மெரோனுக்கு இரட்டை தங்கம்; கடைசி நாளில் இலங்கைக்கு 5 தங்கங்கள்

South Asian Junior Athletics Championship 2024

67

இந்தயாவின் சென்னையில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 21 தங்கப் பதக்கங்களை வென்ற வரவேற்பு நாடான இந்திய அணி ஒட்டுமொத்த சம்பியனான தெரிவாகியதுடன், 09 தங்கப் பதக்கங்ளை வென்ற இலங்கை அணி 2ஆவது இடத்தைப் பிடித்தது.   

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் மற்றும் இந்தியா மெய்வல்லுனர் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் சென்னையில் உள்ள நேரு உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற 4ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்று (13) நிறைவடைந்தது. 

இம்முறை போட்டித் தொடரின் முதல் நாளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை அணி, 2ஆவது நாளில் ஒரேயொரு தங்கப் பதக்கத்தை மாத்திரம் வெற்றி கொண்டது. இந்த நிலையில், போட்டியின் 3ஆவதும் கடைசியும் நாளான நேற்று 5 தங்கப் பதக்கங்களை இலங்கை வீரர்கள் வெற்றி கொண்டனர். இதில் 2 தங்கப் பதக்கங்களை அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி தனதாக்கிக் கொண்டது. எவ்வாறாயினும், இறுதியாக 2018இல் கொழும்பில் நடைபெற்ற 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை அணி 12 தங்கப் பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.    

அதன்படி, இம்முறை நடைபெற்ற 4ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 48 பதக்கங்களை வென்றெடுத்து ஒட்டுமொத்த சம்பியனானது. 

இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் அணியில் முதல் தடவையாக இடம்பிடித்த முல்லைத்தீவு மாணவன்

9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் உட்பட மொத்தம் 35 பதங்கங்களை வென்றெடுத்த இலங்கை ஒட்டுமொத்த நிலையில் இரண்டாவது இடத்தைப் பெற்றது 

இந்தியா மற்றும் இலங்கையைத் தவிர, பிராந்தியத்தில் பங்குபற்றிய எந்தவொரு நாடும் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதன்டி, இம்முறை போட்டித் தொடரில் பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களுடன் 3ஆவது இடத்தையும், மாலைதீவுகள் 2 வெண்கலப் பதக்கங்களுடன் 4ஆவது இடத்தையும், நேபாளம் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 5ஆவது இடத்தையும் பெற்றன. 

இதனிடையே, இம்முறை போட்டித் தொடரில் 5 தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனைகளை இலங்கை வீரர்கள் முறியடித்தனர். இதில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மெரோன் விஜேசிங்கவும், ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் சவிந்து அவிஷ்க, ஆண்களுக்கான உயரம் பாய்தலில் கொழும்பு ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த உயரம் பாய்தல் வீரர் லெசந்து அர்த்தாவிது மற்றும் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் இந்துசர விதுஷான் ஆகிய வீரர்கள் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனையோடு இலங்கை கனிஷ்ட் சாதனைகளையும் முறியடித்திருந்தனர்.   

அதேபோல, ஆண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டி பங்குகொண்ட இலங்கை அணியும் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

இது இவ்வாறிருக்க, நேற்று நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணி, 5 தங்கம் உட்பட 16 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர். ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.33 செக்கன்களில் நிறைவு செய்த இந்துசர விதுஷான் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அதேபோட்டியில் பங்குகொண்ட சக நாட்டவரான மலித் தமேல் (21.44 செக்.) முந்தைய தெற்காசிய கனிஷ்ட சாதனையை சமப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்றார் 

தெற்காசியாவின் அதிவேக கனிஷ்ட வீரரான மெரோன் வீரசிங்க

ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 2.17 மீற்றர் உயரத்தை தாவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை இலங்கை அணியின் தலைவர் லெசந்து அர்த்தவிந்து வென்றெடுக்க, 2.10 மீற்றர் உயரத்தைத் தாவிய தரூஷ மெண்டிஸ் வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார் 

இதேவேளை, ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை ஹசித்த திசாநாயக்க வென்று கொடுத்தார். அவர் முப்பாய்ச்சலில் 15.09 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்தார். சக நாட்டவரான செனுர ஹசங்க (14.92 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார் 

இது இவ்வாறிருக்க, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் களமிறங்கிய இலங்கை அணியினர் புதிய போட்டி சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர். அப் போட்டியை 40.28 செக்கன்களில் இலங்கை அணியினர் ஓடி முடித்தனர்.

இந்த அணியில் இடம்பிடித்த மெரோன் விஜேசிங்க மற்றும் தினெத் இந்துவர ஆகிய இருவரும் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், ஆண்களுக்கான 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 09.27 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை அணியினர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர் 

இது தவிர, பெண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும், ஆண்களுக்கான 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் இலங்கை அணி வீராங்கனைகளுக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொள்ள முடிந்தது 

இதேவேளை, இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய ஒரேயொரு தமிழ் பேசும் வீரரான முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த ஜெயகாந்தன் விதுசன் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் களமிறங்கினார். போட்டிகளின் 2ஆவது நாளன்று நடைபெற்ற குறித்த போட்டியை 9 நிமிடங்கள் 59.56 செக்கன்களில் நிறைவு செய்து 7ஆவது இடத்தைப் பிடித்தார்.  

இவர் கடந்த ஜுலை மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்ததன் மூலம் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார். 16 வயதான விதுசனின் பயிற்சியாளராக புலேந்திரன் ஜனந்தன் செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வட மாகாணத்தைச் சேர்ந்த சிவநாதன் கிந்துஷன், சிவகுமார் பிகாஷ்ராஜ், மலையகத்தைச் சேர்ந்த சந்திரகுமார் அரவிந்தன் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாகேந்திரம் உதயவானி 4 தமிழ் பேசும் வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் சிவநாதன் கிந்துஷனும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் நாகேந்திரம் உதயவானியும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

ஏனவே, கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்து மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுகின்ற தமிழ் பேசும் வீரர்களின் பங்குபற்றாலானது நாளுக்கு நாள் குறைந்து கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது 

குறிப்பாக, வலய மட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளில் தமிழ் பேசும் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தினாலும் தேசிய மட்ட்டப் போட்டிகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது.   

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<