கனடா சிரேஷ்ட உலகக் கிண்ண அணியில் யாழ் மத்திய கல்லூரி முன்னாள் வீரர்

322

அவுஸ்திரேலியாவின் சன்ஷைன் கோஸ்டில் இம்மாதம் 2ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான கனடா தேசிய கிரிக்கெட் அணியில் நான்கு இலங்கை வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதன்படி, கனடா கிரிக்கெட் அணியில் ரொஹான் ஜயசேகர, பிலிப் நவரத்ன, ஏ.டி. ஜயவர்தன மற்றும் மொஹமட் ரமீஸ் ஆகிய இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பெரும்பாலான வீரர்கள் 1970-1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சிறந்து விளங்கிய முன்னணி கிரிக்கெட் வீரர்கள். இதில் பீட்டர் கிரிஸ்டன், ஒமர் ஹென்றி போன்ற வீரர்களும் அடங்குவர்.

குயின்ஸ்லாந்து வெட்டரன்ஸ் கிரிக்கெட் அணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டித் தொடரில் 12 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே, கனடா, அமெரிக்கா, வேல்ஸ் மற்றும் உலக அணி ஆகியன பங்கேற்றுள்ளன.

எவ்வாறாயினும், உள்ளுர் போட்டிகளுடன் முரண்படுவதால் இங்கிலாந்து அணி இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவில்லை

கனடா 60 வயதுக்கு மேற்பட்டோர் அணி

இதனிடையே, கனடா அணியில் இடம்பிடித்துள்ள மொஹமட் ரமீஸ், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடர் பற்றி எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இது 60 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர். எமது அணி இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்று பலமிக்க அணிகளுக்கு சவால் அளித்து சம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்” என தெரிவித்தார்.

மேலும் தனது கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் கனடா அணிக்கு தெரிவு செய்யப்பட்டமை குறித்து ரமீஸ் கருத்து தெரிவிக்கையில்,

“நான் 4 ஆண்டுகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கின் மாபெரும் சமரில் கலந்துகொண்டேன். 1977ஆம் ஆண்டு பாடசாலை அணியின் தலைவராக இருந்த நான் யாழ்ப்பாண மாவட்ட அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தினேன்.

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் கொழும்புக்கு வந்து சரசென்ஸ் மற்றும் தமிழ் யூனியன் ஆகிய விளையாட்டுக் கழக அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி பின்னர் American Lloyds, Commercial Bank மற்றும் Bank of America ஆகிய அணிகளுக்காக விளையாடினேன்.

பின்னர் 1987 ஆம் ஆண்டில் நான் கனடாவுக்குச் சென்று அங்குள்ள முக்கிய கிரிக்கெட் லீக்களில் ஒன்றான டொராண்டோ லீக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தினேன். மேலும், கடந்த 50 ஆண்டுகளாக குறித்த லீக்கில் வெளிப்படுத்திய திறமைகள் காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான கனடா தேசிய கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப்பட்டேன் என்று நான் நம்புகிறேன்.

நான் இங்கு வருவதற்கு உதவிய கே.எம்.சாந்தி குமார், சிவபாலசிங்கம், ராஜீவ் பெனடிக்ட் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதனிடையே, கனடாவில் கிரிக்கெட் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த அவர்,

“கனடாவில் கிரிக்கெட் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு. இங்கு (கனடாவில்) பல போட்டித் தன்மை கொண்ட லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அதில் டொராண்டோ லீக் முக்கிய ஒன்றாகும். கூடுதலாக, Markham மற்றும் Scarborough லீக்குகளும் ஓரளவு போட்டித்தன்மை கொண்டவையாக காணப்படுகின்றன.

மேலும், கனடா அணி பலமுறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றது. ஆனால் சர்வதேச அரங்கில் எமது போட்டித்தன்மை சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் எமது கிரிக்கெட் மீண்டும் தலை தூக்குவதற்கு உதவிய பலருக்கு நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல, கனடாவில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் பங்காற்றி வருவதை உங்களால் பார்க்க முடியும். மேலும், கனடாவில் பல இடங்களில் தற்போது கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளது” என குறிப்பிட்டார்.

இது தவிர, கனடாவில் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதில் இலங்கையர்களின் பங்களிப்பு குறித்து ரமீஸ் கருத்து தெரிவிக்கையில்,

”கனடா கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல இலங்கை வீரர்கள் உள்ளனர். இந்தப் பட்டியலில் ரொஹான் ஜயசேகர, சாந்த ஜயசேகர, ருவிந்து குணசேகர, மனோஜ் டேவிட், தனுக பத்திரன, ஈசன் சின்னத்தம்பி, அரவிந்த் கந்தப்பா, ட்ரெவின் பஸ்தியம்பிள்ளை, ரவிசங்கர் புவேந்திரன், பிரையன் ராஜதுரை, சஞ்சயன் துரைசிங்கம், சாந்திகுமார் காந்தரத்தினம் மற்றும் இந்த நான்கு உலகக் கிண்ண வீரர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவர்

மேலும் கனடா கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இலங்கையைச் சேர்ந்த புபுது தசநாயக்க அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.

இறுதியாக, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து ரமீஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

”கனடா குடியுரிமை பெற்ற நான்கு இலங்கையர்கள் இம்முறை 60 வயதுக்கு மேற்பட்ட உலகக் கிண்ணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நாங்கள் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போல் இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அந்த இரு நாடுகளின் மீதும் எங்களின் அன்பு எல்லையற்றது” என அவர் தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<