இந்தியாவின் சென்னையில் நடைபெறவுள்ள 4ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் முல்லைத்தீவைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஜெயகாந்தன் விதுசன் இடம்பிடித்துள்ளார்.
தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 4ஆவது தடவையாக நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் செப்டம்பர் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில், வரவேற்பு நாடான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவுகள் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்தும் சுமார் 300 வீரர், வீராங்கனைகள் 28 பிரிவு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இம்முறை போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 29 வீரர்களும், 25 வீராங்கனைகளும் உள்ளடங்கலாக 54 மெய்வல்லுனர்கள் பங்குபற்றவுள்ளதுடன், இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த உயரம் பாய்தல் வீரர் லெசந்து அர்த்தாவிது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் பெருவின் லீமாவில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிலும் இலங்கை அணியின் தலைவராக செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் டுபாயில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற அனைத்து வீரர்களும் தெற்காசிய கனிஷ்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் இடம் பெற்றுள்ளதால், சென்னையில் நடைபெறும் போட்டித் தொடரானது சில வீரர்களுக்கு மூன்றாவது சர்வதேசப் போட்டியாக இது அமையும்.
- தேசிய விளையாட்டு மெய்வல்லுனரில் சாதித்த தமிழ் பேசும் வீரர்கள்
- 18000 மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் சமபோச மாகாண பாடசாலை விளையாட்டு விழா
- பாரிஸ் பராலிம்பிக்கில் சரித்திரம் படைத்தார் சமித்த துலான்
குறிப்பாக டுபாயில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி 5 பதக்கங்களை சுவீகரித்தது. அதேபோல, 10 நாட்களுக்கு முன்பு, பெருவின் லிமாவில் லீமாவில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையிலிருந்து 12 வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், அந்த தொடரில் பங்குபற்றிய அனைத்து வீரர்களும் இம்முறை தெற்காசிய கனிஷ்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் களமிறங்கவுள்ளனர்.
இதேவேளை, தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த ஜெயகாந்தன் விதுசன் போட்டியிடவுள்ளார். இவர் கடந்த ஜுலை மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்ததன் மூலம் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார். 16 வயதான விதுசனின் பயிற்சியாளராக புலேந்திரன் ஜனந்தன் செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 3ஆவது தெற்காசிய சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி 12 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களுடன் 41 பதக்கங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணி 20 தங்கம், 22 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சம்பியன் பட்டம் வென்றது.
எவ்வாறாயினும், இம்முறை தெற்காசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பிரபல இந்திய அணிக்கு இலங்கை வீரர்கள் பலத்த போட்டியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, தெற்காசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று (09) சென்னையை சென்றடைந்தனர்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<