தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் ஜூன் மாதத்தில்

31
 

கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்த இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 7, 8, 9, 10ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச அரங்கில் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டவாறு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 9ஆம் திகதி இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், அரச ஆதரவாளர்களுக்கும் இடையே நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

இதனையடுத்து குறித்த தினத்தன்று பிற்பகல் மேல் மகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்காரணமாக கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுக் கொண்டிருந்த தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 16 வயதுக்குட்பட்ட, 18 வயதுக்குட்பட்ட, 20 வயதுக்குட்பட்ட, 23 வயதுக்குட்பட்ட ஆகிய நான்கு வயது பிரிவுகளில் மொத்தம் 124 இறுதிப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதில் போட்டிகளின் முதல் நாளான கடந்த 9ஆம் திகதி 26 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்ட போதிலும், 19 போட்டி நிகழ்ச்சிகள் மாத்திரம் தான் நடத்தி முடிக்கப்பட்டன.

இதன்படி, எஞ்சிய 105 போட்டிகள் (தகுதிகாண் சுற்று உட்பட) எதிர்வரும் ஜூன் மாதம் 7, 8, 9, 10ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன.

இதற்கமைய, ஜூன் 7ஆம் திகதி 10 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகளையும், அதனைத்தொடர்ந்து 8ஆம் திகதி 49 போட்டி நிகழ்ச்சிகளையும், 9ஆம் திகதி 18 போட்டி நிகழ்ச்சிகளையும், 10ஆம் திகதி 32 போட்டி நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை கொலம்பியாவில் நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்ட உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான கடைசி தகுதிகாண் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, 20 வயதுக்குட்பட்ட உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கையில் இருந்து 4 வீரர்கள் தகுதிபெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 >> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<