பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிய இலங்கை

639

மேற்கிந்திய தீவுகள் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், இலங்கை அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தினால் இந்த தொடரை வெற்றி கொள்ள முடியம் என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியினர், நேற்று (25) இரவு கரீபியன் தீவுகள் நோக்கி பயணமாகினர்.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்

இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையில் அடுத்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

அத்துடன், தனது தந்தையின் திடீர் மரணத்தையடுத்து மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகிக் கொண்டதுடன், அவருக்குப் பதிலாக மாற்று வீரரை இணைத்துக் கொள்ளாமலேயே இலங்கை அணி நேற்று இந்த சுற்றுப்பயணத்துக்காக புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்குப் புறப்பட்டுச் செல்ல முன், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வருகை தந்திருந்ததுடன், அதன்போது தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர். இதில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரின் ஆயத்தம் குறித்து தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் இந்த தொடருக்கு முழுமையாக தயாராகியுள்ளோம். குறிப்பாக, கடந்த ஒரு வார காலம் நாங்கள் பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற விசேட பயிற்சி முகாமொன்றில் பங்குபற்றியிருந்தோம். அங்கு நாம் அணி செயற்பாடுகள் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் எமக்கு கிடைக்கவுள்ள ஆடுகளங்களை அமைத்து அதில் நாம் பயிற்சிகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் தமது நாட்டில் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதை நன்கு அறிவோம். எனவே ஓர் அணியாக எமது பலத்தையும், திட்டங்களையும் முன்னெடுத்து மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். ஆனால் இத்தொடர் மிகப் பெரிய சவாலாக அமையும், எனவே முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி அதில் வெற்றியைப் பதிவுசெய்து ஏனைய இரு போட்டிகளிலும் அதேபோன்று விளையாடி தொடரை வெல்வதற்கு முயற்சி செய்வோம்.

அதுமாத்திரமின்றி நாம் 10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டெஸ்ட் தொடரொன்றில் விளையாடவுள்ளோம். அதிலும் குறிப்பாக அங்கு நாங்கள் டெஸ்ட் தொடரொன்றை கைப்பற்றவில்லை. எனவே அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தினால் இந்த தொடரை வெற்றி கொள்ள முடியம்” என தெரிவித்தார்.

வேகப்பந்துவீச்சாளர்களின் தொடர் உபாதையும், ஹத்துருசிங்கவின் புதிய வியூகமும்

சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி, இவ்வருடம் முதல்…

”நானும் அங்கு சென்று ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் மாத்திரமே விளையாடியிருக்கின்றேன். எனவே எனது முதல் டெஸ்ட் தொடரும் இதுதான். ரங்கன ஹேரத்தைத் தவிர எமது அணியில் உள்ள எந்தவொரு வீரரும் அங்கு சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது கிடையாது. அதுவும் மிகப் பெரிய சவால்தான். ஆனால் கடந்த வருடம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த ஐந்து வீரர்கள் தற்போது எமது டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். அது எமக்கு மிகப் பெரிய அனுகூலத்தைப் பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறோம்.

அதிலும் குறிப்பாக, மஹேல உடவத்த, குசல் ஜனித் போன்ற வீரர்கள் மீண்டும் டெஸ்ட் அணிக்குள் இடம்பெற்றுள்ளார்கள். எனவே அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு இந்த தொடர் சிறந்த அடித்தளமாக அமையும்” என தெரிவித்தார்.

இதேநேரம், தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் திடீர் மரணம் மற்றும் அவர் இத்தொடரில் பங்கேற்காமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் தனஞ்சய டி சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். என்னைப் போன்று அணியில் உள்ள சகல வீரர்களுக்கும் தனஞ்சயவின் தந்தை மரணமாகியது மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது. அதேநேரம், தனஞ்சய டி சில்வா அணியில் இடம்பெறாமை மிகப் பெரிய இழப்பாகும். இறுதியாக நடைபெற்ற நான்கு தொடர்களில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவித்திருந்ததுடன், அணிக்கு வெற்றியையும், அதேபோன்று அணியை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு காரணமாக இருந்த முக்கிய வீரராகவும் இருந்தார். அவர் அணியில் இடம்பெறாமை எமக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தாலும், எமக்கு ஓர் அணியாக முன்னோக்கி செல்ல வேண்டியிருக்கின்றது” என தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை தினேஷ் சந்திமாலின் தலைமையிலான இலங்கை அணி கைப்பற்றி ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய முதல் அணியாக இலங்கை வரலாறு படைத்தது.

இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை எதிர்பார்த்திருக்கும் இலங்கை அணி

இன்றைய கிரிக்கெட் மைதானங்கள் பொதுவாக துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதமகமான ஒன்றாகவே…

இதனையடுத்து நடைபெற்ற இந்தியாவுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என போரடித் தோற்றது. எனினும், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணி, டெஸ்ட் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி மேற்கிந்திய மண்ணில் டெஸ்ட் தொரொன்றை முதல் தடவையாகக் கைப்பற்றிய அணியாக புதிய டெஸ்ட் வரலாறு படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதுமாத்திரமின்றி கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 1000 டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த வீரராக மாறிய 28 வயதான தினேஷ் சந்திமாலின் தலைமைத்துவம் மற்றும் ஆட்டத் திறமை இத்தொடரிலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை ஒரு நாள் மற்றும் டி20 அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், இப்போட்டித் தொடருக்கான ஆயத்தம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

”நாம் இந்த போட்டித் தொடருக்காக நல்ல முறையில் தயாரிகியிருந்தோம். ஆனால் மழை காரணமாக தடங்கல்கள் ஏற்பட்டாலும், கண்டிக்குச் சென்று பயிற்சிகளை முன்னெடுத்திருந்ததுடன், கொழும்பிற்கு வந்து உள்ளக அரங்கிலும் பயிற்சிகளை செய்தோம். எனவே அங்கு சென்று சிறப்பாக விளையாட முடியும் என எதிபார்த்துள்ளேன்.

உபாதை காரணமாக கடந்த காலங்களில் என்னால் விளையாட முடியாது போனது. எனினும், தற்போது பூரண குணமடைந்து எனது உடற்தகுதியை நிரூபித்து மீண்டும் அணிக்குள் இடம்பெற்றுள்ளேன். அதிலும் குறிப்பாக மாகாண அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் போட்டியொன்றிலும், ஒரு நாள் போட்டிகள் மூன்றிலும் விளையாடியிருந்தேன். எனவே நானும் இந்த தொடருக்கு முழுமையாகத் தயாரிகிவிட்டேன்.

நாங்கள் இறுதியாக 2008 இல் மேற்கிந்திய தீவுகள் சென்று டெஸ்ட் தொடரொன்றில் விளையாடியிருந்தோம். அந்த அணியில் ரங்கன ஹேரத் மாத்திரம் இடம்பெற்றிருந்தார். எனவே இம்முறை செல்லவுள்ள அனைவருக்கும் இந்த தொடரானது அறிமுகப் போட்டியாக இருக்கும். ஆனால் பெரும்பாலான வீரர்கள் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கின்றோம். எனவே அந்த அனுபவங்களையும் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்தார்.

லெக்-ஸ்பின் பிரச்சினைக்கு தீர்வு தருவாரா ஹதுருசிங்க?

இலங்கையர்களாகி நாம் லெக்-ஸ்பின் (Leg-spin) பந்து வீச்சை சரியாகக் கையாளத் தவறியுள்ளோம்…

இதில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஒப் ஸ்பெய்னில் அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எனினும், இப்போட்டிக்கு முன்பதாக எதிர்வரும் புதன்கிழமை (30) ட்ரினிடாட்டில் நடைபெறவுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையில் இதுவரை 17 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், இதில் 8 போட்டிகளில் இலங்கையும், 3 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளும் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளது. அத்துடன், 6 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. அதுமாத்திரமின்றி, மேற்கிந்திய மண்ணில் இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் தலைமையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போட்டி அட்டவணை

பயிற்சிப் போட்டி – மே 30 தொடக்கம் ஜூன் 1 வரை, ட்ரினிடாட்

முதலாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 6 தொடக்கம் ஜூன் 10 வரை, ட்ரினிடாட்

இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 14 தொடக்கம் ஜூன் 18 வரை, சென். லூசியா

மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 23 தொடக்கம் ஜூன் 27 வரை, பார்படோஸ் (பகலிரவுப் போட்டி)

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க