விராட் கோலி அபாரம்; த்ரில் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா

156
India vs Pakistan Super 12 Match

T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் இன்று (23) பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி விராட் கோலியின் அபார துடுப்பாட்டத்தோடு 04 விக்கெட்டுக்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> அயர்லாந்துக்கு எதிராக இலங்கை இலகு வெற்றி

குழு 2 இல் உள்ள இரு அணிகளுக்கும் இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் போட்டியாக அமைந்த இந்த மோதல் முன்னதாக மெல்பர்ன் நகரில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பாகிஸ்தானுக்கு வழங்கியதோடு, இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணிக்கு தமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் ஏமாற்ற தந்த போதும் அவ்வணி இப்திகார் அஹ்மட் மற்றும் ஷான் மசூத் ஆகியோரின் நிதான ஆட்டத்துடன் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது.

இந்த துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷான் மசூத் அரைச்சதம் பெற்று 42 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுக்க, இப்திக்கார் அஹ்மட் உம் அரைச்சதத்துடன் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 34 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 160 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கிற்கான பயணத்தில் ஒரு கட்டத்தில் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

>> இலங்கை வீரர்கள் சிறந்த மனநிலையுடன் உள்ளனர் – மஹேல ஜயவர்தன

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் இந்திய அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஹார்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி ஆகியோர் 113 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

இந்த இணைப்பாட்டத்துடனும் இறுதிவரை நின்று போராடிய விராட் கோலியின் அபார ஆட்டத்துடனும் இந்திய கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களுடன் அடைந்தது.

>> WATCH – அயர்லாந்தை பதம் பார்த்த குசல் மெண்டிஸின் துடுப்பாட்டம்!

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் விராட் கோலி தன்னுடைய 34ஆவது T20I அரைச்சதத்துடன் 53 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதேநேரம் ஹார்திக் பாண்டியா 37 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 40 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் பாகிஸ்தான் பந்துவீச்சுக்காக ஹரிஸ் ரவூப் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 159I/8 (20) ஷான் மசூத் 52(42)*, இப்திக்கார் அஹ்மட் 51(34), ஹார்திக் பாண்டியா 30/3(4), அர்ஷ்தீப் சிங் 32/3(4)

இந்தியா – 160/6 (20) விராட் கோலி 82(53)*, ஹார்திக் பாண்டியா 40(37), மொஹமட் நவாஸ் 42/2(4), ஹரிஸ் ரவூப் 36/2(4)

முடிவு – இந்தியா 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<