இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளின் பிறகு நடுவர்களோ, போட்டி மத்தியஸ்தர்களோ அல்லது இரு அணித் தலைவர்களோ ஆடுகளம் குறித்து எந்தவொரு அறிக்கையையும், முறைப்பாட்டையும் சமர்பிக்கவில்லை என்பதால் குறித்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உபதலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

எனினும், காலி சர்வதேச மைதானத்தின் தன்மையை மாற்றியமைத்து ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு அல்-ஜெஸீரா தொலைக்காட்சியினால் வெளியிட்டிருந்த ஆவணப்படத்தில் இலங்கை வீரர்களும் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக கூறும் அல்-ஜெசீரா 

எனவே, இலங்கை கிரிக்கெட்டினால் எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்காமல், ஐ.சி.சி இனால் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அல்-ஜெஸீரா தொலைக்காட்சியினால் இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) வெளியிடப்பட்ட ஆவணப் படம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிலைப்பாடு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று (28) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட குழுவும், இலங்கை கிரிக்கெட்டின் ஊழல் தடுப்புப் பிரிவின் முகாமையாளரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உபதலைவர் மொஹான் டி சில்வா கருத்து வெளியிடுகையில், ”கடந்த காலங்களைப் போன்று இலங்கை கிரிக்கெட் எப்போதும் ஆட்ட நிர்ணயம் இடம்பெறுவதை தடுப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது. அதிலும் கிரிக்கெட் என்பது எமது நாட்டுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். எனவே இந்த விளையாட்டை தூய்மையுடன் முன்னெடுத்துச் செல்வதற்கும், ஆட்ட நிர்ணயம் உள்ளிட்ட விடயங்களை தடுப்பதற்கும் நாம் எப்போதும் பொறுப்புடையவர்களாக செயற்பட்டு வந்தோம்.

ஆனால் குறித்த ஆவணப் படத்தில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் தொடர்பில் தான் அதிகம் பேசப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி இனந்தெரியாத ஒரு நபரை முகாமையாளர் என தெரிவித்தும், அவுஸ்திரேலிய அணியுடனான போட்டி 2 அரை நாட்களில் நிறைவடைந்ததாகவும் அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டோடு தான் நாம் இருக்கின்றோம்.

பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிய இலங்கை

ஏனெனில், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் எமது சுழல் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை கைப்பற்றியது போன்று மறுமுனையில் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். எனவே டெஸ்ட் வரலாற்றை எடுத்துக் கொண்டால் இலங்கை அணியின் பலமாக சுழல் பந்துவீச்சு இருந்து வருகின்றது. முத்தையா முரளிதரன் டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுக்களையும், ரங்கன ஹேரத் 400 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி உலக சாதனை படைத்திருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும். எனவே இலங்கையில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைப்பது சாதாரண ஒரு விடயமாகும்.

அதுமாத்திரமின்றி, இலங்கையில் ஒரு சர்வதேசப் போட்டி நடைபெறுவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்பே ஆடுகளங்களுக்கு பொறுப்பாக உள்ள சர்வதேச ஆடுகள பராமரிப்பாளருக்கு அந்த பொறுப்பை வழங்கிவிடுவோம். அதன்போது நாங்கள் அணியின் முகாமையாளர் மற்றும் தலைவரின் ஆலோசனைக்கமைய எமக்கு சாதகமான முறையிலேயே ஆடுகளங்களை தயார்படுத்துவோம். இது இலங்கைக்கு மாத்திரமல்ல, கிரிக்கெட் விளையாடுகின்ற அனைத்து நாடுகளும் இந்த நடைமுறையைத்தான் பின்பற்றுகின்றன.

அதிலும் குறிப்பாக, இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளின்போது நடுவர்களோ, போட்டி மத்தியஸ்தர்களோ அல்லது இரு அணித் தலைவர்களோ ஆடுகளம் குறித்து எந்தவொரு அறிக்கையையும், முறைப்பாட்டையும் சமர்பிக்கவில்லை என்பதால் குறித்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும், குறித்த ஆட்ட நிர்ணயத்தில் இலங்கை வீரர்களும், பயிற்சியாளர்களும் தொடர்புபட்டுள்ளதால் ஐ.சி.சி இனால் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

அதுமாத்திரமின்றி, இந்த விடயம் தொடர்பில் நாம் கேள்வியுற்றவுடன் நாம் அதனை உடனடியாக ஐ.சி.சி இற்கு தெரியப்படுத்தினோம். மேலும், ஐ.சி.சி இனால் முன்னெடுக்கவுள்ள விசாரணைகளுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

லெக்-ஸ்பின் பிரச்சினைக்கு தீர்வு தருவாரா ஹதுருசிங்க?

எனவே, எமக்கு எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்க வேண்டாம் எனவும், ஐ.சி.சி இனால் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி ஐ.சி.சி கேட்டுக்கொண்டதாகவும்” அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிலையில், ஆட்ட நிர்ணயம் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கும் மூவரடங்கிய குழுவொன்று நேற்று நடைபெற்ற விசேட நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது நியமிக்கப்பட்டது.

இக்குழுவில் இலங்கை கிரிக்கெட்டின் உபதலைவர் மொஹான் டி சில்வா, செயலாளர் எயார் கொமடோர் ரொஷான் பியன்வல மற்றும் பிரசன்ன வீரக்கொடி ஆகியோர் இடம்பெற்றுள்ளதுடன், ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான அறிக்கையொன்றை எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் இந்தக் குழுவினர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கையளிக்கவுள்ளது.

இந்நிலையில், அல்- ஜெஸீரா தொலைக்காட்சி வெளிப்படுத்திய ஆவணப்படத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் குறித்த குழுவினர் இன்று முறைப்பாடு செய்துள்ளனர். இதுதொடர்பில் மொஹான் டி சில்வா கருத்து வெளியிடுகையில்,

”குறித்த விடயம் தொடர்பில் நாம் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்தோம். அதுமாத்திரமின்றி, அல்-ஜெஸீரா தொலைக்காட்சி வெளியிட்டிருந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்ட்ட பெயர்களில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள மூன்று பேரை உடனடியாக பணிநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

சந்தர்ப்பம் கிடைத்தால் எந்த இடத்திலும் விளையாடத் தயார் – மஹேல உடவத்த

இதில் தரிந்து மெண்டிஸ் என்பவர் மாவட்ட பயிற்றுவிப்பாளராகவும், ஜீவந்த குலதுங்க மாகாண பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றனர். ஆனால் தில்ஹார லொகுஹெட்டிகே இலங்கை கிரிக்கெட்டுடன் ஒப்பந்தம் செய்யபட்ட வீரர் அல்ல. அவர் இலங்கைக்காக பதினொரு சர்வதேப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும் தற்போது அவுஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்று மெல்பேர்ன் நகரில் வசித்து வருகின்றார். எனவே அவருக்கு எதிராக எமக்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால் அவரைப் பற்றிய தகவல்கள் ஐ.சி.சி இற்கு தேவைப்பட்டால் அவற்றை நாம் வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்.

அத்துடன், ஜீவந்த குலதுங்க தொடர்பில் எந்தவொரு நேரடி குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டாத காரணத்தால் அவரை பணநீக்கம் செய்ய இதுவரை தீர்மானிக்கவில்லை. எனினும், ஐ.சி.சி இனால் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளை கருத்திற்கொண்டு அவரை தற்காலிகமாக பணிநீக்க செய்ய நடவடிக்கை எடுத்தோம் என அவர் தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<