பொன் அணிகளின் சமரின் கிண்ணத்தை வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி

105th Year Battle of the Gold

278

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரிகளுக்கு இடையிலான 105வது பொன் அணிகளின் சமரில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இரண்டு நாட்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும் பொன் அணிகளின் சமரில் (வெள்ளிக்கிழமை) நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

>>இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக அன்டன் ரொக்ஸ்

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கு, புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் பந்துவீச்சாளர்கள் கடுமையான அழுத்தத்தை கொடுத்தனர். இதன்காரணமாக யாழ்ப்பாணக் கல்லூரி மதியபோசன இடைவேளையின் போது, 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறத்தொடங்கியது.

மதியபோசன இடைவேளையை தொடர்ந்தும் ஓட்டங்களை குவிக்க யாழ்ப்பாணக் கல்லூரி வீரர்கள் தடுமாறியதுடன், தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிக்கப்பட்டதால் 98 ஓட்டங்களுக்கு யாழ்ப்பாணக் கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அவ்வணி சார்பாக பிருந்தன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரதீப் மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர் சங்கீத் ஆகியோர் தலா 13 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். புனித பத்திரிசியார் கல்லூரி சார்பாக ஏ.எப். டெஸ்வின் 19 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி சார்பாக கீர்தன் அபாரமான அரைச்சதம் ஒன்றை பதிவுசெய்ய, அணி சிறந்த ஓட்ட எண்ணிக்கையை அடையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனினும் இவர் 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட, முதல் நாள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து புனித பத்திரிசியார் அணி 133 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் இரண்டாவது நாள் ஆட்டம் ஆரம்பமாக, மீதமுள்ள இரண்டு விக்கெட்டுகளையும் விரைவாக இலக்க புனித பத்திரிசியார் கல்லூரி அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 58 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுக்கொண்டது.

பின்னர் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாணக் கல்லூரி அணி அபிஷனின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் வெறும் 84 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 28 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. அவ்வணி சார்பாக பிரதீபன் 24 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில், அபிஷன் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

பின்னர் இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி 5.4 ஓவர்கள் நிறைவில் விக்கெட்டிழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது. இதில், சௌத்ஜன் 19 ஓட்டங்ளையும், சியந்த்ஷன் 7 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். எனவே, 105வது பொன் அணிகளின் சமரில் கிண்ணத்தை புனித பத்திரிசியார் கல்லூரி அணி சுவீகரித்துக்கொண்டது.

சுருக்கம்

  • யாழ்ப்பாணக் கல்லூரி – 98/10 (57.4), பிருந்தன் 34, பிரதீப் 13, சங்கீத் 13, ஏ.எப். டெஸ்வின் 19/6
  • புனித பத்திரிசியார் கல்லூரி – 156/10 (49.4), கீர்தன் 59, சௌத்ஜன் 27, டெஸ்வின் 24, பிருந்தன் 30/5
  • யாழ்ப்பாணக் கல்லூரி – 84/10, (32.2), பிரதீபன் 24, விஷ்னுகாந்த் 17, அபினேஷ் 11/6
  • புனித பத்திரிசியார் கல்லூரி – 28/0 (5.4), சௌத்ஜன் 19*, சியந்தஷன் 7*

முடிவு – புனித பத்திரிசியார் கல்லூரி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<