நாளை சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள 11ஆவது ஐ.சி.சி மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி உள்ளடங்கலாக எட்டு அணிகள், உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்காக போட்டியிட உள்ளன.  

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டிகள் அனைத்தும் 5 கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளன. அத்துடன் இறுதிப் போட்டி கிரிக்கெட் உலகத்தின் பைபிள் எனப்படும் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. நடப்பு சம்பியனான அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்து மற்றும் இளம் வீராங்கனைகளைக் கொண்ட இந்திய அணி இம்முறை கிண்ணத்தை வெல்வதற்கு எதிர்பார்த்துள்ளன.

கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் வழங்கிய பணப் பரிசைவிட இம்முறை 10 மடங்கு மேலதிகமாக பரிசுகள் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் இந்தப் போட்டித் தொடர் முழுவதும் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. அத்துடன் வெற்றியீட்டும் அணிக்கு 660,000 அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ள அதேநேரம் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 330,000 அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது. மேலும் குழு மட்டத்தில் வெற்றியீட்டும் அனைத்து அணிகளுக்கும் 20,000 அமெரிக்க டொலர் வழங்கவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

“லாஸ்ட் மேன் ஸ்டேன்ட்” கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிகள் இவ்வாரம்

இவை தவிர இந்தப் போட்டிகளில் முதல் தடவையாக கள நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் DRS முறை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளைப் போன்றே பார்வையாளர்களைக் கவரும் வகையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் குழு மட்ட போட்டிகளில் எதிர்வரும் ஜூலை மாதம் இரண்டாம் திகதி மோதிக்கொள்ளவுள்ளன. எனினும் இவ்விரு அணிகளில் இந்திய அணி வலிமைமிக்க அணியாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கிரிக்கெட் என்பது விசித்திரமான போட்டி என்பதால் எந்த அணியையும் குறைத்து மதிப்பீடு செய்ய முடியாதுள்ளது. எனினும் இதுவரை நடைபெற்றுள்ள இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பாகிஸ்தான் அணியினால் எவ்விதமான வெற்றிகளையும் பதிவு செய்யமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை மகளிர் அணியை பயிற்சிப் போட்டியில் எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி, இலங்கை அணியை 109 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டியிருந்தது. அத்துடன் கடந்த மாதம் நான்கு சர்வதேச அணிகளை உள்ளடக்கிய தொடரொன்றின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியிருந்தது. அத்துடன் இந்திய அணியை வழி நடத்தும் இந்திய அணித் தலைவி மித்தாலி ராஜ் பங்குபற்றும் ஐந்தாவது உலகக் கிண்ணமாகும்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்து உலகக் கிண்ண போட்டிகளுக்கான இடத்தை இலங்கை அணி தக்கவைத்துக்கொண்டது. இங்கிலாந்து ஆடுகளங்களில் எவ்வாறு திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எவ்வாறெனினும் எதிரணிகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Sri-Lanka-Womens-Cricket1அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள அனுபவமிக்க முன்னாள் அணித் தலைவி ஷசிகலா சிறிவர்தன அணியை பலப்படுத்தலாம். இனோகா ரணவீர, நிபுணி ஹன்சிகா மற்றும் சமரி அதபத்து ஓட்டங்களைக் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனெனில், பங்குபற்றும் அணிகளில் இலங்கை அணி வலிமையற்ற அணியாக கணிக்கப்படுகின்ற அதேநேரம் அணிகளின் தர வரிசையில் பாகிஸ்தான் அணிக்கு முன்னதாக 7ஆவது இடத்தில உள்ளமை சற்று ஆறுதலைத் தருகின்றது.

இலங்கை அணியின் முக்கிய வீராங்கனையாக ஷசிகலா சிறிவர்தன காணப்படுகின்றார். காயம் காரணமாக சில காலம் அணியிலிருந்து விலகியிருந்தார். இதுவரை 93 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றிய அனுபவம் உள்ள இவர் 7 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார். அத்துடன் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பதிவு செய்துள்ள இரண்டாவது வீராங்கனை ஆவார். அத்துடன் தனது சுழல் பந்துவீச்சின் மூலம் 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கிரஹம் போர்ட் சொல்லாமலேயே இலங்கையை விட்டு வேளியேற இதுதான் காரணமாம்

இலங்கை குழாம்

இனோகா ரணவீர (அணித் தலைவி), பிரசதானி வீரக்கொடி (உப தலைவி) ஷசிகலா சிறிவர்தன, சமரி அத்தபத்து, இஷானி லொக்குசூரிய, டிலானி மனோதார, ஸ்ரீபாலி வீரக்கொடி, உதேஷிக்கா பிரபோதனி, நிபுணி ஹன்சிகா, ஹசினி பெரேரா, ஒஷாதி ரணசிங்க, ஹர்ஷிதா மாதவி, ஏமா காஞ்சனா, சமரி பொலகம்பொல  

மாற்று வீராங்கனைகள் – சந்திமா குணரத்ன, இனோசி பெர்னாண்டோ, ஹன்சிமா கருணாரத்ன, மதுஷிகா மெத்தானந்த, அனுஷ்கா சஞ்சீவினி, சுகந்திக்கா குமாரி

இலங்கை அணியுடனான போட்டி அட்டவணை

  • ஜூன் 24 – நியூசிலாந்து
  • ஜூன் 29 – அவுஸ்திரேலியா
  • ஜூலை 2 – இங்கிலாந்து
  • ஜூலை 5 – இந்தியா
  • ஜூலை 9 – மேற்கிந்திய தீவுகள்
  • ஜூலை 12 – தென்னாபிரிக்கா
  • ஜூலை 15 – பாகிஸ்தான்

இதுவரை மகளிர் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள நாடுகள்  

வருடம் வெற்றியாளர் இரண்டாம் இடம்   போட்டியை நடாத்திய நாடு
1973 இங்கிலாந்து அவுஸ்திரேலியா இங்கிலாந்து
1978 அவுஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா
1982 அவுஸ்திரேலியா இங்கிலாந்து நியூசிலாந்து
1988 அவுஸ்திரேலியா இங்கிலாந்து அவுஸ்திரேலியா
1993 இங்கிலாந்து நியூசிலாந்து இங்கிலாந்து
1997 அவுஸ்திரேலியா நியூசிலாந்து இந்தியா
2000 நியூசிலாந்து   அவுஸ்திரேலியா நியூசிலாந்து
2005 அவுஸ்திரேலியா இந்தியா தென்னாபிரிக்கா
2009 இங்கிலாந்து நியூசிலாந்து அவுஸ்திரேலியா
2013 அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் இந்தியா
2017 இங்கிலாந்து

ICC-Womens-Cricket-Team