இந்தியா தொடருக்கான இலங்கை T20I குழாம் அறிவிப்பு

Sri Lanka tour of India 2022

1002

இந்தியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (21) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை 18 பேர்கொண்ட குழாத்தை பெயரிட்டுள்ளதுடன், இதிலிருந்து அவுஸ்திரேலியா தொடரின் போது உபாதைக்குள்ளான மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

>>மூவர்ஸ் அணிக்காக அறிமுக போட்டியில் விக்கெட்டுகளை குவித்த விதுசன்

அவிஷ்க பெர்னாண்டோ முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக சுமார் 3-6 மாதங்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவருடன் உபாதைக்குள்ளாகியுள்ள நுவான் துஷார மற்றும் ரமேஷ் மெண்டிஸ்  ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபையின் 2 கிலோமீற்றர் தூர உடற்தகுதி பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்த பானுக ராஜபக்ஷ இந்த குழாத்தில் இணைக்கப்படவில்லை. இவர் உடற்பருமன் பரிசோதனையில் சித்தியடையாத காரணத்தால், அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து மேற்குறித்த மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக ஒரு வீரர் மாத்திரமே இணைக்கப்பட்டுள்ளார். நடைபெற்றுமுடிந்த டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக்கில் மிகச்சிறப்பாக பந்துவீசிய இளம் சுழல் பந்துவீச்சாளர் அஷைன் டேனியல் இணைக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், இவருக்கான அனுமதி விளையாட்டுத்துறை அமைச்சரிடமிருந்து இதுவரை பெறப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா தொடரில் விளையாடிய ஏனைய வீரர்கள் இந்த குழாத்தில் இடம்பிடித்துள்ளதுடன், தலைவராக தசுன் ஷானகவும், உப தலைவராக சரித் அசலங்கவும் தொடர்ந்தும் பெயரிடப்பட்டுள்ளனர்.

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் எதிர்வரும் 24ம் திகதி லக்னோவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, பிரவீன் ஜயவிக்ரம, அஷைன் டேனியல் (விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதிக்காக)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<