ஐபிஎல் இல் புது வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Indian Premier League 2024

38

ஐபிஎல் தொடரில் நேற்று (15) நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகள் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த அணி எனும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ஓட்டங்கள் என்ற இமாலய ஓட்டங்களைக் குவித்தது.   

ஆந்த அணியின் துடுப்பாட்டத்தில் டிராவிஸ் ஹெட் 9 பௌண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 102 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசென் 2 பௌண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 67 ஓட்டங்களையும், அப்துல் சமத் 4 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள் 37 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 34 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 32 ஓட்டங்களையும் குவித்து அசத்தியிருந்தனர் 

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி எனும் தன்னுடைய சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. முன்னதாக நடப்பு சீசனில் கடந்த மார்ச் 27ஆம் திகதி ஹைதராபாத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 8ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ஓட்டங்களைக் குவித்ததே சாதனையாக இருந்தது 

இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 2 தடவைகள் அதிக ஓட்டங்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்துள்ளது.   

ஒட்டுமொத்த T20 போட்டிகளில் இதுவே இரண்டாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை ஆகும். கடந்த ஆண்டு நடைபெற்ற  ஆசிய விளையாட்டு விழாவில் நேபாள அணி, மங்கோலியா அணிக்கு எதிராக 314 ஓட்டங்கள் குவித்ததே T20 வரலாற்றில் ஒரு அணி எடுத்த மிக அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை ஆகும். அதற்கு அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ஓட்டங்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 

எவ்வாறாயினும், சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ஓட்டங்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. 

இதேவேளை, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய இப்போட்டியில் பதிவுசெய்யப்பட்ட மேலும் சில சாதனைகள் குறித்து பார்ப்போம். 

ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி 

  • 287/3 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs RCB, பெங்களூரு, 2024 
  • 277/3 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் 2024 
  • 272/7 – KKR vs டெல்லி கேப்பிட்டல்ஸ், விசாகப்பட்டினம், 2024 
  • 263/5 -– RCB vs புனே வாரியர்ஸ், பெங்களூரு, 2013 
  • 257/7 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், மொஹாலி, 2023  

T20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணிகள்  

  • 314/3 – நேபாளம் vs மங்கோலியா, ஹாங்சூ 2023 
  • 287/3 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs RCB, பெங்களூரு, 2024 
  • 278/3 – ஆப்கானிஸ்தான் vs அயர்லாந்து, டெராடூன், 2019 
  • 278/4 – செக் குடியரசு vs துருக்கி, 2019 
  • 277/3 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத், 2024 

549 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (287), றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (262) மொத்தமாக சேர்த்த 549 ஓட்டங்களே, ஐபிஎல் மற்றும் சர்வதேச T20i வரலாற்றில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச மொத்த ஓட்ட எண்ணிக்கை ஆகும். இதற்கு முன், இதே சீசனில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இணைந்து 523 ஓட்டங்கள் சேர்த்தது அதிகபட்சமாக இருந்தது. 

22  

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வீரர்கள் சிக்ஸர் மழை பொழிந்தனர். அதிலும் டிராவிஸ் ஹெட் 8 சிக்ஸர்களையும், ஹென்ரிச் கிளாசென் 7 சிக்ஸர்களையு, அப்துல் சமத் 3 சிக்ஸர்களையும் விளாச, அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம் தலா 2 சிக்ஸர்களை அடித்தனர். இதனால் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வீரர்கள் 22 சிக்ஸர்களை விளாசி, ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை குவித்த அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது 

அதேபோல, இரு அணிகளுமாக இந்தப் போட்டியில் 38 சிக்ஸர்களை விளாசியுள்ளன. இதுவே ஒரு T20 போட்டியில் அதிகபட்சமாகும். நடப்பு சீசனில் மும்பைஹைதராபாத் போட்டியிலும் இதே எண்ணிக்கை எட்டப்பட்டது. 

  • 22 –சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs RCB, பெங்களூரு, 2024 
  • 21 – RCB vs புனே வாரியர்ஸ், பெங்களூரு, 2013 
  • 20 – RCB vs குஜராத் லையன்ஸ், பெங்களூரு, 2016 
  • 20 – டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் லையன்ஸ், டெல்லி, 2017 
  • 20 – மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத், 202 

81 

இந்தப் போட்டியில் இரு அணிகளுமாக சேர்ந்து 81 பந்துகளை பௌண்டரிக்கோ, அதைக் கடந்து சிக்ஸராகவோ விரட்டியுள்ளன (43 பௌண்டரிகள், 38 சிக்ஸர்கள்). ஐபிஎல் மற்றும் சர்வதேச T20i இல் இதுவே ஒரு போட்டியில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதே எண்ணிக்கையை மேற்கிந்தியத் தீவுகள்தென்னாபிரிக்கா அணிகள் கடந்த 2023-இல் எட்டியுள்ளன. 

39 

ஐபிஎல் அரங்கில் அதிவேக சதம் அடித்த வீரர்களில் டிராவிஸ் ஹெட் 4ஆவது வீரராக இடம்பிடித்தார். இவர் 39 பந்துகளில் சதம் கடந்தார். முதல் மூன்று இடங்களில் கிறிஸ் கெய்ல் (30 பந்துகள், 2013), யூசுப் பதான் (37 பந்துகள், 2010), டேவிட் மில்லர் (38 பந்துகள், 2013) உள்ளனர். 

அதிவேக ‘200’ 

நேற்றை போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை எடுத்தது. ஐபிஎல், அரங்கில் அதிவேகமாக 200 ஓட்டங்கள் எடுக்கப்பட்ட வரிசையில் இது மூன்றாவது இடம் பிடித்தது. முதல் இரு இடங்களில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (14.1 ஓவர், எதிரணிபஞ்சாப், 2016), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (14.4 ஓவர், மும்பை, 2024) அணிகள் உள்ளன. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<