மூன்று ஆண்டுகளின் பின் மீண்டும் தேசிய விளையாட்டு விழா

129

மூன்று ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையின் பிரதான விளையாட்டு திருவிழாவான தேசிய விளையாட்டு விழாவை இந்த ஆண்டு நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

47ஆவது தடவையாக நடைபெறவுள்ள இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் 27 போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும். இதன்படி, இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் முதல் சுற்றுப் போட்டி நிகழ்ச்சிகள் எதிர்வரும் மே 12ஆம் திகதி பொலன்னறுவையில் ஆரம்பமாகவுள்ளது. இதில் மே 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கால்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெறவுள்ளன.

மே 20ஆம் திகதி முதல் ஜூன் 06ஆம் திகதி வரை கொழும்பில் இரண்டாம் சுற்று போட்டி நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதில் பெட்மிண்டன், கயிறு இழுத்தல், கூடைப்பந்து, நீச்சல் மற்றும் கெரம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடற்கரை கரப்பந்து மற்றும் கடற்கரை கபடி ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் மே 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் நீர்கொழும்பு கடற்கரையில் நடைபெறவுள்ளது. அதே நாட்களில் பொலன்னறுவையில் பளுதூக்கல் போட்டி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

செஸ், கராத்தே, வூசூ மற்றும் ஜூடோ ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் கொழும்பு சுகததாச மற்றும் டொரிங்டன் மைதானங்களில் ஜூன் 16ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. பெண்கள் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் போட்டி ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை எம்பிலிப்பிட்டியவில் நடைபெறவுள்ளதுடன், வலைப்பந்தாட்டப் போட்டிகள் ஜூலை முதலாம் மற்றும் 2ஆம் திகதிகளில் திகன மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குத்துச்சண்டை, எல்லே, றக்பி, ஹொக்கி, டைக்கொண்டோ, ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம் மற்றும் மேசைப்பந்து (Table tennis) ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளதுடன், கொழும்பு மற்றும் அனுராதபுரம் நகரங்களில் குறித்த போட்டி நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கொழும்பில் ஆணழகன் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளதோடு, அந்தப் போட்டிகளுடன் தேசிய விளையாட்டு விழாவுக்கான அனைத்து போட்டி நிகழ்ச்சிகளும் நிறைவடையும்.

பின்னர், தேசிய விளையாட்டு விழாவின் இறுதிப் போட்டி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தொடர்ந்து மூன்று வருடங்களாக தேசிய விளையாட்டு விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<