மேற்கிந்திய தீவுகள் T20I தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

161

2022ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 22ஆம் ஆரம்பமாகவுள்ள மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகள் இடையிலான T20I தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இரண்டாவது முறையாகவும் LPL சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ்

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கே 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது.

இந்த T20I தொடருக்கான 16 பேர் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து T20I குழாத்தில் இதுவரை சர்வதேச போட்டிகள் அறிமுகமாகாத இடதுகை வேகப்பந்துவீச்சாளரான டேவிட் பெய்ன் இடம்பெற்றிருக்கின்றார்.

டேவிட் பெய்ன் இங்கிலாந்தின் ஒருநாள் குழாத்தில் முன்னர் உள்வாங்கப்பட்டிருந்த போதும் அவருக்கு போட்டிகள் எதிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. ஆனால் டேவிட் பெய்ன் அண்மையில் நிறைவடைந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததோடு, முதல் முறையாக நடைபெற்ற ”த ஹன்ரட்” தொடரிலும் வேல்ஸ் பையர் அணிக்காக ஆடி 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடி வருகின்ற வீரர்களான டாவிட் மலான், ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ், டொம் கர்ரன் மற்றும் டேவிட் வில்லி ஆகியோருக்கு மேற்கிந்திய தீவுகள் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்கள் தவிர மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இங்கிலாந்து T20I அணி,

T20I உலகக் கிண்ணத்தில் விளையாடிய வீரர்களை கொண்டு நிரப்பப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் T10 லீக் மற்றும் இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என்பவற்றில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய பில் சோல்டும், இங்கிலாந்து T20I அணியில் இடம்பெற்றிருக்கின்றார்.

சன்ரைசர்ஸ் அணியில் முரளியுடன் இணையும் லாரா, ஸ்டெய்ன்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் போது இங்கிலாந்து T20I அணியின் தற்காலிக பயிற்சியாளராக, அவ்வணியின் முன்னாள் வீரரான போல் கோலிங்வூட் காணப்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இங்கிலாந்து T20I அணி – இயன் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, டொம் பேன்டன், சேம் பில்லிங்ஸ், லியாம் டாவ்சன், ஜோர்ஜ் கார்டன், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டோன், சகீப் மஹ்மூட், டைமால் மில்ஸ், டேவிட் பெய்ன், ஆதில் ரஷீட், ஜேசன் ரொய், பில் சோல்ட், ரீஸ் டொப்லி, ஜேம்ஸ் வின்ஸ்

T20I தொடர் அட்டவணை

  • முதல் T20I போட்டி – ஜனவரி 22, 2022
  • இரண்டாவது T20I போட்டி – ஜனவரி 23, 2022
  • மூன்றாவது T20I போட்டி – ஜனவரி 26, 2022
  • நான்காவது T20I போட்டி – ஜனவரி 29, 2022
  • ஐந்தாவது T20I போட்டி – ஜனவரி 30, 2022

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<