ஆடவர் ஆசிய தகுதிகாண் ஹொக்கியில் இலங்கைக்கு முதல் தோல்வி

114

ஆசிய விளையாட்டு விழா ஹொக்கி போட்டிக்கு அணிகளை தேர்ந்தெடுக்கும் நோக்கில் தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்று வருகின்ற ஆடவருக்கான ஹொக்கி தகுதிகாண் போட்டியில் B குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, நேற்று (10) பங்களாதேஷிடம் 3 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் பங்களாதேஷ் ஹொக்கி அணி ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதி செய்தது.

இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவிருந்த ஆசிய விளையாட்டு விழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2023 வரை ஒத்திவைக்கப்பட்டது. எனினும், ஆசிய விளையாட்டு விழாவில் இடம்பெற்றுள்ள போட்டி நிகழ்ச்சிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டு விழா ஆடவர் ஹொக்கியில் பங்குபற்றவுள்ள அணிகளை தேர்ந்தெடுகின்ற தகுதிகாண் போட்டிகள் தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்று வருகின்றது.

9 நாடுகள் பங்குபற்றியுள்ள இந்த தகுதிகாண் போட்டியில் B குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, நேற்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷை எதிர்கொண்டது.

போட்டியின் 44ஆவது நிமிடத்தில் விபுல் வர்ணகுல இலங்கைக்காக கோல் ஒன்றை பெற்றுக்கொடுத்தாலும், போட்டியின் 18, 23 மற்றும் 53 ஆகிய நிமிடங்களில் பங்களாதேஷ் அணி 3 கோல்களை அடித்து அசத்த, 3க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

முன்னதாக கடந்த 7ஆம் திகதி சிங்கப்பூருக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 5 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

இதனிடையே, இலங்கை தனது கடைசி லீக் போட்டியில் இந்தோனேசியாவை நாளை வியாழக்கிழமை (12) எதிர்த்தாடவுள்ளது. அப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் முதல் 4 இடங்களைத் தீர்மானிக்கும் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெறும்.

இலங்கை ஆடவர் ஹொக்கி அணி இறுதியாக 2014ஆம் ஆண்டு தென் கொரியாவின் இன்ச்சியோங்க் நகரில் நடைபெற்ற 17ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<