தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனரில் பங்குபற்றும் சப்ரின், வக்ஷான்

Thailand Open Athletics Championship 2025

35
Thailand Open Athletics Championship 2025

தாய்லாந்தில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 8 மெய்வல்லுனர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் 4 வீரர்களும், 4 வீராங்கனைளும் இடம்பெற்றுள்ளனர். இதில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டி நிகழ்ச்சியில் முன்னாள் தேசிய சம்பியனான சப்ரின் அஹமட் மற்றும் அண்மைக்காலமாக ஆண்களுக்கான நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற முதலாவது மெய்வல்லுனர் திறன்காண் போட்டியில் 15.68 மீற்றர் தூரத்தையும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2ஆவது மெய்வல்லுனர் திறன்காண் போட்டியில் 16.35 மீற்றர் தூரத்தையும் சப்ரின் அஹமட் பதிவு செய்தார். இதன் மூலம் தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டார். இவர் இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த ஆண்டு முற்பகுதியில் பாகிஸ்தானில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற விக்னராஜ் வக்ஷான், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மெய்வல்லுனர் திறன்காண் போட்டிகளில் பங்குபற்றியிருந்ததுடன், ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு தேசிய மற்றும் சர்வதே மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற வக்ஷானுக்கு அடுத்த வாரம் நடைபெறவுள்ள தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் சிரேஷ்ட வீராங்கனைகளில் ஒருவரான நிமாலி லியனாராச்சி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சர்வதேசப் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்தப் பருவத்தில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் (2:06.53) சிறந்த காலத்தைப் பதிவு செய்து முன்னணியில் உள்ள நிமாலி, கடைசியாக 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

அதேவேளை, அம்பகமுவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த இளம் தடைதாண்டல் வீரரான அயோமால் அகலங்க, சிரேஷ்ட பிரிவில் தனது முதல் சர்வதேசப் போட்டியில் களமிறங்க உள்ளார். 19 வயதான இவர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியை 51.33 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இதில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான இந்திரஜித் ரத்னசேனவை அவர் வீழ்த்தியிருந்தார்.

முன்னதாக, அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று 18 வயதில் தேசிய சம்பியனாக மகுடம் சூடியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, தியகம, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இன்று நிறைவடைந்த கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தடைதாண்டல் ஓட்டப் போட்டியை 50.20 செக்கன்களில் நிறைவு செய்த அயோமால் அகலங்க, புதிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றதுடன், போட்டித் தொடரின் அதிசிறந்த வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் தேசிய சம்பியனான ருசிரு சதுரங்க 8 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

இதேவேளை, அமாஷா டி சில்வா (பெண்களுக்கான 100 மீற்றர்), வத்சலா ஹபுவாராச்சி (பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டம்) மற்றும் மதுஷானி ஹேரத் (பெண்களுக்கான முப்பாய்ச்சல்) ஆகியோர் இலங்கை சார்பில் போட்டியிடவுள்ளனர்.

இதனிடையே, இந்தப் போட்டித் தொடரில் பங்குபற்றுகின்ற இலங்கை அணியின் பயிற்சியாளராக அநுர பண்டாரவும், முகாமையாளராக ஆர். ஹென்னாயக்க ஆகிய இருவரும் செயல்படவுள்ளனர்.

தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

இலங்கை மெய்வல்லுனர் அணி விபரம்

ஆண்கள்

சப்ரின் அஹமட் (முப்பாய்ச்சல்)

ருசிரு சதுரங்க (800 மீற்றர்)

அயோமால் அகலங்க (400 மீற்றர் தடைதாண்டல்)

விக்னராஜ் வக்ஷான் (1500 மீற்றர், 5000 மீற்றர்)

பெண்கள்

நிமாலி லியனாராச்சி (800 மீற்றர்)

அமாஷா டி சில்வா (100 மீற்றர்)

வத்சலா ஹபுவாராச்சி (100 மீற்றர் சட்டவேலி ஓட்டம்)

மதுஷானி ஹேரத் (முப்பாய்ச்சல், நீளம் பாய்தல்)

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<