசங்க 4 விக்கெட்டுகள் வீதம் பதம்பார்த்தனர்.

86 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பதுரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஹன் விஜேரத்ன ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களை குவித்தார். நதீர நாவல 82 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் பிரமோத் மதுவந்த 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

17 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் 346 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சோனகர் விளையாட்டுக் கழகம், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் நிறைவு செய்து கொண்டது. 4 விக்கெட்டுக்களையும் பதுரேலிய அணியின் துவிந்து திலகரத்ன வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 300 (88.1) – சஹன் விஜேரத்ன 102, சாலிய சமன் 38, நிலங்க சந்தகன் 5/52

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 214 (68.5) – பபசார வடுகே 71, ப்ரிமோஷ் பெரேரா 46, டிலேஷ் குணரத்ன 4/54, அலங்கார அசங்க 4/70

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 259/8 (81.1) – சஹன் விஜேரத்ன 100, நதீர நாவல 82, பிரமோத் மதுவந்த 4/53

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 76/4 (17) – துவிந்து திலகரத்ன 4/40

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

பதுரேலிய விளையாட்டுக் கழகம் – 12.895

சோனகர் விளையாட்டுக் கழகம் 4.15


BRC கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

BRC கழகம் மற்றும் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான போட்டி பனாகொட இராணுவப்படை மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புளூம்பீல்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர் நிசல் பிரான்சிஸ்கோ 79 ஓட்டங்களை குவித்ததுடன், அணித்தலைவர் நிபுன் கருணாநாயக்க 98 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்படி அவ்வணி 317 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் அசத்திய BRC அணியின் தினுக ஹெட்டியாரச்சி 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

அடுத்து துடுப்பெடுத்தாடிய BRC அணி சாணக விஜேசிங்கவின் சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்டுகளை இழந்து 391 ஓட்டங்களை பெற்றிருந்தது. சாணக விஜேசிங்க ஆட்டமிழக்காது 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், பானுக ராஜபக்ஷ 52 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். புளூம்பீல்ட் அணியின் மலித் டி சில்வா 5 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 317 (99.2) – நிபுன் கருணாநாயக்க 98, நிசல் பிரான்சிஸ்கோ 79, தினுக ஹெட்டியாரச்சி 6/103

BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 391/9 (117) – சாணக விஜேசிங்க 130*, பானுக ராஜபக்ஷ 52, மலித் டி சில்வா 5/91

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

BRC கழகம் – 11.455

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 2.935


காலி கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி புளூம்பீல்ட் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அவ்வணியின் மின்ஹாஜ் ஜலீல் மற்றும் தமித ஹுனுகும்புர முதல் விக்கெட்டிற்காக 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். தமித ஹுனுகும்புர 97 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தவிர நிலூஷன் நோனிஸ் 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட போதிலும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன் காரணமாக காலி கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 301 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட கசுன் ராஜித 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், சதுர ரந்துனு 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து களமிங்கிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 315 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டது. சதம் குவித்த மிலிந்த சிறிவர்தன (115) மற்றும் அரைச்சதம் கடந்த உமேஷ் கருணாரத்ன (57) அணிக்கு வலுவளித்தனர். பந்துவீச்சில் காலி கிரிக்கெட் கழகத்தின் சஜீவ வீரகோன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய காலி கிரிக்கெட் கழகம், 5 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. மீண்டும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நிலூஷன் நோனிஸ் ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களை குவித்தார். ஷாலிக கருணாநாயக்க 72 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

15 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் 246 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடுகளம் பிரவேசித்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் நிறைவு செய்து கொண்டது.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 301 (86.3) – தமித ஹுனுகும்புர 97, நிலூஷன் நோனிஸ் 65, மின்ஹாஜ் ஜலீல் 40, கசுன் ராஜித 5/57, சதுர ரந்துனு 3/85

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 315 (82.4) – மிலிந்த சிறிவர்தன 115, உமேஷ் கருணாரத்ன 57, சஜீவ வீரகோன் 4/121

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 259/5d (54) – நிலூஷன் நோனிஸ் 108*, ஷாலிக கருணாநாயக்க 72, டில்ஹான் குரே 40

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 84/2 (15) – தெனுவன் ராஜகருண 40

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது.