முரளி மற்றும் ஹேரத் வரிசையில் தினுக ஹெட்டியாராச்சி

215

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினுக ஹெட்டியாராச்சி முதற்தர போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேஜர் லீக் பிரிவு B (Tier B) கிரிக்கெட் தொடரில் நேற்று (23) முடிவுக்குவந்த குருணாகல் யூத் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை தினுக படைத்துள்ளார்.

விமானப்படை அணிக்காக சகலதுறைகளிலும் ஜொலித்த சுமிந்த லக்ஷான்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு B …..

மேஜர் லீக் பிரிவு B கிரிக்கெட் தொடரில் பொலிஸ் விளையாட்டு கழக அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வரும் 42 வயதான தினுக ஹெட்டியாராச்சி, குருணாகல் யூத் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற முதற்தர போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பின்னர், 1,000 விக்கெட்டுகளுக்கு 2 விக்கெட்டுகள் மாத்திரமே தேவை என்ற நிலையில், பந்து வீசிய இவர், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, 1,000 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.

இதற்கு அமைவாக, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளிதரன் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோருக்கு அடுத்தப்படியாக முதற்தர போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையை தினுக ஹெட்டியாராச்சி பதிவுசெய்தார். இலங்கையின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரன் 234 முதற்தர போட்டிகளில் விளையாடி 1,374 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், ரங்கன ஹேரத் 270 போட்டிகளில் 1,080 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதில், தினுக ஹெட்டியாராச்சி எட்டியுள்ள இந்த மைல்கல்லானது, ரங்கன ஹேரத்தின் சாதனையை விட சிறப்பானதாக அமைந்துள்ளது. குறிப்பாக ரங்கன ஹேரத்தை விட குறைந்த போட்டிகளில் தினுக ஹெட்டியாராச்சி 1,000 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளதுடன், ஹேரத்தை விட அதிகமான 10 விக்கெட் மற்றும் 5 விக்கெட் குவிப்புகளை தினுக பெற்றுள்ளார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான அனைத்து தகுதியும் எனக்கு உண்டு: திமுத்

உலகக் கிண்ணத்தில் விளையாடக் கிடைத்தமை ………

ரங்கன ஹேரத் மொத்தமாக எழுபது 5விக்கெட் குவிப்புகள் மற்றும் பதினான்கு 10 விக்கெட் குவிப்புகளை பெற்றுள்ளதுடன், தினுக எழுபத்தொரு 5 விக்கெட் குவிப்புகளையும், பதினெட்டு 10 விக்கெட் குவிப்புகளையும் தன்வசப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, முதற்தர போட்டிகளில் இத்தகையை சாதனையை எட்டியிருக்கும் தினுக ஹெட்டியாராச்சி, இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். 2001ம் ஆண்டு கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணித் தலைவர் நஸீர் ஹுசைன் மற்றும் மார்க்கஸ் ட்ரெஸ்கொதிக் ஆகியோரின் விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க  <<