இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய பயிற்சியாளராக அமிர் அலஜிக் நியமனம்

71

இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொஸ்னியாவைச் சேர்ந்த அமிர் அலஜிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இலங்கை கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றி வரும் பக்கீர் அலியின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் புதிய பயிற்சியாளர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டது இலங்கை

இலங்கைக்கு எதிரான பங்கபந்து தங்கக் கிண்ண தொடரின் தீர்க்கமான குழுநிலை…

அதுமாத்திரமின்றி, தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற இலங்கையின் கால்பந்து விளையாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் இவரை பயிற்சியாளராக நியமிப்பதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொஸ்னியா, இந்தியா, மாலைதீவுகள், புரூனை, அமெரிக்கா, இந்தியா, ஓமான் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கழகங்களில் பயிற்சியாளராக பணியாற்றி 25 வருடகால அனுபவத்தைக் கொண்ட இவர், புரூனை தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், பொஸ்னியாவின் 19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

2007 இல் ஜேர்மனியின் Weder Bremen கழகத்தின் உதவிப் பயிற்சியாளராகச் செயற்பட்டுள்ள அவர், UEFA சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரிலும் அந்த கழகம் விளையாடியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், தெற்காசியாவைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால் கழகத்தின் பணிப்பாளராக செயற்பட்டுள்ள அவர், மாலைதீவுகளின் நிவ் ரேடியன்ட் கழகத்தின் பிரதான பயிற்சியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, பொஸ்னியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள இவர், ஐரோப்பியாவின் தொழில்சார் சான்றிதழைக் (Pro License) கொண்டுள்ள பயிற்சியாளராகவும், ஜேர்மனியின் பயிற்சியாளருக்கான C பிரிவு சான்றிதழ், அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட பயிற்சியக சான்றிதழ் மற்றும் அந்நாட்டின் A தரச் சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டுள்ளார்.

 

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்: யாருக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு?

இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான…..

இந்த நிலையில், இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய பயிற்சியாளராக அமிர் அலஜிக் நியமிக்கப்பட்டுள்ளதை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (18) இலங்கை கால்பந்து இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முதலில் பேசிய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா, தேசிய கால்பந்தாட்ட அணியின் தரத்தை அதிகரிக்கும் நோக்கில் அமிர் அலஜிக்கை நாங்கள் பயிற்சியாளராக நியமித்துள்ளோம். அவரின் பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை கால்பந்தாட்ட அணியில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை வைத்துள்ளோம். தரமான கால்பந்தாட்டத்தை விளையாடுகின்ற ஒரு பலமான அணியை உருவாக்குவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய பயிற்சியாளர் அமிர் அலஜிக் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் கால்பந்து விளையாட்டானது இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அணியைக கட்டியெழுப்ப அதிக காலம் தேவைப்படும் என தெரிவித்த அவர், அதற்காக போட்டித் தன்மை மிக்க தொழில்சார் கால்பந்து போட்டித் தொடரொன்றை இலங்கையில் நடாத்துவதற்கு தான் எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அணியில் உள்ள வீரர்களுக்கு கடந்த ஒரு வாரம் நான் பயிற்சிகள் வழங்கினேன். அப்போது இலங்கையின் கால்பந்து விளையாட்டில் நிறைய குறைபாடுகள் இருப்பதை அவதானித்தேன். வீரர்களின் விளையாட்டு தரத்தில்  குறைபாடு உள்ளது. அதேபோன்று அவர்களது உடற்தகுதியிலும் பிரச்சினைகள் உள்ளன. இலங்கையில் தொழில்சார் கால்பந்து போட்டித் தொடரொன்று கிடையாது. அதுதாள் தற்போதுள்ள தேவையாக நான் கருதுகிறேன் என்றார்.

இந்த அணிக்கு சர்வதேச அணியொன்றுக்கு போட்டியைக் கொடுக்கின்ற திறமை கிடையாது. நாங்கள் இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளோம். அதேபோன்று உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் அடுத்து நாங்கள் பலமிக்க வட கொரியா அணியை சந்திக்கவுள்ளோம்.

இவரது பயிற்றுவிப்பின் கீழ் 2022 பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளின் ஓர் அங்கமாக இலங்கை அணி எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி வட கொரிய அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கவுள்ளது.

>>Photos : Amir Alagic | New Sri Lanka Football Head Coach<<

இதேவேளை, 210 நாடுகளைக் கொண்ட உலக கால்பந்தாட்ட தரவரிசையில் இலங்கை அணியானது தொடர்ந்து 205ஆவது இடத்தில் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க