“வடக்கின் கில்லாடி யார்” இறுதிச்சுற்று மோதல்கள் வெள்ளிக்கிழமை ஆரம்பம்

290

“வடக்கின் கில்லாடி யார்?” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நாளை (27) முதல் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெறவிருக்கின்றது.

தொடரின் இறுதிச் சுற்று ஆட்டங்களை முன்னிட்டு ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பில் சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர் ஹெரிசாந்த், செயலாளர் கவிந்தன், யாழ்ப்பாண உதைப்பந்தாட்ட லீக்கினுடைய தலைவர் ஆர்னோல்ட், செயலாளர் அஜித்குமார், இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவர் அன்ரனிப்பிள்ளை, இறுதிச் சுற்றில் பங்குபற்றும் அணிகளது தலைவர்கள் முகாமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

றேஞ்சர்ஸை வீழ்த்தி “வடக்கின் கில்லாடி யார்?” காலிறுதிக்குள் நுழைந்தது உதயதாரகை

யாழ் உதைப்பந்தாட்ட லீக்கினது தலைவர் ஆர்னோல்ட் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் “அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்துவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது லீக்கினால் விஷேட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முதலாவது வருடம் முதல் போட்டிகளை சிறப்பாக ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றனர். இம்முறை வட மாகாண ரீதியிலான தொடர் சிறப்பாக இடம்பெற எனது வாழ்த்துக்கள்!“ என தெரிவித்தார்.

வருடாந்தம் கூடைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்து கிரிக்கெட் என பல விளையாட்டுப் போட்டிகளை சரஸ்வதி சன சமூக நிலையத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.

சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் “வடக்கின் கில்லாடி யார்?” உதைப்பந்தாட்ட தொடருக்கு வட மாகாணத்தின் 32 அணிகள் உள்வாங்கப்பட்டிருந்தன. 32 அணிகளுள் விலகல் முறையில் இடம்பெற்ற முதலிரு சுற்றுக்களின் நிறைவில், யாழ் லீக்கின் மூன்று அணிகள், கிளிநொச்சி லீக்கின் இரண்டு அணிகள், வலிகாமம், வடமராட்சி மற்றும் தீவக லீக்குகளின் தலா ஒரு அணி என 08 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

இந்த தோடரில் பல முன்னணி அணிகள் அதிர்ச்சி தோல்விகளை சந்திக்க, வளர்ந்து வரும் அணிகள் அவ்வணிகளது இடங்களை தட்டிப்பறித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருட”யாழின் கில்லாடி யார்?” தொடரில் அரையிறுதியில் மோதியிருந்த யாழின் பகழ்பூத்த மூன்று அணிகளுடன், இந்த இளம் அணியினர் மின்னொளியின் கீழான மோதலிற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்

இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் (வலிகாமம்), குருநகர் பாடும்மீன் (யாழ்), கிளிநொச்சி உருத்திரபுரம் (கிளிநொச்சி), நவின்டில் கலைமதி (வடமராட்சி), கிளிநொச்சி உதயதாரகை (கிளிநொச்சி), அச்செளு வளர்மதி (யாழ்), ஊரெழு றோயல் (யாழ்), மெலிஞ்சிமுனை இருதயராசா (தீவகம்)

FA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

இறுதிச் சுற்றுப் போட்டிகளின் நேர அட்டவணை

  • முதலாவது காலிறுதிப் போட்டி

அச்செளு வளர்மதி வி.க எதிர் இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் வி.க – 28/09

  • இரண்டாவது காலிறுதிப் போட்டி

கிளிநொச்சி உருத்திரபுரம் வி.க எதிர் கிளிநொச்சி உதயதாரகை வி.க – 30/09

  • மூன்றாவது காலிறுதிப் போட்டி  

மெலிஞ்சிமுனை இருதயராஜா வி.க எதிர் குருநகர் பாடும்மீன் வி.க – 27/09

  • நான்காவது காலிறுதிப் போட்டி

நவிண்டில் கலைமதி வி.க எதிர் ஊரெளு றோயல் வி.க – 29/09

  • முதலாவது அரையிறுதிப் போட்டி – 2/10

  • இரண்டாவது அரையிறுதிப் போட்டி – 4/10

  • மூன்றாம் இடத்திற்கான போட்டி – 6/10

  • இறுதிப் போட்டி – 7/10

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க