பொன் அணிகளின் சமர் T20யில் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு இலகு வெற்றி!

03rd Battle of the Golds T20 2023

373

யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்றுமுடிந்த 3வது பொன் அணிகளின் சமர் T20 போட்டியில் 09 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றிபெற்றது.

தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து களமிறங்கியது.

தீர்மானமிக்க டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு இலங்கை என்ன செய்யும்?

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரிக்கு ஆரம்பம் முதல் எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் சிறந்த ஓட்ட எண்ணிக்கையொன்றுக்கு செல்வதை உறுதிப்படுத்தவில்லை.

சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுக்கத்தொடங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி 19.5 ஓவர்கள் வரை துடுப்பெடுத்தாடியிருந்த போதும், வெறும் 86 ஓட்டங்களுக்கு தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

யாழ்ப்பாணக் கல்லூரிக்காக பாபு பிருந்தன் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் சிவனேசசிங்கம் சமிந்தன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணியை மயூரன் சௌத்ஜன் தனியாளாக வெற்றிக்கு அழைத்துச்சென்று ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார்.

மயூரன் சௌத்ஜன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 69 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 10.2 ஓவர்கள் நிறைவில் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றியை தமதாக்கிக்கொண்டது.

எனவே, இம்முறை நடைபெற்ற பொன் அணிகளின் சமரின் இரண்டு நாட்கள் கொண்ட போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் T20 போட்டி என அனைத்தையும் புனித பத்திரிசியார் கல்லூரி தம்வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

யாழ்ப்பாணக் கல்லூரி – 86/10 (19.5), பிருந்தன் 25, சமிந்தன் 2/08

புனித பத்திரிசியார் கல்லூரி – 87/1 (10.2), சௌத்ஜன் 69*, மதுசன் 1/19

முடிவு – புனித பத்திரிசியார் கல்லூரி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<