2022 ஆசிய விளையாட்டு விழா திடீர் ஒத்திவைப்பு

251

சீனாவில் ஹாங்ஷூ நகரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த 19ஆவது ஆசிய விளையாட்டு விழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆசிய ஒலிம்பிக் பேரவை இன்று (06) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்ஷூ நகரில் எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, சீனாவின் தலைநகர் பிஜீங் உள்ளிட்ட பல இடங்களில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருவதுடன், ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக எதிர்வரும் செப்டம்பர் 10 முதல் 25ஆம் திகதி வரை ஹாங்ஷூ நகரில் நடைபெறவிருந்த ஆசிய விளையாட்டு விழா 2023 வரை ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் பேரவை இன்று அறிவித்துள்ளது.

மேலும், ஒத்திவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டு விழாவின் புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆசிய ஒலிம்பிக் பேரவை தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் ஆசிய ஒலிம்பிக் பேரவை வெளியிட்ட ஊடக அறிக்கையில்,

”கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், ஹாங்ஷூ நகரில் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு ஆசிய விளையாட்டு விழா ஏற்பாட்டுக் குழு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது. இருப்பினும், கொரோனா தொற்றுநோய் நிலைமை மற்றும் ஆசிய விளையாட்டு விழாவிற்கு ஏற்படுகின்ற ஆபத்தை கவனமாகப் பரிசீலித்தபின் அனைத்து தரப்பினருடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த பெப்பரவரி மாதம் கடுமையான உயிரியல் பாதுகாப்பு வலையத்திற்கு மத்தியில் 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் விழா வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பரில் சீனாவின் சாந்தோவில் நடைபெறவிருந்த 3ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டு விழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆசிய ஒலிம்பிக் பேரவை இன்று (06) அறிவித்தது.

இதனிடையே, எதிர்வரும் ஜூன் 26 முதல் ஜூலை 7 வரை சீனாவில் செங்டுவில் உலக பல்கலைக்கழக விளையாட்டு விழா நடைபெறவுள்ளது. எனினும், சீனாவில் தற்போது வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக குறித்த விளையாட்டு விழாவும் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<