டி20 தொடரை வென்ற ஆஸி. அணிக்கு புதிய தரவரிசையில் மூன்றாமிடம்

358
Image Courtesy - Cricket.com.au

சுற்றுலா அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் நேற்றுடன் (27) நிறைவுக்கு வந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையானது புதிய டி20 சர்வதேச தரவரிசையை (அணிகள், வீரர்கள்) இன்று (28) வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒவ்வொரு தொடர்கள் நிறைவிலும் அதன் தரவரிசையில் மாற்றங்களை செய்து வருகின்றது. அந்த அடிப்படையில் இந்திய – அவுஸ்திரேலிய மற்றும் ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான டி20 சர்வதேச தொடர்கள் நிறைவுற்றதன் பின்னரான மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

மெக்ஸ்வெல்லின் அதிரடியால் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

அணிகளின் தரவரிசை

இந்திய – ஆஸி. அணிகளுக்கிடையிலான தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் டி20 சர்வதேச அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 124 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், ஆஸி. அணி 118 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் காணப்பட்டன.

இந்நிலையில், இந்திய அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை சொந்த மண்ணிலேயே வைத்து வீழ்த்திய அவுஸ்திரேலிய அணிக்கு, அணிகளின் புதிய தரவரிசையில் 2 புள்ளிகள் மேலதிகமாக கிடைத்துள்ள அதேவேளை, குறித்த தரவரிசையில் தொடரை இழந்த இந்திய அணிக்கு 2 புள்ளிகள் குறைவடைந்திருக்கின்றது.

அந்த அடிப்படையில் ஆஸி. அணிக்கு அதிகரிக்கப்பட்ட 2 புள்ளிகளுடன் சேர்த்து மொத்தமாக 120 புள்ளிகளை பெற்று அவ்வணி தற்போது மூன்றாமிடத்தை தனித்து தக்கவைத்துள்ளது. முன்னர் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் 118 புள்ளிகளுடன் மூன்றாம், நான்காமிடங்களில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடரை இழந்த இந்திய அணி 122 புள்ளிகளுடன் தொடர்ந்தும் இரண்டாமிடத்தில் நீடிக்கின்றது. பாகிஸ்தான் அணி எந்தவொரு அணியும் விரைவில் எட்டமுடியாத அளவுக்கு 135 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணகளுக்கிடையில் இந்தியாவில் நடைபெற்றுவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) நிறைவுக்குவந்த 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை வைட் வொஷ் மூலம் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணிக்கு புதிய அணிகளின் தரவரிசையில் 1 புள்ளி அதிகரித்திருக்கின்ற அதேவேளை, அயர்லாந்து அணிக்கு 1 புள்ளி குறைவடைந்திருக்கின்றது.

தற்போது ஆப்கானிஸ்தான் அணி 93 புள்ளிகளுடன் எட்டாமிடத்திலும், அயர்லாந்து அணி 37 புள்ளிகளுடன் 17ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

அணிகளின் புதிய டி20 சர்வதேச தரப்படுத்தல்

  1. பாகிஸ்தான் – 135 புள்ளிகள்
  2. இந்தியா – 122 புள்ளிகள்
  3. அவுஸ்திரேலியா – 120 புள்ளிகள்
  4. தென்னாபிரிக்கா – 118 புள்ளிகள்
  5. இங்கிலாந்து – 118 புள்ளிகள்
  6. நியூஸிலாந்து – 116 புள்ளிகள்
  7. மேற்கிந்திய தீவுகள் – 101 புள்ளிகள்
  8. ஆப்கானிஸ்தான் – 93 புள்ளிகள்
  9. இலங்கை – 86 புள்ளிகள்
  10. பங்களாதேஷ் – 77 புள்ளிகள்
  11. ஸ்கொட்லாந்து – 61 புள்ளிகள்
  12. ஜிம்பாப்வே – 55 புள்ளிகள்
  13. நெதர்லாந்து – 52 புள்ளிகள்
  14. நேபாளம் – 43 புள்ளிகள்
  15. ஐக்கிய அரபு இராச்சியம் – 43 புள்ளிகள்
  16. ஹொங்கொங் – 42 புள்ளிகள்
  17. அயர்லாந்து – 37 புள்ளிகள்
  18. ஓமான் – 27 புள்ளிகள்

ஓட்ட மழை பொழிந்த போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

வீரர்களின் தரவரிசை (துடுப்பாட்டம்)

வெளியிடப்பட்டுள்ள புதிய துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையின்படி, இந்திய அணியுடனான தொடரை ஆஸி. அணி கைப்பற்றுவதற்கு முக்கிய கருவாக திகழ்ந்த (ஒரு சதம், ஒரு அரைச்சதம்) அவ்வணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான கிளென் மெக்ஸ்வெல் 2 நிலைகள் முன்னேறி 815 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தை அடைந்துள்ளார். மேலும் இவர் முதன் முறையாக குறித்த மூன்றாமிடத்தையும், வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து அணியுடனான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியின் போது தனிமனிதனாக 162 ஓட்டங்களை விளாசி, இரண்டாவது அதிகூடிய டி20 சர்வதேச ஓட்டங்களை பெற்றுக்கொண்ட 20 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரர் ஹஸ்ரதுல்லாஹ் ஷஸாய் புதிய துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 31 நிலைகள் முன்னேறி முதல் பத்து இடங்களுக்குள் புகுந்து 718 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தை அடைந்துள்ளார். மேலும் இவர் வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளையும் குறித்த தொடர் மூலமாக பெற்றுள்ளார்.

நேற்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களான இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 2 நிலைகள் முன்னேறி 17ஆவது இடத்தையும், கே.எல் ராகுல் 4 நிலைகள் முன்னேறி 6ஆவது இடத்தையும் அடைந்துள்ளனர்.

டார்சி சோர்ட் (ஆஸி) 8 நிலைகள் முன்னேறி 715 புள்ளிகளுடன் எட்டாமிடத்தையும், MS டோனி (இந்தியா) 7 நிலைகள் முன்னேறி 56ஆவது இடத்தையும் அடைந்துள்ளனர்.

குறித்த தொடரில் பிரகாசிக்கத் தவறிய ஆஸி. அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் ஒரு நிலையை இழந்து 4ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். மேலும் ரோஹித் சர்மா, சிகர் தவான் ஆகியோரும் பின்னடைவை கண்டுள்ளனர்.

ஆப்கான் வீரர் முஹம்மட் நபி 12 நிலைகள் முன்னேறி முதல் முறையாக 30ஆவது இடத்தை  அடைந்துள்ளார். மேலும் உஸ்மான் கனி 25 நிலைகள் முன்னேறி 79ஆவது இடத்தையும், அயர்லாந்து வீரர் கெவின் ஓப்பிரைன் 10 நிலைகள் முன்னேறி 61ஆவது இடத்தையும் அடைந்துள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரவரிசையின்படி பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம் 885 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

வீரர்களின் தரவரிசை (பந்துவீச்சு)

இந்திய அணியுடனான முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றவரும், தொடரில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியவருமான நதன் கோல்டர் நைல் 4 நிலைகள் முன்னேறி 45ஆவது இடத்தை அடைந்துள்ளார்.

வேகப்பந்துவீச்சில் ஆஸி. வீரர்களை மிரட்டிய ஜஸ்ப்ரிட் பும்றா 12 நிலைகள் முன்னேறி 15ஆவது இடத்தை அடைந்துள்ளார். குர்னால் பாண்டியா 18 நிலைகள் முன்னேறி வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளுடன் (500) ஸ்கொட்லாந்து வீரர் சபியான் சரிபுடன் சேர்ந்து 43ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.

ஆப்கான் இளம் சுழல் பந்துவீச்சாளர் முஜீப் உர்-ரஹ்மான் 2 நிலைகள் முன்னேறி 40ஆவது இடத்தை அடைந்துள்ளார். மேலும் அயர்லாந்து வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் ச்சேஸ் 20 நிலைகள் முன்னேறி வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளுடன் (339) 99ஆவது இடத்தை அடைந்துள்ளார்.

கௌண்டி கிரிக்கெட்டில் கால் பதிக்கும் திமுத் கருணாரத்ன

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் காணப்பட்ட இந்திய சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் குறித்த தொடரில் விளையாடாததன் காரணமாக 2 நிலைகளை இழந்து நான்காமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசையின்படி ஆப்கான் சுழல் பந்துவீச்சாளர் ரஷீட் கான் 780 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<