எதிர்பார்ப்பை தூண்டியுள்ள போட்டியில் மோதும் இலங்கை – இந்தியா!

Asia Cup 2022

451

ஆசியக்கிண்ணத் தொடரின் எதிர்பார்ப்புமிக்க மற்றுமொரு போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் செவ்வாய்க்கிழமை (06) டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன.

இம்முறை ஆசியக்கிண்ணத் தொடரானது எதிர்பார்ப்புக்கு மீறி மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது. சுபர் 4 சுற்றுக்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிபெற்று போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

>> சாதனை வெற்றியுடன் ஆசியக் கிண்ணத்தில் முன்னேறும் பாகிஸ்தான்

இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவுசெய்ததுடன், இந்திய அணியை வென்று பாகிஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது. முதல் சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகளிடம் தோல்வியை சந்தித்திருந்தன.

முதல் சுற்றில் தோல்வியடைந்த இந்த அணிகள், சுபர் 4 சுற்றில் பதிலடி கொடுத்துள்ளமை தொடரை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது. அதனடிப்படையில் இந்திய அணி தங்களுடைய முதல் வெற்றிக்காக இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், இன்னும் ஒரு போட்டியின் வெற்றி இலங்கைக்கு இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.

இலங்கை அணியை பொருத்தவரை தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்திருந்தாலும், அடுத்து நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டி மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சுபர் 4 சுற்று போட்டிகளில் வெற்றியை பதிவுசெய்தது.

வெற்றிபெற்ற இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் அதிகூடிய வெற்றியிலக்கை பதிவுசெய்துள்ளது. எனவே, அணியின் நம்பிக்கை மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், பலம் மிக்க இந்திய அணிக்கு சவால் கொடுக்க காத்திருக்கிறது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் கடந்த இரண்டு போட்டிகளில் ஓரளவு முன்னேற்றத்தை கண்டிருக்கும் நிலையில், வேகப்பந்துவீச்சீன் அனுபவக்குறைவு பலமான இந்திய துடுப்பாட்ட குழாமுக்கு முன்னாள் சற்று பின்னடைவை காட்டுகின்றது.

இந்திய அணியில் அதிகமான வலதுகை துடுப்பாட்ட வீரர்கள் உள்ளதால், பிரவீன் ஜயவிக்ரமவுடன் இலங்கை அணி களமிறங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இடதுகை சுழல் பந்துவீச்சுக்கு இந்திய அணி தடுமாறியிருந்ததை பார்க்க முடிந்தது. எனினும், எந்த வீரர் அணியிலிருந்து நீக்கப்படுவார் அல்லது அதே அணியுடன் இலங்கை அணி விளையாடுமா? என்பது தெரியவில்லை.

இந்திய அணியை பொருத்தவரை பலமான அணியுடன் இம்முறை ஆசியக்கிண்ணத்தில் விளையாடுகின்றது. பலமான துடுப்பாட்ட வரிசையாக இருந்தாலும், பந்துவீச்சில் சற்று தடுமாறியிருப்பதை ஹொங் கொங் மற்றும் பாகிஸ்தான் போட்டிகளில் பார்க்கமுடிந்தது. எனவே அவர்களின் பந்துவீச்சு சற்று கேள்விக்குறிய ஒன்றாக உள்ளது.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை கண்டிருப்பதால், நிச்சயமாக இந்தப்போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற கட்டாயத்தில் மிக சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி தயாராகி வருகின்றது.

கடந்தகால மோதல்கள்

இறுதியாக இரண்டு அணிகளும் இந்தியாவில் மோதிய T20I தொடரில் இந்திய அணி இலகுவாக 3-0 என வெற்றிபெற்றிருந்தது. அதுமாத்திரமின்றி கடந்தகால வரலாற்றை பொருத்தவரை 25 போட்டிகளில் இரண்டு அணிகளும் சந்தித்துள்ளதுடன், இலங்கை அணி 7 வெற்றிகளையும், 17 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

கடைசியாக சொந்த மண்ணில் கடந்த வருடம் இந்தியாவை எதிர்த்தாடிய இலங்கை அணி 2-1 என தொடரை கைப்பற்றியது. குறித்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விளையாடவில்லை என்பதுடன், கடைசி T20I போட்டியில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலதிக வீரர்களை இணைத்து போட்டியில் இந்தியா விளையாடியிருந்தது.

ஆசியக்கிண்ணத்தை பொருத்தவரை ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் 19 போட்டிகளில் மோதியுள்ளதுடன், இலங்கை அணி 10 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. அதேநேரம், இரண்டு அணிகளும் ஆசியக்கிண்ணத்தில் ஒரேயொரு T20I போட்டியில் (2016) மாத்திரம் இதுவரை மோதியுள்ளதுடன், இந்தியா குறித்த போட்டியில் வெற்றியீட்டியிருந்தது. எனவே ஆசியக்கிண்ணத்தில் 10-10 என வெற்றிகளில் இரண்டு அணிகளும் சம பலமான அணிகளாகவே உள்ளன.

ஆனால் இரண்டு அணிகளையும் பொருத்தவரை முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் T20I போட்டியொன்றில் சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியிருகின்றது.

எதிர்பார்ப்பு வீரர்கள்

வனிந்து ஹஸரங்க

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தாலும், வனிந்து ஹஸரங்க இலங்கையின் மிக முக்கியமான பந்துவீச்சாளராக உள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 6 T20I போட்டிகளில் 12.40 என்ற சராசரியில் 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதுமாத்திரமின்றி இந்திய அணியில் அதிகமான வலதுகை துடுப்பாட்ட வீரர்கள் உள்ளதால், இந்தப்போட்டியில் ஹஸரங்கவின் பந்துவீச்சு இலங்கை அணிக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கும்.

பந்துவீச்சில் பிரகாசிக்கவேண்டிய தேவை உள்ளதுடன், துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை போன்று, தேவையான நேரங்களில் ஓட்டங்களை பெற்றுக்கொடுக்கவேண்டிய வீரராகவும் வனிந்து ஹஸரங்க பார்க்கப்படுகின்றார்.

விராட் கோஹ்லி

இந்திய அணிக்காக இந்த ஆசியக்கிண்ணத்தில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஓட்டக்குவிப்புக்கு விராட் கோஹ்லி வந்துள்ளார். 3 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2 அரைச்சதங்கள் அடங்கலாக 77 என்ற ஓட்ட சராசரியில் 154 ஓட்டங்களை குவித்துள்ளார்.

ஆசியக்கிண்ணத்தில் விராட் கோஹ்லியின் பிரகாசிப்புடன், இலங்கை அணிக்கு எதிராகவும் இவர் ரோஹித் சர்மாவுடன் மிகச்சிறந்த ஓட்ட எண்ணிக்கையை வைத்துள்ளார். இருவரும் 339 ஓட்டங்களை பெற்றிருக்கின்றார். ரோஹித் சர்மா 16 இன்னிங்ஸ்களில் இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளார். ஆனால், கோஹ்லி வெறும் 6 இன்னிங்ஸ்களில் 4 அரைச்சதங்கள் அடங்கலாக 84.75 என்ற ஓட்ட சராசரியில் 339 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

வனிந்து ஹஸரங்கவுக்கு எதிராகவும் T20I போட்டிகளில் சிறந்த ஓட்டக்குவிப்பை வைத்துள்ள இவர், இந்தப்போட்டியில் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உத்தேச பதினொருவர்

இலங்கை அணி

இலங்கை அணியை பொருத்தவரை இந்திய அணியில் அதிகமான வலதுகை துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதால், இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ஒருவருடன் களமிறங்க வாய்ப்புள்ளது. பிரவீன் ஜயவிக்ரம விளையாடுவதற்கான அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுசங்க, அசித பெர்னாண்டோ/பிரவீன் ஜயவிக்ரம/ஜெப்ரி வெண்டர்சே

இந்திய அணி

பாகிஸ்தான் போட்டியிலிருந்து இந்திய அணி மாற்றங்களை மேற்கொள்வதற்கான குறைந்த வாய்ப்புகளே இருக்கின்றன. இலங்கை அணியின் முன்வரிசையில் அதிகமான இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் உள்ளதால், ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கே.எல்.ராஹுல், ரோஹித் சர்மா (தலைவர்), விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய்/ரவிச்சந்திரன் அஸ்வின், அர்ஷ்டீப் சிங், யுஸ்வேந்திர சஹால்

இறுதியாக

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டிகள் அதிகமான எதிர்பார்ப்புகள் கொண்ட போட்டிகளாக கடந்தகாலங்களில் அமைந்திருக்கின்றன.

தற்போதைய நிலையில் இலங்கை அணி சற்று அனுபவம் குறைந்த இளம் வீரர்களுடன் விளையாடிவருவதுடன், இந்திய அணி பலமான அணியாக உள்ளது. ஆனால் T20I கிரிக்கெட்டை பொருத்தவரை அன்றைய நாளில் திறமையை நிரூபிக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். எனவே இந்திய அணிக்கு இலங்கை அணி அதிர்ச்சிக்கொடுக்குமா? அல்லது இந்திய அணி தங்களுடைய பலத்தை நிரூபிக்குமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<