பங்களாதேஷிற்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

172
Getty Images

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 13  பேர் அடங்கிய நியூசிலாந்து வீரர்கள் குழாம் இன்று (22) வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி அந்நாட்டு வீரர்களுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடுகின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் முதற்கட்டமாக இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்து, அதில் பங்களாதேஷ் அணி 3-0 என வைட்வொஷ் செய்யப்பட்டிருக்கும் நிலையில் டெஸ்ட் தொடர் இம்மாதம் 28ஆம் திகதி ஹமில்டன் நகரில் நடைபெறும் போட்டியுடன் ஆரம்பமாகின்றது.

சாதனையுடன் ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து அணி

இந்த டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் நியூசிலாந்து அணியில் 32 வயதான வலதுகை சுழற்பந்து வீச்சாளர் டோட் அஸ்ல், அஜாஸ் பட்டேலின் இடத்தினை பிரதியீடு செய்து அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கின்றார்.

நியூசிலாந்து அணிக்காக கடந்த ஆண்டின் நடுப்பகுதியிலேயே கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய டோட் அஸ்ல், முழங்கால் உபாதை ஒன்றின் காரணமாக அணியில் இருந்து ஓய்வு பெற்ற  பின்னர் பங்களாதேஷ் அணியுடனான இந்த டெஸ்ட் தொடரின் மூலமே மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், டோட் அஸ்ல் ஓய்வு பெற்றிருந்த காலத்தில், நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாயிருந்த அஜாஸ் பட்டேல் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை அடுத்து நடைபெற்ற போட்டிகளில் ஜொலிக்காத காரணத்தினால் அவருக்கு பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதேநேரம், காய அச்சுறுத்தல் ஒன்றின் காரணமாக பந்துவீச்சு சகலதுறை வீரர் மிச்செல் சான்ட்னரும் நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கத் தவறியிருக்கின்றார்.

அதேவேளை, இலங்கை அணியுடனான நியூசிலாந்து அணியின் கடைசி டெஸ்ட் தொடரின் போது உள்வாங்கப்பட்டிருந்த அறிமுக வீரர் வில் யங், இத்தொடரிலும் நீடிக்கின்றார்.

இதுதவிர வேறு மாற்றங்கள் எதுவும் நியூசிலாந்து டெஸ்ட் குழாத்தில் இடம்பெறவில்லை. தமது கடைசி டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை எதிர்கொண்ட அதே நியூசிலாந்து அணியே பங்களாதேஷ் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கின்றது.

 140ஆவது முறையாக இடம்பெற காத்திருக்கும் நீலங்களின் சமர்

நியூசிலாந்தின் டெஸ்ட் குழாம் பற்றி கருத்து வெளியிட்டிருந்த அதன் சிரேஷ்ட தேர்வாளர் கவின் லேர்சன், “நாங்கள் நிலைமைகளினையும், உபாதைகளினையும் கருத்திற் கொண்டு சுழற்பந்து வீச்சு தொகுதியை மட்டுமே அணியில் மாற்றியிருக்கின்றோம். அதிர்ஷ்டவசமாக எங்களிடம் தரம்வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பதால், ஐக்கிய அரபு இராச்சிய சுற்றுப் போட்டியில் நட்சத்திரமாக மாறிய அஜாஸ் பட்டேலின் மேல் ஒரு அழுத்தமான முடிவு ஒன்றை மேற்கொள்ள வேண்டியதாக போய்விட்டது. “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

நியூசிலாந்து டெஸ்ட் குழாம்

கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டோட் அஸ்ல், ட்ரென்ட் போல்ட், கொலி டி கிரான்ட்ஹோமே, மேட் ஹேன்ரி, டோம் லேதம், ஹென்ரி நிக்கோல்ஸ், ஜீட் ராவல், டிம் செளத்தி, ரொஸ் டெய்லர், நெயில் வேக்னர், பி.ஜே. வேட்லிங், வில் யங்

டெஸ்ட் தொடர் அட்டவணை

முதல் டெஸ்ட் போட்டி – பெப்ரவரி 28ஆம் திகதி தொடக்கம் மார்ச் 04ஆம் திகதி வரை –  ஹமில்டன்

இரண்டாவது டெஸ்ட் போட்டி – மார்ச் 08ஆம் திகதி தொடக்கம் மார்ச் 12ஆம் திகதி வரை – வெலிங்டன்

மூன்றாவது டெஸ்ட் போட்டி – மார்ச் 16ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை – கிறிஸ்ட்சேர்ச்

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க