உபுல் தரங்க, பிளெட்சரின் அபார துடுப்பாட்டத்தால் சில்லெட் அணிக்கு முதல் வெற்றி

1517
PHOTO SOURCE - BPL OFFICIAL WEBSITE

ஐந்தாவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T-20 தொடர் இன்று ஆரம்பமாகியது. நடப்புச் சம்பியனான டாக்கா டைனமைட்ஸ் மற்றும் இவ்வருடம் முதல் புதிதாக இணைந்துகொண்டுள்ள சில்லெட் சிக்ஸர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் உபுல் தரங்க மற்றும் அன்ட்ரு பிளெட்சர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் 9 விக்கெட்டுக்களால் சில்லெட் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீர

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர, இலங்கை அணியின் துடுப்பாட்டப்…

பங்களாதேஷின் சில்லெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சில்லெட் சிக்ஸர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, டாக்கா அணிக்காக களமிறங்கிய மெஹதி மஹரூப், முதல் ஓவரிலேயே ஓட்டமேதுமின்றி நஸிர் ஹொசைனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மைதானம் விரைந்த குமார் சங்கக்கார – மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர் எவின் லீவிஸ் ஜோடி இணைந்து அரைச்சத இணைப்பாட்டத்தைப் பெற்றுக்கொண்டது. எனினும், நஸிர் ஹொசைனின் பந்துவீச்சில் 26 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் லீவிஸ் ஆட்டமிழக்க, 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட சங்கக்கார லயம் பிளென்கட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய மொசாதிக் ஹொசைன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் சகிப் அல் ஹசன் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அது போன்றே, மத்திய வரிசையில் கைகொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேற்கிந்திய தீவுகளின் மற்றுமொரு அதிரடி ஆட்டக்காரரான கிரென் பொல்லார்ட், 11 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், அபுல் ஹசனின் பந்துவீச்சில் பிடியெடுப்பின் மூலம் ஆட்டமிழந்தார். இதனால் போட்டியில் 15 ஓவர்கள் நிறைவடைய முன்னர் 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து டாக்கா அணி மிகவும் இக்கட்டான நிலைக்கு ஆளானது.

தொடர்ந்து சில்லெட் அணியின் அதிரடிப் பந்துவீச்சினால் ஓட்டங்கள் சேர்க்க தடுமாறிய டாக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 136  ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

டாக்கா டைனமைட்ஸ் அணி சார்பாக குமார் சங்கக்கார அதிகபட்சமாக 32 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில் டாக்கா அணியினை மிரட்டிய சில்லெட் அணியின் நஸிர் ஹொசைன், லயம் பிளென்கமட் மற்றும் அபுல் ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.  

BPL தொடரில் முதற்தடவையாக களமிறங்கவுள்ள மாலிங்க

ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) டி20 தொடரில், இலங்கை அணியின் நட்சத்திர…

பின்னர் 137 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய சில்லெட் சிக்ஸர்ஸ்  அணி, 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 137 ஓட்டங்களுடன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

சில்லெட் அணியின் துடுப்பாட்டத்தில், அவ்வணியினை வெற்றிப்பாதையில் வழிநடாத்திய இலங்கை வீரர் உபுல் தரங்க மொத்தமாக 48 பந்துகளில் 5 பௌண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 69 ஓட்டங்களினைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். அதோடு, மேற்கிந்திய தீவுகளின் அட்ன்ரு பிளெட்சர் 63 ஓட்டங்களுடன் அணிக்கு வலுச்சேர்த்திருந்தார்.

டாக்கா அணியின் பந்துவீச்சில் ஆடில் ரஷீட், ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிறப்பான துடுப்பாட்டத்திற்காக உபுல் தரங்கவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

டாக்கா டைனமைட்ஸ்  136 /10 (20) குமார் சங்கக்கார 32(28), எவின் லீவிஸ் 26(24), சகிப் அல் ஹசன் 21(23), நஸிர் ஹொசைன் 21/2, லயன் பிளென்கட் 20/2, அபுல் ஹசன் 24/2

சில்லெட் சிக்ஸர்ஸ்  137/1 (16.5) உபுல் தரங்க 69(48), அன்ட்ரு பிளெட்சர் 63(51), ஆடில் ரஷPத் 31/1

போட்டி முடிவு – சில்லெட் சிக்ஸர்ஸ் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி