சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனரின் முதல் நாளில் துதிதர்ஷிதன், விஹாஷுக்கு தங்கம்

92nd Ritzbury Sir John Tarbat Senior Athletics Championship 2024

64

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று (30) ஆரம்பமான 92ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் மலையகப் பகுதியைச் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்கள் தங்கம் உள்ளிட்ட 3 பதக்கங்களை வென்று அசத்தினர்.  

இதில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் மாத்தளை இந்து தேசிய கல்லூரியின் எஸ். துதிதர்ஷிதான் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இப்போட்டியை 16 நிமி;டங்கள் 06.03 செக்கன்களில் ஓடி முடித்து அவர் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார் 

இதனிடையே, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி வீரர் கே. திவாகர் (9 நிமிடங்கள் 13.2 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், திகன ரஜவெல்ல இந்து தேசிய கல்லூரியின் ஆர். விதுஷன் (9 நிமிடங்கள் 20.6 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர். 

இது தவிர, 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதலில் திருக்கோவில் மெதடிஸ்தமிசன் தமிழ் மகா வித்தியாலயத்தின்
வி விஹாஸ், 43.23 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார் 

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 92 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (130) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. 

சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் தொடர்ச்சியாக 12ஆவது தடவையாகவும் அனுசரணை வழங்குகின்ற இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 

16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் 2 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன 

இதில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் திக்வெல்ல, விஜித்த மத்திய மகா வித்தியாலயத்தின் நேத்ரா சமாதி 1.69 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார் 

இப்போட்டியில் 1.61 மீற்றர் உயரத்தைத் தாவிய பாணந்துறை புனித கன்னியாஸ்திரகள் மடத்தின் பீ.எல்.சீ உபேக்ஷா வெள்ளிப் பதக்கத்தையும், அதே உயரத்தைப் பதிவு செய்த கொழும்பு கேட்வே சர்வதேசப் பாடசாலையின் எஸ். ஜயசுந்தர வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர் 

இதனிடையே, 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த டில்னி ராஜபக்ஷ, 6.12 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார் 

இன்னும் 15 வயதைக் கூட அடையாத டில்னி, இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற மேல் மாகாண பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 6.26 மீற்றர் தூரம் பாய்ந்து, 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 

தற்போது இலங்கையில் உள்ள 20 வயதுக்குட்பட்ட நீளம் பாய்தல் வீராங்கனைகள் பட்டியலில் முதல் 3 பேரில் ஒருவராகவும் உள்ளார். ஆனால் அவருக்கு இன்னும் 16 வயது பூர்த்தியாகாததால் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கான இலங்கை கனிஷ்ட அணியில் துரதிஷ்டவசமாக இடம்பிடிக்க முடியாமல் போனது. 

Photos – 92nd Ritzbury Sir John Tarbat Senior Athletic Championship 2024 – Day 01

இது இவ்வாறிருக்க, தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கம்ளை, விக்கிரபாகு மத்திய கல்லூரியைச் சேர்ந்த தருஷி அபிஷேகா, 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 நிமிடங்கள் 18.8 செக்கன்களில் ஓடிமுடித்து தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார் 

இதேவேளை, 92ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் 2ஆவது நாளான இன்று (01) 32 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<