2011 உலகக் கிண்ணத்தில் 90% உடற்குதியுடன் இருந்தேன் – முரளிதரன்

2705

கடந்த 2011 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தான் 100 சதவீத உடற்தகுதியுடன் இல்லாவிட்டாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டு 90 சதவீத உடற்தகுதியுடன் தான் விளையாடியிருந்ததாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.  

21ஆம் நூற்றாண்டின் மதிப்புமிக்க வீரராக முரளிக்கு மகுடம்

மும்பைவான்கடே மைதானத்தில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாகவும், உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்கு தாரைவார்த்ததாகவும் இலங்கையின் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்த கருத்தானது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகப் பெரிய பேசும் பொருளாக மாறியது.  

இதனிடையே, குறித்த குற்றச்சாட்டுக்கு எதிராக 2011 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடிய குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, லசித் மாலிங்க மற்றும் அப்போதை தேர்வுக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா ஆகியோர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டியிருந்தனர். அத்துடன், அதற்கான ஆதரத்தை .சி.சியின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில், குறித்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் விளையாடியிருந்த இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரன் நுவரெலியாஹங்குரன்கெதவில் நேற்றுமுன்தினம் (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பிறகு கருத்து தெரிவிக்கையில்,   

”முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்தை நான் கேட்டேன். அதில் அவர் ஆட்டநிர்ணயத்துடன் இலங்கை அணியில் விளையாடிய எந்தவொரு வீரரும் தொடர்பில்லை என தெரிவித்திருந்தார்

எனவே, அவர் அவ்வாறு உறுதியாக சொல்லும் போது எனக்கு எப்படி இந்த விடயம் தொடர்பில் பேச முடியும். ஆகவே முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.

உலகக் கிண்ணத் தொடரின்போது தான் உபாதையுடன் இருந்ததாகத் தெரிவித்த முரளி, தான் அணிக்குள் இடம்பிடித்த முறையினையும் விபரித்தார். 

”எனக்கு ஏற்பட்ட உபாதை காரணமாகத் தான் 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் என்னால் விளையாட முடியாமல் போனது. குறிப்பாக, உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பாகவே நான் உபாதையினால் பீடிக்கப்பட்டிருந்தேன்.

எனினும், உடற்தகுதி பரிசோதனையில் தேர்வு பெற்ற காரணத்தால் தான் எனக்கு உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பு கிட்டியது.  

எவ்வாறாயினும், 100 சதவீத உடற்தகுதி இல்லாமல் 90 சதவீத உடற்தகுதியுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டுதான் நான் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியிருந்தேன்.”  

இதேவேளை, குறித்த உலகக் கிண்ணத்தில் இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற இறுதிப் போட்டியின்போது முரளி உள்ளிட்ட 4 வீரர்களுக்குப் பதிலாக புதிய 4 வீரர்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்டனர். இது குறித்தும் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து தெரிவித்திருந்தார். 

ஆட்டநிர்ணயம் தொடர்பில் மஹிந்தானந்தவினால் பொலிஸ் முறைப்பாடு

எனினும், இந்த விடயம் குறித்து முரளி குறிப்பிடுகையில், ”அணித் தேர்வில் என்னுடைய தலையீடுகள் ஒருபோதும் இருக்கவில்லை. ஏனெனில் நான் தேர்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவோ, அணித் தலைவராகவோ, உப தலைவராகவோ இருக்கவில்லை.  

எனவே, அணியில் உள்ள ஒரு சாதாரண வீரராகத் தான் நான் விளையாடியிருந்தேன். எனக்கும், அணித் தேர்வுக்கும் எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை.

நான் இலங்கைக்கான 20 வருடங்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். எவரையும் விமர்சிக்க மாட்டேன். அவ்வாறு எனது வாழ்க்கையில் நான் செய்ததும் கிடையாது

தேர்வாளர்கள் அந்த நிலைமையில் எடுத்த முடிவை நாம் மதிக்க வேண்டும். அப்போது அந்த முடிவு சரியாகத் தான் இருந்திருக்கும். குறிப்பாக, அணித் தேர்வுகள் இடம்பெறுவது அவர்களுடைய ஏகோபித்த முடிவின் படி தான்.  

எனவே, தேர்வாளர்களது முடிவு பற்றி நாங்கள் ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தால் சிறந்த அணியொன்றை தேர்ந்தெடுக்க முடியாமல் போகும்

Catch me if you can: முத்தையா முரளிதரன்

எனவே, அந்த நேரத்தில் தேர்வாளர்கள் எடுத்த முடிவு சரி என்றால் அதற்கு நாங்கள் அனைவரும் ஒத்துப்போக வேண்டும். இவ்வாறு தான் நான் விளையாடிய 20 வருடங்களும் அணித் தேர்வு இடம்பெற்றது” என அவர் தெரிவித்தார்

இதுஇவ்வாறிருக்க, உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டு தடவைகள் நாணய சுழற்சி போடப்பட்டமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு முரளிதரன் பதிலளிக்கையில்,

நாணய சுழற்சியின் போது நான் உடை மாற்றும் அறையில் இருந்தேன். எனினும், போட்டி மத்தியஸ்தரினால் இரண்டு தடவைகள் நாணய சுழற்சி போடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தமை என்னைப் பொறுத்தமட்டில் தவறு கிடையாது” என தெரிவித்தார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<