ஆசிய விளையாட்டு விழாவுக்குச் சென்று இந்தோனேஷியாவில் உயர்தரப் பரீட்சை எழுதிய அகலங்க

336

நீர்நிலைப் போட்டிகளில் இளம் வயதில் தேசிய சாதனை படைத்தவரும், இலங்கை அணியின் நட்சத்திர நீச்சல் வீரருமான அகலங்க பீரிஸ் இம்முறை ஆசிய விளையாட்டு விழா நடைபெறும் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இன்று காலை (18) முகங்கொடுத்தார்.

ஜகார்த்தாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட பரீட்சை நிலையத்தில் வைத்து அவர் பொது அறிவு வினாப் பத்திரத்தை எழுதினார்.

ஆசிய விளையாட்டு விழா இன்று ஜகார்த்தாவில் கோலாகலமாக ஆரம்பம்

கொழும்பு புனித பேதுரு கல்லூரியில் கல்வி பயின்று வருகின்ற 19 வயதுடைய அகலங்க பீரிஸ், கல்வியைப் போல விளையாட்டிலும் அதீத திறமை கொண்டவர். கல்வி பொதுத்தராதர சதாரண தரப் பரீட்சையில் 9 A சித்திகளைப் பெற்றுககொண்ட அவர், வணிகப் பிரிவில் கல்வி பயின்று வருவதுடன், இம்முறை உயர்தரப் பரீட்சைக்காகவும் தோற்றவிருந்தார்.
இது இவ்வாறிருக்க, இந்தோனேஷியாவில் இன்று ஆரம்பமாகவுள்ள (18) ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை நீச்சல் அணியிலும் இடம்பெற்றிருந்த அகலங்கவுக்கு அதே காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்தோனேஷியாவிற்குச் சென்று நாட்டுக்காகக் போட்டியிட்டு தங்கப் பதக்கமொன்றைப் பெற்றுக் கொடுப்பதா? அல்லது இலங்கையில் இருந்து உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்து பல்கலைக்கழகத்துக்கு போவதா? என்று அங்கலாயத்துக் கொண்டிருந்த அகலங்கவுக்கு அவருடைய பெற்றோர் மற்றும் பயிற்சியாளரது முயற்சியினால் இந்தோனேஷியாவில் இருந்து பரீட்சையை எழுதுவதற்கான அரிய வாய்ப்பை இந்நாட்டின் கல்வித்துறை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்தனர். இதற்காக கல்வி அமைச்சின் விளையாட்டு மற்றும் உடற்தகுதி பிரிவின் பணிப்பாளர் கேர்னல் மஞ்சுள காரியவசம் முன்நின்று செயற்பட்டார்.

தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அகலங்க போன்று கல்வியிலும், விளையாட்டிலும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற வீரர்களின் எதிர்காலம் குறித்து கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்தார்.

இதனையடுத்து அனைவரதும் ஏகபோவித்த முடிவுக்கு அமைய அகலங்க பீரிஸிற்கு இந்தோனேஷியாவில் இருந்தவாறு பரீட்சை எழுதத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் பூரண அனுசரணையுடன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அனுமதியுடன், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் இந்தப் பரீட்சையை மேற்பார்வை செய்வதற்காக இந்தோனேஷியா நோக்கி பயணமாகியிருந்தனர்.

FA கிண்ண 64 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

இந்நிலையில், ஜகார்த்தாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட பரீட்சை நிலையத்தில் வைத்து இன்று காலை 10 மணியளவில் (இலங்கை நேரப்படி 8.30 மணிக்கு) அகலங்க பீரிஸ் பொது அறிவு வினாப் பத்திரத்துக்கு முகங்கொடுத்தார். பொதுவாக இலங்கையில் பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கு பின்பற்றப்படுகின்ற அனைத்துவிதமான நடைமுறைகளும் இந்த மாணவருக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு முன்னர் அகலங்க பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் முதல் தடவையாக இவ்வாறான நல்லதொரு காரியத்தைச் செய்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. நாளை (19) முதல் எனது போட்டிகள் அனைத்தும் ஆரம்பமாகின்றன. போட்டியைப் போல பரீட்சையையும் சிறந்த முறையில் முகங்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன். 20 ஆம் திகதி நான் மிகவும் விரும்புகின்ற 50 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் போட்டி நடைபெறவுள்ளது.அதேபோல இங்கு ஆங்கில மொழிப் பரீட்சையும் நடைபெறவுள்ளது.எனவே இந்த இரண்டையும் சிறந்த முறையில் எதிர்கொள்வதற்கு தயாரிகியுள்ளேன். அதேபோல, எனக்கு இங்கு வந்து பரீட்சை எழுதுவதற்கு வாய்ப்பு அளித்த எனது பெற்றோர், பயிற்சியாளர், கல்வி அமைச்சின் அதிகாரிகள், தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள், ஜகார்த்தாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என தெரிவித்தார்.

ஜகார்த்தாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தனுஷ்க எம் பெரேரா, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா ஆகியோரைப் படத்தில் காணலாம்

இதன்போது, ஜகார்த்தாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தனுஷ்க எம் பெரேரா, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இலங்கையின் பரீட்சை துறை வரலாற்றில் மாணவர் ஒருவருக்கு வெளிநாடொன்றில் வைத்து கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் தேசிய பரீட்சை ஒன்றில் தோற்றுவதற்கு வழங்கப்படும் முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது.

இதன் மூலம் இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த இலங்கையின் பரீட்சைகளுக்கான கட்டுப்பாடுகள் முதல் தடவையாக தளர்த்தப்பட்டதுடன், கல்வியைப் போன்று விளையாட்டும் மாணவர்களுக்கு முக்கியமானது என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ள தனது முதலாவது போட்டியில் பங்குகொள்ளவுள்ள அகலங்க பீரிஸ், போட்டியின் பிறகு ஆங்கில வினாப்பத்திரத்துக்கு முகங்கொடுக்கவுள்ளார்.

மாலிங்கவின் எதிர்காலம் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு

அதன்பிறகு, 21 ஆம் திகதி நடைபெறவுள்ள கணக்கியல் பகுதி ஒன்றுக்கான வினாப்பத்திரத்துக்கு விடை எழுதுவதற்கான ஏற்பாடுகள் ஜகார்த்தாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

50 மீற்றர் பின்நோக்கிய நீச்சல், 100 மீற்றர் பின்நோக்கிய நீச்சல் மற்றும் 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சி ஆகிய நீச்சல் பிரிவுகளில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரராகவும் அகலங்க பீரிஸ், முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை குழாமிலும் இடம்பெற்றிருந்தார்.

ஓட்டுமொத்தத்தில் அகலங்க பீரிஸினால் இந்த நாட்டுக்காக பெற்றுக்கொடுக்கவுள்ள வெற்றிகளும், அவருடைய பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பெற்றுக்கொடுத்த இந்த முன்மாதிரியானது இந்த நாட்டிலுள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் சிறந்த முன் உதாரணம் என்பதில் சந்தேகம் கிடையாது.

எனவே, அகலங்கவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கமும், உயர்தரப் பரீட்சையில் மூன்று A சித்திகளும் கிடைக்க வேண்டும் என எமது இணையத்தளத்தின் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க